Published:Updated:

"சாகித்ய அகாடமி விருது பெற்றவன் என்றால், எனக்குக் கெட்ட கோபம் வரும்!" ஜோ டி குரூஸ் #LetsRelieveStress

"சாகித்ய அகாடமி விருது பெற்றவன் என்றால், எனக்குக் கெட்ட கோபம் வரும்!" ஜோ டி குரூஸ் #LetsRelieveStress
"சாகித்ய அகாடமி விருது பெற்றவன் என்றால், எனக்குக் கெட்ட கோபம் வரும்!" ஜோ டி குரூஸ் #LetsRelieveStress

"என்னிடம் யாராவது வந்து, `நீங்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்தானே ' என்று சொன்னால், எனக்கு மனதளவில் கெட்ட கோபம் வரும். இதுதானா நான்... இது அல்ல. அதைத்தாண்டி மனிதநேயம் உள்ள ஒரு வாழ்க்கை எனக்கு இருக்கிறதே. அதுதான் நான்."

டலோடிகளின் வாழ்க்கையை `ஆழிசூழ் உலகு' என்கிற நாவல் மூலம் கவித்துவமாக்கியவர் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். அவர் எழுதிய `கொற்கை' என்ற நாவலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்தது. `அஸ்தினாபுரம்' என்ற நாவலும் `வேர்பிடித்த விளைநிலங்கள்' எனும் கட்டுரைத் தொகுப்பும் அவருக்குப் பெருமை சேர்த்தன. மீனவர்களின் மேம்பாட்டுக்காகத் தொடர்ந்து எழுதி வருவதுடன் களப்பணியும் ஆற்றிவருகிறார். அவருக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் குறித்தும், அதிலிருந்து மீண்ட அனுபவங்கள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

``எனக்கு வணிகக் கப்பல் ஓட்டுவதுதான் தொழில். அதிலிருந்து வரக்கூடிய பொருளாதாரம்தான் என் குடும்பத்தைக் காப்பாற்ற உதவுகிறது. ஆனால், சமூகப் பணி என்று செல்லும்போது எனக்கு நிறைய செலவாகிறது. அதுமட்டுமல்ல... தொடர்ச்சியான பயணங்கள் மேற்கொள்வதால் நிறைய நேரமும் விரயமாகிறது. பணத்தைக்கூடத் தொழில் மூலமாகத் திரும்ப எடுத்துவிடலாம். ஆனால், கடந்துபோன காலத்தை எப்படி மீட்பது?

`எதற்காக, இவ்வளவு தீவிரமாக சமூகத்துக்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். இதை விட்டுவிடலாமே' என்றுகூடத் தோன்றும். பல நேரங்களில் இப்படி யோசித்திருக்கிறேன். ஆனால், அந்த எண்ணங்கள் எல்லாம் சில நிமிடங்கள் மட்டும்தான். நான் ஒரு மீனவன்தானே... இந்த மக்களின் நலனுக்காக நான்தானே முன்னால் நிற்க வேண்டும். இவர்களுக்கு வேறு யார் முன்வருவார் என்று மீண்டும் களத்தை நோக்கியே என் கவனம் திரும்பும்; பொறுப்புஉணர்வு வந்துவிடும். அத்தகைய பொறுப்புஉணர்வு தொடர்ச்சியாக இருப்பதால்தான் நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறேன்.

இலக்கிய உலகத்தில் நிறைய பேரை பார்க்கிறேன். சிலர் என்னிடம் வந்து பேசுவார்கள். `இலக்கிய உலகத்திலிருந்து தள்ளியே இருக்கிறீர்களே?' என்று கேட்பார்கள். உண்மையில் நான் இலக்கியவாதியே இல்லை... இலக்கியம் படைக்கவோ, நாவலாசிரியராக மாறவோ, சிறுகதைகள், கட்டுரைகள் எழுத வேண்டும் என்பதற்காகவோ நான் வரவில்லை. என்னுடைய தொழில் என்பது வேறு. 
இலக்கியம் என்பதைக் குறிக்கோளாக வைத்து நான் வரவில்லை.

எழுதியது எதிர்பாராத ஒரு விபத்து. தொடர்ந்து என் மக்கள் படும் துன்பங்களைப் பார்த்ததும், என்னையும் அறியாமல் எனக்குள்ளிருந்து வந்து விழுந்த படைப்புகள்தான் என் நாவல்கள். சிலர் என்னிடம், `உங்களுடைய அடுத்த படைப்பு எப்போது?’ என்று கேட்பார்கள். அடுத்த படைப்பு என்பது இல்லை. அது வருமா... வராதா என்றும் எனக்குத் தெரியாது. அதற்குண்டான நேரமும், சூழலும், சிக்கலும் இருந்தால், அது வரலாம் அல்லது வராமல்கூட போகலாம். என்னால் அட்டவணைபோட்டு எழுத முடியாது. வருடத்துக்கு, ஒரு நாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத் தொகுப்பு என்று எழுதக்கூடிய எழுத்தாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னிடம் அப்படியான திட்டமிடல் எதுவும் இல்லை. ஏனென்றால், நான் எழுத்தாளன் என்கிற வகைக்குள்ளேயே போகவில்லையே.

காரணம், சிறு வயதிலிருந்தே நெய்தல் வாழ்க்கையைப் பார்த்தே வளர்கிறேன். அதன் பல சம்பவங்கள் என்னுடைய மனதில் தங்கிவிட்டன. நம்முடைய சமூகத்தில் கணவனை இழந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே... நம் மக்களுக்குள் கடுமையாகச் சண்டையிட்டுக்கொள்கிறார்களே... பணத்தைச் சேமிக்காமல் விரயமாக்குகிறார்களே என்ற எண்ணங்களெல்லாம் வரும். இப்படியான எண்ணங்களால்தான் எழுத வந்தேன். எழுத வந்ததன் நோக்கம், எழுதுவதற்காக அல்ல. என் மக்களின் பாடுகளை யாருமே சொல்லாமல் இருக்கிறார்களே என்ற ஆதங்கம். அவர்களைப் பற்றி இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக நான் எழுத வந்தேன்.

இப்படியான சூழலில், `நான் ஒரு இந்துத்துவா' என்று என்மீது ஒரு முத்திரை குத்தப்படுகிறது. உண்மையில் இந்துத்துவாவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இந்து மதத்துக்கும் நான் கும்பிடும் கடவுளுக்கும் தொடர்பில்லை. நாங்கள் மூத்தோரை வழிபடுபவர்கள். என்றைக்கும் எங்கள் ஐயா சுவரில் படமாகத் தொங்குகிறார். தினமும் அவரை வணங்கிவிட்டுத்தான் வேலைக்குச் செல்கிறேன். அப்படியென்றால் அவருடைய ஐயாவும்... ஐயாவுக்கு ஐயாவும் தங்களுடைய மூத்தோரை வணங்கித்தானே வந்திருப்பார்கள். அப்படியாக, தலைமுறை தலைமுறையாக எங்களோடு வாழ்ந்தவர்களை சாமியாகக் கும்பிடுகிறோம். அதைப்போய், `நான் இந்துத்துவாவுக்குள் போய்விட்டேன்..’ என்று காழ்ப்புஉணர்ச்சியோடு சொல்கிறார்கள்.

இன்றைக்கு ஒரு நிறுவனத்துக்கு சமூகப் பொறுப்பு அவசியம் தேவை என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும்போது, ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் இல்லையா... எனக்கும் உண்டு. காரணம், நான் ஒரு சாதாரண கடற்கரையோரக் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருக்கிறேன். பல்வேறு இடங்களுக்கு தொழில்சார்ந்து பயணிக்கிறேன். இன்றைக்கு இந்த இடத்தில் காலூன்றி நிற்கப் பெற்றோர், உறவினர், ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லோருடைய பங்களிப்பையும் தாண்டி, சமூகத்தின் பங்களிப்பையும் உணர்ந்திருக்கிறேன். இந்தச் சமூகம் நமக்கு வாழ்ந்து காட்டியிருக்கிறது. இன்றைக்கு இருக்கும் சென்னை, இருநூறு வருடங்களுக்கு முன்னால் இப்படி இருந்ததா? அப்படியே பின்னால் போய்க்கொண்டே இருந்தால் சென்னை என்கிற சுவடே இருந்திருக்காது இல்லையா?

அப்படியென்றால், சென்னை என்பது உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். குடிநீர், சாலைக் கட்டமைப்புகள், மின்சாரம் என எல்லாவற்றையும் நமக்கு முன்னால் இருந்த சமூகம் அல்லவா செய்திருக்கிறது..? அதுபோல, நெய்தல் சமூகத்தின் மேம்பாட்டுக்காகக் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால், என்மீது எந்த விமர்சனங்கள் வைத்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை. பல நேரங்களில் நான் ஜோ டி குரூஸாகப் பேசுவதில்லை. கடற்கரையிலும் நீர்வழியிலும் இருக்கக்கூடிய மீனவர்களின் பிரதிநிதியாக நின்று, அவர்களின் பிரச்னைகளைப் பேசுகிறேன். அப்படிப் பேசும்போது, `உங்களை யார் மீனவப் பிரதிநிதியாக நியமித்தது?' என்று எதிரே இருந்து ஒரு குரல் வருகிறது. அப்போதுதான் மனஅழுத்தம் வருகிறது. 

அண்மையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள மூக்கையூருக்கு ஒரு திருமணத்துக்காகச் சென்றிருந்தேன். அங்கே போனபோது, மூக்கையூர் துறைமுகத்தைத் தவறாகக் கட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. கட்டமைப்புகள் எதுவும் சரியில்லை. துறைமுகத்தைப் பார்வையிட்டபோது கால் தவறி விழுந்துவிட்டேன். இதனால் என் கால் எலும்பு முறிந்துவிட்டது. ஆனாலும், அங்கு  போய்விட்டு வந்த பிறகு, ஒரு தினசரி பத்திரிகைக்குத் துறைமுகம் குறித்த கட்டுரையையும், பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதத்தையும் அனுப்பிவிட்டேன். அதோடு என் பணி முடிந்துவிடவில்லை. மேற்கொண்டு, அதில் என்ன முன்னேற்றம் ஏற்படும் என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், நான் கால்முறிந்து இரண்டு மாதங்களாக என்னுடைய தொழிலுக்குப் போகாமல் இருக்கிறேன்... அது யாருக்காவது தெரியுமா? 

தொழிலுக்குப் போகாததால் ஏற்படும் பொருளாதார இழப்பை யார் ஈடுகட்டுவார்..? யாரும் பதில் சொல்ல முடியாது. ஆனால், `உன்னை யாருப்பா இதையெல்லாம் செய்யச் சொன்னது. உனக்கு எதுக்குய்யா சமூக அக்கறை...?' என்ற கேள்விகள் என்னை நோக்கி வரும். அது வெளியே இருந்து மட்டுமல்ல, வீட்டுக்குள்ளிருந்தும் வருகிறது. இப்படிப்பட்ட சமூகத்தோடுதான் நாம் வாழ வேண்டியிருக்கிறது.  
சென்னை, பாரிமுனையில் உள்ள சுங்கவரி அலுவலகம் அருகே நிறைய போராட்டங்கள் நடக்கும். அதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். நெரிசலில் சிக்கியிருக்கும் வாகன ஓட்டிகள் தங்களது பிரச்னையைத்தான் பெரிதாகப் பார்ப்பார்கள். நெரிசலைப் பொருட்படுத்தாமல் போராட்டத்தை எட்டிப்பார்த்தால் அது அவர்களுக்கானதாக இருக்கும். அந்தப் போராட்டத்தால் விளையகூடிய நன்மை அவர்களையும் போய்ச்சேரும். ஆனால், அவர்கள் தற்காலிகமான போக்குவரத்து நெரிசலைத்தான் பெரிதாகப் பேசுவார்கள். போராட்டக்காரர்களை கொச்சையாகப் பார்ப்பார்கள். அதையெல்லாம் கவனிக்கும்போது, நம்மையும் இப்படித்தானே இந்தச் சமூகம் பார்க்கும், பார்த்துவிட்டுப் போகட்டுமே என்று எல்லா விமர்சனங்களையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டுக் கடந்துவிடுவேன். 

நான், மீனவ சமுதாயத்துக்குப் பங்களிப்பு செய்வதற்காக வந்திருக்கிறேனே தவிர, அதை அனுபவிப்பதற்கு இல்லை. என்னிடம் யாராவது வந்து, `நீங்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்தானே ' என்று சொன்னால், எனக்கு மனதளவில் கெட்ட கோபம் வரும். இதுதானா நான்... இது அல்ல. அதைத்தாண்டி மனிதநேயம் உள்ள ஒரு வாழ்க்கை எனக்கு இருக்கிறதே. அதுதான் நான்.
சாகித்ய அகாடமியைவிட மனிதநேயம் பெரிய விருதுதான். சக மனிதன் கஷ்டப்படும்போது ஏற்படும் துயரம், அதை எப்படியாவது துடைத்துவிட வேண்டும் என்கிற மனிதாபிமானம்தான். இதற்காக எனக்குத் தலையில் கிரீடம் எதுவும்  வைக்கப்போகிறார்களா? நான் வாழ்ந்தகாலத்தில் என் கண் முன்னால் நடந்த அநீதியைத் தட்டிக்கேட்டேன் என்ற இடத்தில் நான் ரத்தமும் சதையுமாக வாழ்ந்துவிட்டேன்.

எத்தனை பேர் அப்படி வாழ்கிறார்கள்? குடும்பத்துக்காகவும் சுய லாபத்துக்காகவும் விட்டுக்கொடுத்துத்தானே வாழ்கிறார்கள். அநீதியைத் தட்டிக்கேட்கும் அந்த நொடியில்தான் நான் உயிர்ப்புடன் இருக்கிறேன். அப்படியே, என்றென்றும் இருக்க ஆசைப்படுகிறேன்.
நினைத்தது நடக்கவில்லையென்றால் மனஅழுத்தம் வரும். அப்படியாக, எனக்கும் அது வந்திருக்கிறது. அது தொழில் சார்ந்தது அல்ல... சமூகம் சார்ந்ததுதான்!’’ என்கிறார் ஜோ டி குரூஸ்.

அடுத்த கட்டுரைக்கு