Published:Updated:

``பாத்திரம் கொண்டுவந்தா 4 முட்டை இலவசம்" - பாலித்தீன் பைகளைக் குறைக்க 15 ஆண்டு முயற்சி

மதுரையில் உள்ள கறிக்கடைக்காரர் ஒருவர் பாத்திரங்களில் கறி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முட்டை வழங்கி பிளாஸ்டிக் கெடுதலைப் பற்றி விழிப்புஉணர்வு செய்து அசத்திவருகிறார்.

``பாத்திரம் கொண்டுவந்தா 4 முட்டை இலவசம்" - பாலித்தீன் பைகளைக் குறைக்க 15 ஆண்டு முயற்சி
``பாத்திரம் கொண்டுவந்தா 4 முட்டை இலவசம்" - பாலித்தீன் பைகளைக் குறைக்க 15 ஆண்டு முயற்சி

பிளாஸ்டிக் பயன்பாடு என்பது உலகமெங்கும் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. மக்களின் அன்றாட வாழ்விலிருந்து பிளாஸ்டிக் குப்பைகளைப் பிரித்தெடுக்க முடியாமல் ஒவ்வொரு நாடும் திணறி வருகிறது. நாம் தினமும் தூக்கியெறியும் பிளாஸ்டிக் குப்பைகள் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்றன. முக்கியமாக உயிரினங்கள் உட்கொள்ளும் உணவில் ஏதோ ஒரு வடிவில் பிளாஸ்டிக் கலக்கும்போது, பல்வேறு நோய்களுக்கான அடித்தளமாக அவை அமைந்துவிடுகின்றன. இதைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டாலும், தனிமனிதனின் சோம்பேறித்தனத்தால் இதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு நம்மை நாமே தள்ளிகொண்டுவிட்டோம். இந்நிலையில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் போன்றவற்றுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் முன்பே சுமார் 15 ஆண்டுகளாக பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்கும் வாடிக்கையாளர்களுக்குச் சலுகைகள் வழங்கி வருகிறார் மதுரையைச் சேர்ந்த கறிக்கடை உரிமையாளர் பா.சின்மயானந்தம்.

மதுரை அண்ணா நகர், பெரியார் தெருவில் உள்ளது லெட்சுமி கறிக்கடை. பளபளப்பான பச்சை இலையிலும், சில்வர் பாத்திரங்களிலும் கோழிக்கறியை வாடிக்கையாளர்களுக்குக் கட்டிக்கொடுத்து இலவசமாக முட்டைகளை அள்ளிக்கொடுத்துக்கொண்டிருந்தார் கடையின் உரிமையாளர் சின்மயானந்தம். வாடிக்கையாளர்களைக் கவனித்தபின்பு நம்மிடம் பேசினார், ``சின்ன வயதிலிருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். இதனால் சுற்றுச்சூழல் பற்றி விழிப்பு உணர்வு ஏற்பட்டது. என் குடும்பத்துக்கு ஆரம்பத்திலிருந்தே கோழிப்பண்ணைதான் பிரதான தொழில். அதிலிருந்து பிரிந்துதான் கறிக்கடை வைத்துள்ளேன். 20 ஆண்டுகளுக்கு மேல் கறி வியாபாரம்தான் செய்கிறேன். பிளாஸ்டிக் பற்றிய தீமைகள் பற்றித் தெரிந்ததால் வீட்டிலும் சரி, கடையிலும் சரி பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க ஆரம்பித்தேன். வாடிக்கையாளர்களிடம் இதன் முக்கியத்துவத்தைத் தெரியப்படுத்த பல்வேறு சலுகைகள் வழங்கினேன்.

பாத்திரம் கொண்டுவருபவர்களுக்குக் கறி விலை குறைவாகவும், இலவசமாக முட்டையும் வழங்கப்படும் எனத் தெரிவித்து வியாபாரம் செய்துவருகிறேன். அரசு அறிவுறுத்தும் முன்னரே 15 ஆண்டுகளுக்கு மேல் பாத்திரங்களில் கறிகளை வழங்கி அவர்களுக்கு முட்டையும் வழங்கி ஊக்கப்படுத்துகிறேன். லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் இது போன்ற சமூக மாற்றுப்பணியைச் செய்கிறேன். தற்போது பாத்திரத்தில் கறி வாங்கும் நபர்களுக்குக் கிலோவுக்கு 4 முட்டை வழங்குகிறேன். இதனால் வாடிக்கையாளர் ஆர்வத்தோடு கறி வாங்கிச் செல்கின்றனர். பிளாஸ்டிக் தவிர்க்கும் வகையில் வியாபாரம் செய்வதால் இதைப் பாராட்டி சுற்றுச்சூழல் மையம் 2010-ல் விருது வழங்கி ஊக்கப்படுத்தியது. கடைக்குச் சிலரால் பாத்திரங்கள் கொண்டுவர முடியாது அவர்களுக்கு மட்டும் பை வழங்குகிறேன் அது முற்றிலும் மக்கும் பை. மக்கா சோளத்திலிருந்து செய்யப்பட்ட பையாகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகள் இருக்காது. தேவைப்பட்டால் தூக்குவாளி, டிபன் பாக்ஸ்களும் வழங்குகிறோம். அதற்கு டெபாசிட் பணமாக 40 ரூபாய் பெற்றுக்கொள்கிறோம். அடுத்த முறை கடைக்கு வரும்போது பாத்திரத்தைக் கொடுத்துவிட்டு பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் எனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குப் புத்தகங்கள், செய்தித்தாள்கள் போன்றவையும் வைத்துள்ளேன். வாழ்க்கைக்குத் தேவையான நீதிபோதனை கருத்துகளையும் கடையில் வைத்துள்ளேன். இதற்கு என் மனைவியும், என் குழந்தைகளும் உதவி செய்கின்றனர். என்னால் முடிந்த அளவு சமுதாயத்துக்குத் தொடர்ந்து ஆரோக்கியமான விஷயங்களை எடுத்துச்செல்வேன்!" என்றார்.

சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளை தடைசெய்யக்கோரிப் பல ஆண்டுகளாகப் பல சமூக அமைப்புகளும் போராடி வருகின்றன. தமிழக அரசும் ஜனவரி 2019 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் சத்தமில்லாமல் ஒருவர் 15 ஆண்டுகளாகத் தனது பகுதியில் உள்ள மக்களுக்கு பிளாஸ்டிக் பைகள் பற்றி விழிப்புஉணர்வு அளித்துவருகிறார்.