Published:Updated:

கி.மீட்டருக்கு 5 ரூபாய்... பெட்ரோல், ஹெல்மெட் தேவையில்லை... இதுதான் பைக் டாக்ஸி!

கி.மீட்டருக்கு 5 ரூபாய்... பெட்ரோல், ஹெல்மெட் தேவையில்லை... இதுதான் பைக் டாக்ஸி!
கி.மீட்டருக்கு 5 ரூபாய்... பெட்ரோல், ஹெல்மெட் தேவையில்லை... இதுதான் பைக் டாக்ஸி!

ப்போது எல்லாமே மொபைல்களுக்குள் அடங்கிவிட்டன. உணவுக்கு ஸ்விகி, ஸோமாட்டோ; டாக்ஸி/ஆட்டோவுக்கு ஓலா, உபெர்; பஸ் டிக்கெட்டுக்கு ரெட்பஸ்; ஹோட்டல்களுக்கு ஓயோ, ட்ரிவாகே... என ஆப் நிறுவனங்கள்தாம் இப்போது மக்கள் கையில் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன. இந்த ஆப் கலாசாரத்துக்குள் பைக்குகளும் வந்துவிட்டன. அரை மணி நேரத்துக்கு 5 ரூபாய் கொடுத்தால் வாடகை சைக்கிள் கிடைக்கும் என்பது நினைவிருக்கிறதா? அதே கான்செப்ட்தான். ஆனால், இங்கு 5 ரூபாய் கொடுத்தால் சைக்கிளுக்குப் பதிலாக பைக் கொடுத்து அதற்கு டிரைவர், ஹெல்மெட், பெட்ரோல் எல்லாவற்றையும் கொடுத்து 1 கி.மீ தூரம் கூட்டிப்போகிறார்கள். இதற்குப் பெயர்தான் `பைக் டாக்ஸி'. இந்தியாவில் இருக்கும் சில பைக் டாக்ஸிக்காரர்களின் பட்டியல் இது.

ராபிடோ (Rapido)

கிட்டத்தட்ட ஓலா, உபெர் போன்றே செயல்படும் இந்தச் செயலிதான் தற்போது பைக் டாக்ஸி பயன்பாட்டில் முன்னணியில் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் மூன்று இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் செயலியில், இப்போது 4000+ பைக்குகள் உள்ளன. சமீபத்தில் சென்னை, திருச்சி போன்ற நகரங்களிலும் தனது சக்கரங்களைப் பதித்துள்ளன இந்த பைக்குகள். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் ராபிடோ சேவையைப் பயன்படுத்துவது மட்டுமல்ல, 85 சதவிகிதம் பேர் இந்தச் சேவையை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள். கிலோமீட்டருக்கு 3 ரூபாய்தான். நாம் செல்லவேண்டிய இடத்துக்கு நம்மைக் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள்.

பைக்ஸி (Bikxie)

2015-ம் ஆண்டில் மோஹித் ஷர்மா, திவ்யா கலியா மற்றும் டேனிஸ் சிங் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, ஹரியானாவின் குருகிராம் மற்றும் ஃபரிதாபாத்துக்கு இடையே தனது பயணத்தைத் தொடங்கியது. அதோடு நின்றுவிடாமல் பைக்ஸி டாக்ஸி, பைக்ஸி ஃபுட், பைக்ஸி கார்டு, பைக்ஸி லாஜிஸ்டிக்ஸ், பைக்ஸி ரென்டல் என பைக்கில் என்னவெல்லாம் செய்யலாமோ எல்லாவற்றையும் செய்துவருகிறார்கள். இந்தப் பட்டியலிலேயே பைக்ஸி மட்டும்தான் பெண்களுக்கென பிரத்யேகமாக பைக்ஸி பிங்க் எனத் தனி பைக் டாக்ஸி சர்வீஸ் வைத்திருக்கிறார்கள். 

பெளன்ஸ் (Bounce)

2015-ம் ஆண்டில் விவேகானந்தா, வருண் அக்னி மற்றும் அனில் ஆகியோரால் பெங்களூருவில் தொடங்கப்பட்ட மெட்ரோ பைக்ஸ் என்ற நிறுவனம்தான், இப்போது பெளன்ஸ் ஆக மாறியிருக்கிறது. பெங்களூரில் மட்டுமே வேலை செய்யும் இந்த பெளன்ஸ் செயலியில், ஒரு கிலோமீட்டருக்கு 5 ரூபாய் கொடுத்தால் நம் பெஸ்ட் ஃபிரெண்ட்போல நாம் சொல்லும் இடத்துக்கு வந்து நம்மைக் கூட்டிப்போவார்கள். எங்கு வேண்டுமானாலும் இறங்கிக்கொள்ளலாம். சிட்டிக்குள் மட்டுமல்லாமல் தூரமாகப் போகவேண்டும் என்றால் அதற்கும் தனி பேக்கேஜ் உண்டு. பெளன்ஸ் டாக்ஸியில் இருக்கும் சிறப்பு, நமக்குப் பிடித்த மாடல் பைக் தேர்வுசெய்தால் அதில் கூட்டிப்போவார்கள். தற்போது 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்கள். 

பாக்ஸி (Baxi)

ஹரியானாவின் குருகிராம் நகரில் 2014-ம் ஆண்டில் ஆஷூதோஷ் ஜோஹ்ரி மற்றும் ராணா என்பவர்களால் தொடங்கப்பட்டது இந்த பைக் டாக்ஸி சர்வீஸ். அம்மாக்கள் `போய் தயிர் வாங்கிட்டு வா' என்று மண்டையில் தட்டினால், கடைத்தெருவுக்குப் போகாமல் பாக்ஸி ஆப்-க்குப் போகிறார்கள் குருகிராமின் 2k கிட்ஸ். காய்கள், பழங்கள், மளிகைபொருள்கள், பால் பொருள்கள் போன்றவற்றை உங்கள் விருப்பமான கடைகளில் வாங்கி வீடு தேடி வந்து டெலிவரி செய்வதுதான் இவர்களின் ஸ்பெஷல். தேவை என்றால், பொருள்கள் மட்டுமல்ல உங்களையும் சேர்த்து பத்திரமாக வீட்டில் கொண்டுபோய் டெலிவரி செய்துவிடுவார்கள் இந்த பைக் டாக்ஸிக்காரர்கள். தொடங்கிய முதல் ஆண்டிலேயே 7 கோடி ரூபாய் வருமானம் பார்த்துள்ளது இந்தச் செயலி.

உபெர் மோட்டோ (Uber Moto)

கார் டாக்ஸி மற்றும் ஆட்டோ சேவையில் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலும் முன்னணியில் உள்ள உபர் நிறுவனம், பைக் டாக்ஸிக்காக உபெர் மோட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது. உபெர் மோட்டோ உங்கள் நகரத்தில் இருந்தால், உபெர் செயலியில் ஆட்டோமேடிக்காக இந்த ஆப்ஷன் வந்துவிடும்.

வோகோ (Vogo)

இந்த வோகோ செயலி, எல்லாவற்றையும்விட கொஞ்சம் வித்தியாசமானது. வோகோவில் பைக்கை/ஸ்கூட்டரை புக் செய்தால் அருகில் எங்கு வோகோ ஸ்டேஷன் இருக்கிறது எனக் காண்பித்துவிடும். அங்கு சென்று ஒரு வோகோ ஸ்கூட்டரைப் பிடித்து அதில் இருக்கும் QR code ஸ்கேன் செய்தால், நம் செல்போனுக்கு OTP வரும். அதை பைக்கில் பதிவிடுவதன் மூலம் அந்த பைக்கை அன்லாக் செய்துகொள்ளலாம். எந்த இடத்துக்குப் போக வேண்டுமோ அங்கு போய்ச் சேர்ந்ததும், வோகோ செயலி மூலமே பணம் செலுத்திவிட்டு சாவியை வைத்தால் வேலை முடிந்துவிடும். அவ்வளவுதான். வீட்டுக்குப் போகும்போது புது வோகோ ஸ்கூட்டரைப் பிடிக்கவேண்டியதுதான்.

2017-ம் ஆண்டில் ஆனந்த் அய்யாதுரை, பத்மநாபன் பாலகிருஷ்ணன் மற்றும் சஞ்சித் மிட்டால் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்தச் செயலி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் தற்போது இயங்கிவருகிறது. இது வாடகை ஸ்கூட்டர் என்பதால், இதில் மட்டும் நேரம் கணக்கு. ஒரு நிமிடத்துக்கு 1.20 ரூபாய் வாங்குகிறார்கள். சமீபத்தில் ஓலா நிறுவனம் வோகாவுடன் கைகோத்துள்ளது கூடுதல் தகவல்.