Published:Updated:

காந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்

காந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்
பிரீமியம் ஸ்டோரி
News
காந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்

எஸ்.வி.ராஜதுரை, ஓவியம் : ஹாசிப்கான்

வீன இந்திய வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் துக்க நாள், 30.1.1948. காந்தி கொலைசெய்யப்பட்ட செய்தியை அறிந்தவுடனேயே இந்தியா முழுவதும் பதறியது - ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் வேறு சில தீவிரவாத இந்து அமைப்புகளும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிய போதிலும். அவர் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் கொலையாளியின் அடையாளமும் பின்னணியும் சந்தேகத்துக்கிடமின்றி முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்திற்கு அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, அனைத்திந்திய வானொலி நிலையமோ  அன்றிரவு ஏழரை மணிக்கு ஒலிபரப்பிய செய்தியில், “காந்தியைச் சுட்டவன், அநேககமாக ஓர் இந்துவாக இருக்குமென்று நம்பப்படுகிறது” என்று கூறியது. இப்படிப்பட்ட செய்தி அறிவிப்பு, ‘ஒரு முஸ்லிம்தான் இந்துவாக வேடம்  போட்டிருக்க வேண்டும்’ என்று பலராலும் புரிந்துகொள்ளப்பட வழிசெய்ததால், அன்றைய சென்னை மாகாணத்தில் சில இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள்  நடக்கத் தொடங்கின. பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டிலும்கூட ஏராளமான முஸ்லிம்கள் தாக்கப்பட்டு, அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டன. உள்ளூர்ப் பிரமுகர்களும் நேர்மையும் கடமையும் தவறாத காவல்துறை அதிகாரிகளும் மேற்கொண்ட முயற்சிகளின் காரணமாக அங்கு வகுப்புக் கலவரம் மூள்வது தடுக்கப்பட்டது.

காந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்

காந்தியைக் கொன்ற கோட்ஸே, ‘சித்பவன் பார்ப்பனர்’ என்பது தெரிந்தவுடனேயே, மகாராஷ்ட்ராவின் கொங்கன் பகுதியில் பார்ப்பனர்கள்மீது தாக்குதல் தொடங்கியது. இத்தகைய வன்முறை நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் நடக்காமல் செய்யப்பட்டதற்கு பெரியார் 31.1.1948-ல் திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரை முக்கியக் காரணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்

காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும், பெரியார் விடுத்த முதல் அறிக்கை கூறியது: ‘காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தியானது, எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாகவே இருந்தது. இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும் மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறி இருக்கும். மதமும் வைதீகமும் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாக இருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் சதி முயற்சி இருந்தே இருக்க வேண்டும். அது காந்தியார் எந்த மக்களுக்கு ஆகப் பாடுபட்டாரோ – உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதி செயல் ஏற்பட்டிருக்க வேண்டும். இது மிக மிக வெறுக்கத்தக்க காரியமாகும். இவரது காலி ஸ்தானம் எப்படிப் பூர்த்தி செய்யப்படும் என்பது ஒரு மாபெரும் பிரச்சினையே ஆகும். இப்பெரியாரின் இப்பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல் மத இயல் கருத்து வேற்றுமையும் கலவரங்களும் இல்லாமல் மக்கள் நடந்து கொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்’ (குடி அரசு, 31.1.1948).

பெரியார் விடுத்த இரண்டாவது அறிக்கை கூறியது: ‘பெரியார் காந்தியவர்களின் விசனிக்கத்தக்க திடீர் மறைவு என்னைத் திடுக்கிடவைத்தது. இந்திய மக்களனைவரையுமே இந்நிகழ்ச்சி திடுக்கிட வைத்திருக்குமென உறுதியாக நம்புகிறேன். கடந்த கால் நூற்றாண்டுக்கு மேலாகவே, தோழர் காந்தியார் இப்பரந்த உபகண்ட மக்களின் எதிர்கால வாழ்வுக்கு வழிகாட்டியாயிருந்து வந்தார். மக்களுக்கு அவரது தொண்டு மகத்தானது. அவரது லட்சியக் கோட்பாடுகள் உலக மரியாதையினை யேற்றுவிட்டன. காந்தியார்மீது நடத்தியிருக்கும் மோசமான தாக்குதல் கண்டனத்துக்குரியதாகும். பலதிறப்பட்ட எல்லா வகுப்பு மக்களுக்கும் நியாயமாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடந்துகொண்ட காந்தியார், இக்கொடுந் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறாரென்றால், இது மிகவும் வெறுக்கத்தக்கதாகும். இக்கொலையாளியை ஆட்டிப்படைக்கும் சதிக்கூட்டமொன்று திரை மறைவில் வேலைசெய்து வர வேண்டும். வட இந்தியாவில் நடைபெற்றுவரும் காரியங்களுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாயிருப்பது மதவெறியாகும். காந்தியாரின் இடத்தை நிறைவுசெய்பவர் இந்நாட்டில் எவருமே இல்லை. மக்கள் தங்கள் அரசியல், மத வேறுபாடுகளை மறந்து, சகோதர பாவத்துடன் நடந்துகொள்வதே நாம் காந்தியாருக்குச் செய்யும் மரியாதையாகும். தென்னாட்டுத் திராவிடர்கள் இயல்பாகவே நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலைக்க வைப்பர்” (குடி அரசு, 7.2.1948).

காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ‘குடி அரசு’ அலுவலகத்தில் 2.2.1948 அன்று நடத்தப் பட்டதுடன், அந்த அலுவலகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது. (குடி அரசு, 7.2.1948).

திராவிடர் கழகத்தின் சார்பில் எல்லா ஊர்களிலும் 29.2.1948 அன்று காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பெரியார் விடுத்த அறிக்கை (குடி அரசு, 21.2.1948), அவற்றுக்கான விதிமுறைகளையும் வகுத்தது:

‘காந்தியார் அவர்கள் இயற்கைக்கு விரோதமாக மரணமாக்கப்பட்டதைக் குறித்து அநுதாபப்படவும் கொலைச் சம்பவத்தைக் கண்டிக்கவும் திராவிடர் கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஊரிலும் திராவிடர் கழகத்தார் அநுதாபம்– கண்டனக் கூட்டம் 29.2.1948 ஞாயிற்றுக்கிழமையன்று  ஏற்பாடு செய்ய வேண்டியது. கூட்டத்திற்கு ஆடம்பரம் கூடாது. செலவு கூடாது. ஒலி பெருக்கி கூடாது. சொற்பொழிவு கூடாது. தலைவர் அல்லது அவரால் அழைக்கப்பட்டவர் பின்வரும் தீர்மானத்தைப் படித்ததும், பொதுமக்கள் எழுந்து நின்று ஒரு நிமிஷம் மவுனமாக இருந்ததும் மிக அமைதியாகப் பிரிந்துவிட வேண்டியது :-

காந்தியார் மறைவுக்கு அநுதாபத் தீர்மானம்: ‘சென்னை மாகாணத்தில் உள்ள திராவிடர் கழகத்தின் கிளை ஸ்தாபனமாமாகிய …….. ஜில்லா….... ஊர் ……... திராவிடர் கழகத்தார் சார்பில் கூட்டப்பட்டதும் திராவிடர் கழகத்தவர்கள் பெரிதும் கூடி உள்ளதுமான இக்கூட்டமானது, உலக மக்களால் போற்றப்பட்டவரும் இந்திய தேசியக் காங்கிரஸ் நடப்புக்கு மூலகாரணமாயிருந்து அதை நடத்திவந்த முக்கியத் தலைவரும், சத்தியம், அன்பு, ஒற்றுமை முதலிய உயர் குணங்களை சதா சர்வகாலம் மக்களுக்குப் போதித்து வந்த உத்தமரும் ஆன ஒப்பற்ற பெரியார் காந்தியார் அவர்கள் இயற்கைக்கு மாறான தன்மையில் மரணமடைந்தது குறித்துத் தனது ஆழ்ந்த துக்கத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இம்மரணத்துக்குக் காரணமாக இருந்த கொலை பாதகனையும் அவனுக்குப் பின்னால் ஆதரவாகவும், நடத்துபவர்களாகவும் இருந்த ஸ்தாபனங்களையும், மக்களையும் வெறுப்புக்காட்டிக் கண்டிக்கிறது. இந்த பரிதாபகரமான நிகழ்ச்சியின் விளைவைப் படிப்பினையாகக்கொண்டு இந்நாட்டு மக்கள் யாவரும் சாதி, மத, இன வேறுபாடு காரணமாய் வேற்றுமை உணர்ச்சி இல்லாமல் ஒன்றுபட்டு வாழ்வோமாக!

அன்பும், அறிவும், சத்தியமும் என்றும் எங்கும் நிகழ்வதாகுக. அவையே யாவாற்றிலும் வெற்றி பெறுவதாகுக. இத்தீர்மானத்தை மத்திய நிலையத்துக்கும், காந்தியார் மகன் தோழர் தேவதாஸ் காந்திக்கும், பண்டித ஜவகர்லால் நேரு அவர்களுக்கும் அனுப்ப வேண்டியது.செய்தியை எல்லாப் பத்திரிகைளுக்கும் அனுப்பவும்.’

காந்தியின் மறைவும், பெரியார் இயக்கமும்

பாதுகாப்புக்கான தக்க ஏற்பாடுகள் செய்யத் தவறியதற்குமான பொறுப்பு அன்று இந்திய உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கே உரியது என்று ஜெயபிரகாஷ் நாராயணன் கூறியதைச் சுட்டிக்காட்டிய ‘குடி அரசு’, ‘காந்தி பலியாக்கப்பட்டதன் காரணமாய், இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மமுறை, அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது, வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்திய சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக் கூடாது, இவை ஒழியும்படியாக அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும் என்று சுயராஜ்ய சர்க்கார் பேரால் ஏற்பாடு செய்வார்களேயானால் இந்த நாட்டைப் பிடித்த எந்தவிதமான கேடும் ஒரே அடியாய் தீர்ந்துவிடும்” என்றும், ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபை போன்றவற்றைத் தடைசெய்வது மட்டும் போதாது என்றும் கூறியது (‘காந்தியார் முடிவு’, குடி அரசு, 7.2.1948).

காந்தியின் அஸ்தியைக் கரைப்பதற்கு மத்திய அரசாங்கமே செய்த ஏற்பாடுகளைப் பற்றி ‘குடி அரசு’ ஏட்டில் வெளிவந்த இன்னொரு தலையங்கம் கூறியது:

 ‘(காந்தியார்) மத இயலில், மதத்துக்கு மதம் வேறுபாடில்லை என்றும், மத முடிவுகள் எல்லாம் ஒன்றுதான் என்றும் வற்புறுத்தியவர். கடவுள் இயலில், கடவுள் ஒன்றுதான் என்றும் அந்த ஒன்றைத்தான் பலரும் பலவாறு கூறிப் போனார்கள் என்றும், ஆனால் எல்லாவற்றையும் ஒன்றாகவேதான் நான் மதிக்கிறேன் என்றும் விளக்கிக் கூறி, கடவுள் வழிபாட்டிற்காக அமைந்த கோவில்களை ‘விபசார விடுதிகள்’ என்று கூறி, அங்குத் தரகனோ, அந்தக் கடவுளுக்குப் பால், பழம், சோறோ வேண்டியதில்லை; திறந்த வெளியே போதும் என்றவர். அதாவது, விக்கிரக ஆராதனை கூடாது, பிரார்த்தனையே போதும் என்று வற்புறுத்தியவர். சமுதாய இயலில், ஒருவரை ஒருவர் சுரண்டுதல் கூடாது; பரம்பரையாக ஒருவர் உறிஞ்சிப் பிழைக்கவும், அதற்காக மற்றொருவர் நைந்து வாழ்க்கை கசந்து வாழவும், அதற்காக ஒரு கூட்டம் ஒடுக்கப்பட்டவர்களாய்– தாழ்த்தப்பட்டவர்களாய் இருந்து வருவது ஈனம் என்றும், இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே நாட்டினர் என்றும் வற்புறுத்தியவர். அவர் மறைந்த பதினாறாம் நாளில், அவருடைய சாம்பல்களை எல்லாம் இந்த நாட்டின் ‘புண்ணிய’ நதிகளில் கரைத்துவிடப்பட்ட ஒரு சடங்கையும், அதைப் பக்தி விசுவாசமாகப் பலர் தரிசித்துச் சென்றனர் என்ற விளம்பரச் செய்திகளையும், அதை ஆங்காங்கே உள்ளவர்கள் அவை கொண்டுபோகப் பட்டபோதும், கரைத்தபோதும் ஏராளமாகக் கண்டு வணங்கிச் சென்றனர் என்ற செய்திகளைப் பார்க்கும்போதும் பெரிதும் வருத்தமடைகின்றோம். காந்தியாரின் படுகொலை விளைவித்த வருத்தத்தைக் காட்டிலும், அவருடைய முடிவு இந்தப்படி சித்திரவதை செய்யப்படுவது – நமக்கு மட்டுமல்ல, பகுத்தறிவுடைய எவருக்கும் அதிக வருத்தத்தையே உண்டுபண்ணும் எனலாம்” (‘காந்தியார் முடிவிற்குப் பின்’, குடி அரசு, 14.2.1948).

காந்தியின் மறைவையொட்டி, இந்தியாவின் சில பகுதிகளில் நடந்தவற்றைப் போன்ற கலவரங்கள் ஏதும் தமிழகத்தில் நடக்காமல் இருந்ததற்கு முக்கியப் பங்களிப்பு செய்த, பெரியார்மீதும் திராவிடர் கழகத்தின்மீதும் தேசியப் பத்திரிகைகள் எனக் கூறிக்கொண்ட சில ஏடுகள், தொடர்ந்து ‘வகுப்பு துவேஷக்’ குற்றச்சாட்டைக் கூறி வந்ததால், காந்தி இறந்த 32 நாள்களுக்குப் பிறகு, திராவிடர் கழகத்தின் ‘கருஞ்சட்டைப் படை’ (இது ஆர்.எஸ்.எஸ்.போல ஆயுதப் பயிற்சியளிக்கும் அமைப்பு அல்ல) சென்னை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டதும் தமிழகம் முழுவதிலுமுள்ள திராவிடர் கழக அலுவலகங்களிலும் கழக உறுப்பினர்களின் வீடுகளிலும் காவல் துறையினர் திடீர் சோதனைகளில் ஈடுபட்டதும் வரலாற்று முரண்.

இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதற்குச் சில வாரங்களுக்குப் பின், தூத்துக்குடியில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பெரியார், முதலில் எடுத்துக்கொண்ட விஷயம் காந்தி கொலைதான். அந்தக் கொலைக்கான காரணத்தை பெரியார் விளக்கினார்: ‘சூத்திரனுக்கு தபஸ் செய்யும் உரிமை இல்லை என்று கூறி அவனைக் கொல்லும்படி இராமனுக்கு உத்திரவிட்ட அதே சக்திகள்தாம் இப்போது காந்தியைக் கொன்றுவிட்டன. ‘காந்தியார் சம்புகன் இனத்தாராகவும், கொன்றவன் இராமன் இனத்தானாகவும்’ இருந்ததுதான் இக்கொலைக்குக் காரணமே ஒழிய – மற்றபடி தனிப்பட்ட மக்கள் மீதோ, தனிப்பட்ட குணங்கள் மீதோ குறை கூறுவது பொருத்தமற்றதாகும்’ (குடி அரசு, 15.5.1948).

காந்தியாருக்கு நினைவுச் சின்னங்கள் அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் முதல் பிரபல பத்திரிகைகள் வரை பலரும் பலவித ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, பெரியாரும் தம் பங்குக்குச் சில ஆலோசனைகளை அனைந்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி, ஜவகர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார், பட்டேல், ராஜேந்திர பிரசாத், ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோருக்கு அனுப்பினார்.  இந்தியாவுக்கு ‘காந்தி தேசம்’ அல்லது ‘காந்திஸ்தான்’ என்று பெயரிடலாம் என்பது அந்த ஆலோசனைகளில் ஒன்று! (குடி அரசு, 14.2.1948).