Published:Updated:

``இனிமேல் எல்லாம் இப்படித்தான்!" - சுரங்கத்தில் கார் ஓட்டிக்காட்டிய எலான் மஸ்க்

``இனிமேல் எல்லாம் இப்படித்தான்!" - சுரங்கத்தில் கார் ஓட்டிக்காட்டிய எலான் மஸ்க்
``இனிமேல் எல்லாம் இப்படித்தான்!" - சுரங்கத்தில் கார் ஓட்டிக்காட்டிய எலான் மஸ்க்

நிலத்துக்கு அடியில் கார்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதை. முன்னால் எந்தத் தடையும் கிடையாது, ஏறி உட்கார்ந்து ஆக்ஸிலேட்டரை மிதிக்க வேண்டியதுதான்.

ன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள நகரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் போக்குவரத்து நெரிசலும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை ஏற்கெனவே இருக்கும் சாலையில் பழைய வாகனங்களோடு இணைந்து கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அனைத்து வாகனங்களும் சாலைக்கு வரும் போது நெரிசல் உருவாவதைத் தவிர்க்க முடிவதில்லை. அதுவும் முறையாகத் திட்டமிடப்படாமல் அமைந்த நகரங்களில் சாலையை விரிவாக்கம் செய்வது சாத்தியமில்லாத ஒன்று. இதற்கு மாற்றாக முன்வைக்கப்படுபவற்றில் பொதுப்போக்குவரத்தே முதன்மையானதாக இருக்கிறது. ஆனால், அதில் இருக்கும் சிக்கல்களால் தனிப்பட்ட வாகனங்களையே பலரும் விரும்புகின்றனர். எதுவாக இருந்தாலும் எதிர்காலத்தில் வெறும் சாலை வழிப் போக்குவரத்து மட்டுமே மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது. 

சாலைப் போக்குவரத்துக்கு மாற்றாக வேறு வழிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் உலகம் முழுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்கால போக்குவரத்துக்கான யோசனைகளை வழங்குவதில் உலக அளவில் முன்னோடியாக இருக்கிறார் எலான் மஸ்க். நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிவேகத்தில் பயணிக்கக் கூடிய ஹைப்பர் லூப் என்ற திட்டம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது அதைக் கட்டமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்னர் முன்னோட்டமாகச் சுரங்கப்பாதையில் கார் ஓட்டும் திட்டத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

எதிர்காலத்தில் கார்கள் பயணிக்கும் பாதை இப்படித்தான் இருக்கும்

எவ்வளவுதான் அதிவேக கார்களாக இருந்தாலும் அதன் முழு வேகத்தை சாதாரண சாலையில் எட்ட முடிவதில்லை. பந்தயக் காராக இருந்தாலும் சாதாரண சாலையில் செல்லும் போது அதனால் அதன் பாதியளவு வேகத்தைக் கூட எட்ட முடிவதில்லை. சாலையில் இருக்கும் இடையூறுகள்தான் அதற்குக் காரணம். அதே வேளையில் ரேஸ் ட்ராக்கை எடுத்துக்கொண்டால் அங்கே குறைவான அளவே தடைகள் இருக்கும் என்பதால் அங்கே காரை வேகமாக ஓட்ட முடிகிறது. ஊருக்குள்ளேயும் அப்படி ஒரு பாதை கிடைத்தால் கார்கள் பயணிக்க நன்றாக இருக்குமே? ஆனால் நகரத்தில் ரேஸ் ட்ராக்குகளை அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. தரைக்கு மேல்தானே இடம் இல்லை கீழே இருக்கிறதே அதைப் பயன்டுத்தலாமே? அதைத்தான் செய்து காட்டியிருக்கிறார் எலான் மஸ்க். நிலத்துக்கு அடியில் கார்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதை. முன்னால் எந்தத் தடையும் கிடையாது, ஏறி உட்கார்ந்து ஆக்ஸிலேட்டரை மிதிக்க வேண்டியதுதான். அதுவும் டெஸ்லா கார் என்றால் ஏறி உட்கார்ந்தால் மட்டும் போதும், கார் தானியங்கியாகவே இயங்கும் என்பதால்.

கடந்த வாரம் 18-ம் தேதி இந்தச் சுரங்கப்பாதையில் பரிசோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இது போன்று சுரங்கம் அமைக்கும் பணிகளுக்காகவே தி போரிங் கம்பெனி (The Boring Company) என்ற நிறுவனத்தைத் தனியாக தொடங்கியிருந்தார் எலான் மஸ்க். அந்நிறுவனம்தான் இந்த மொத்தப் பாதையையும் வடிவமைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஹாதோர்ன் நகரில் கிட்டத்தட்ட 1.4 மைல் நீளம் கொண்ட இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கேதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் அமைந்திருக்கிறது. இந்தப் பாதையை அமைக்க பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது. 

தரைக்கு அடியில் 45 அடிக்குக் கீழ் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதையின் இரண்டு புறங்களிலும் காரை கீழே கொண்டு செல்வதற்காக ஓர் அமைப்பு இருக்கிறது. சாலையின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காரைக் கொண்டு போய் நிறுத்தினால் அந்த அமைப்பு காரைச் சுரங்கப்பாதையின் நுழைவுப் பகுதிக்கு அது கொண்டு செல்லும். அதே போல பயணம் முடிந்தவுடன் மறு பகுதியில் உள்ள அமைப்பு காரை மேலே கொண்டு செல்லும். 12 அகலம் கொண்ட இதுவும் ஒரு சாதாரண சுரங்கப்பாதைதான் இதற்குள்ளே தனியாக வேறு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை. காருக்கு மட்டும் முன் சக்கரங்களில் ஒரு கூடுதல் இணைப்பைப் பொருத்த வேண்டியிருக்கும்.

இதில் அதிகபட்சமாக 241 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். மேலும் தற்பொழுது பரிசோதனைகளுக்காக மட்டும் டெஸ்லா கார் மட்டும் பயணிக்க முடியும். இது முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் போது டெஸ்லா மட்டுமன்றி வேறு எந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும். எந்த இடத்தில் வேகத்தை அதிகரிக்க வேண்டும், குறைக்க மற்றும் நிறுத்த வேண்டும் என்பதைப் பாதையின் மேற்பகுதியில் இருக்கும் விளக்குகளின் நிறம் காரை ஓட்டுபவர்களுக்கு உணர்த்தும். சுரங்கம் அமைக்கும் பணியின் போது வெளியே தோண்டி எடுக்கப்படும் மண்ணைக் கூட வீணாக்காமல் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். மண் செங்கல்லாக மாற்றப்பட்டு கட்டடங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தை எட்டியிருக்கிறது. அதே நேரம் இந்தச் சோதனை ஓட்டத்தில் கார் சற்று அதிகமாகவே குலுங்கியது என்பதை மட்டுமே குறையாகத் தெரிந்தது எனச் சோதனை ஓட்டத்தின் போது பயணித்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பயன்பாட்டுக்கு வரும் போது அது சரி செய்யப்படலாம்.

இதைப் போல தரைக்கு அடியில் கூடுதலாக சுரங்கப்பாதை கட்டமைப்புகள் உருவாக்கப்படும் போது நகரத்தின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். இந்தச் சுரங்கப்பாதையில் ஒரு மணி நேரத்துக்கு 4000 கார்கள் வரை பயணம் செய்ய முடியும். எனவே எதிர்காலத்தில் போக்குவரத்து இப்படித்தான் இருக்கப்போகிறது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் மிக விரைவில் சிக்காகோ மற்றும் வாஷிங்டன் முதல் பால்டிமோர் வரை என இரண்டு சுரங்கப்பாதைகளை உருவாக்கவும் தி போரிங் கம்பெனி முடிவு செய்துள்ளது. சரி ஏற்கெனவே இது போல ஹைப்பர் லூப் என்ற ஒன்று இருக்கிறதே என்றால் அதற்கும் எலான் மஸ்க்கிடம் பதில் இருக்கிறது, ``ஹைப்பர் லூப் நீண்ட தூரத்துக்கு, சுரங்கப்பாதைக் குறைவான தூரத்துக்கு!" 

அடுத்த கட்டுரைக்கு