Published:Updated:

`90 டு 60 கிலோ எடை குறைப்பு..!’ - `Mrs இந்தியா யுனிவர்ஸ் குளோப்’ சம்யுக்தாவின் சக்சஸ் சீக்ரெட்

`90 டு 60 கிலோ எடை குறைப்பு..!’ - `Mrs இந்தியா யுனிவர்ஸ் குளோப்’ சம்யுக்தாவின் சக்சஸ் சீக்ரெட்
`90 டு 60 கிலோ எடை குறைப்பு..!’ - `Mrs இந்தியா யுனிவர்ஸ் குளோப்’ சம்யுக்தாவின் சக்சஸ் சீக்ரெட்

`திருமணம்தான் நம்ம சுதந்திரத்துக்கு எண்டு கார்டு' என்று பலரும் புலம்பிக்கொண்டிருக்கும்போது, சர்வதேச திருமதி அழகிப் போட்டிக்குத் தேர்வாகி, பல தமிழ்நாட்டுப் பெண்களுக்கு ரோல்மாடலாகியிருக்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த சம்யுக்தா பிரேம். இந்த ஆண்டு நடைபெற்ற தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று, `Mrs India Universe Globe' பட்டதைத் தட்டிச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச திருமதி அழகிப் போட்டியில் பங்குபெற்ற ஒரே தமிழ்ப் பெண்ணான சம்யுக்தாவிடம் சிறு உரையாடல்.

``எதனால இந்தப் போட்டியில கலந்துக்க நினைச்சீங்க?"

``நான் படிச்சதெல்லாம் ஃபேஷன் சம்பந்தமான படிப்புதான். படிச்சு முடிச்சு, லண்டனில் சர்வதேச பிராண்டான `பிராடா'வோடு இணைந்து வேலை செஞ்சேன். அதுக்கு அப்புறம் கல்யாணமாகி இல்லத்தரசியாத்தான் இருந்தேன். ஏற்கெனவே ஃபேஷன் ஃபீல்டுல இருந்தப்போ அழகிப் போட்டிகள்ல பங்கேற்க ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா, அப்போ அதற்கான வேலைகள்ல நான் தீவிரமா இல்லை. அந்த ஆசையை என் கணவரிடம் சொன்னபோது, `இப்போ வரப்போற திருமதி போட்டியில அவசியம் நீ கலந்துக்கணும்'னு ஊக்கப்படுத்தினாரு. அவரோட சப்போர்ட் இல்லாம நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. இதுமாதிரி சப்போர்ட் கிடைச்சுதுன்னா நிறைய பெண்கள் அவங்களோட கனவுகளை நனவாக்க முடியும்."

``இல்லத்தரசியா இந்த மாதிரி போட்டிகள்ல கலந்துகொள்வதில் இருக்கும் சவால்கள் என்னென்ன?"

``இதுல மிகப்பெரிய சவாலே உடல் எடைதான். திருமணமாகிட்டா உடல் எடை கூடும். ஆனா, இதுபோல போட்டிகளுக்குக் கட்டுக்கோப்பான உடலமைப்பு ரொம்பவே அவசியம். நான் திருமணத்துக்குப் பிறகு 90 கிலோ இருந்தேன். கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் பழக்கத்தால இப்போ 60 கிலோ இருக்கேன். ஸ்ட்ரிக்ட்டான பிளான் இல்லைன்னா இப்படி குறைச்சிருக்கவே முடியாது. என்னோட passion மேல நான் வெச்சிருந்த அன்புகூட இதுக்கு ஒரு காரணம். அப்புறம் குடும்பத்தாரின் ஆதரவு ரொம்பவே முக்கியம். அவங்களோட ஊக்குவிப்பு இல்லைன்னாலும் ரொம்பவே கஷ்டம். அந்த வகைலயும் நான் ரொம்ப லக்கி. என் கணவர், அம்மா, அப்பா எல்லோருக்கும் நன்றி!"

``இந்த ஃபேஷன் பயணத்தில் நீங்க கத்துக்கிட்ட விஷயங்கள் என்னென்ன?"

``என் வாழ்நாள் முழுக்க இந்தப் பயணத்தை மறக்கவே முடியாது. புதுப்புது விஷயங்கள் நிறைய கத்துக்கிட்டேன். வெவ்வேறு கலாசாரத்திலிருந்து வந்தவர்களைச் சந்திக்க நல்ல வாய்ப்பா இருந்துச்சு. சைக்காலஜிஸ்ட், ஸ்டைலிஸ்ட், Choreographers-னு நிறைய சாதித்த மனிதர்களைச் சந்திச்சது ரொம்ப நல்ல அனுபவமா இருந்துச்சு. வேலைகளைப் பார்த்துட்டு, குடும்பத்தையும் எப்படிக் கவனிச்சுக்கிறது, நம்ம உடம்பை எப்படி ஆரோக்கியமா வெச்சுக்கிறதுனு வாழ்க்கையை மேம்படுத்துற வழிமுறைகளையும் சொல்லிக்கொடுத்தாங்க. மொத்தத்துல கலர்ஃபுல்லா மட்டுமல்லாம பயனுள்ள நாள்களாவும் இந்தப் பயணம் எனக்கு இருந்துச்சு."

``ஃபேஷன் உலகில், தமிழ்ப் பெண்கள் எப்படி ஏற்கப்படுகிறார்கள்?"

``ஃபேஷன் இண்டஸ்ட்ரினாலே தமிழ்ப் பெண்களுக்கு ஆகாது. அதுவும் திருமணமான பெண்கள் நினைச்சுக்கூட பார்க்கக் கூடாதுனு நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அதுபோல எந்த ஒரு பாகுபாடும் யாரும் பார்க்கிறதில்லை. அங்க இருக்கும் மக்கள் எல்லோருமே ரொம்ப ஃப்ரெண்ட்லி. நாம எப்படிப் பழகுறோமோ அதைப்பொறுத்துதான் மத்தவங்க நம்மகிட்ட பழகுறதும் இருக்கும். நம்மமேல நம்பிக்கை வெச்சு, நாம கான்ஃபிடென்ட்டா இருந்தா, நமக்குமேல இங்க யாரும் இல்லை."

``உங்களோட இன்ஸ்பிரேஷன் யார்?"

``2016-ம் ஆண்டு, `Mrs.India Earth' பட்டம் பெற்ற டாக்டர்.ஜெயா மகேஷ். அவங்களும் கோயம்புத்தூர் பொண்ணுதான்."

``உங்கள் லட்சியம்?"

``ஏற்கெனவே பெண் குழந்தைகளின் படிப்புக்காகத் தொண்டுப் பணியில் இருக்கேன். சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்றால், அதையே கொஞ்சம் பெரிய அளவில் என்னால் செய்ய முடியும்."