மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART

கேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART
பிரீமியம் ஸ்டோரி
News
கேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART

ஷாப்பிங் ஸ்பெஷல்

பெங்களூரு. வீட்டில் ஷேவ் செய்துவிட்டுக் கிளம்பினால், அலுவலகம் போய்ச் சேர்வதற்குள் தாடி முளைக்கத் தொடங்கிவிடும். அந்த அளவுக்குப் போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநகரம். அதுவும் கோரமங்கலாவைத் தாண்டுவது என்பது ‘கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே... அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்’ கதைதான். ஆமைகள் எல்லாம் ஆடியை ஓவர்டேக் செய்யும் அந்தப் பகுதியில், இரண்டு படுக்கையறை கொண்ட வீடு ஒன்றில்தான் 2007-ம் ஆண்டு ஃப்ளிப்கார்ட் தொடங்கப்பட்டது. அந்த இடத்திலிருந்து ஆரம்பித்து ராக்கெட் வேகத்தில் முன்னேறுவோம் என அதன் நிறுவனர்கள் சச்சின் பன்சாலும் பின்னி பன்சாலும்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டு பன்சால்கள் என்றதும் சகோதரர்கள் என்றோ உறவினர்கள் என்றோ நினைக்க வேண்டாம். இருவரும் ஐ.ஐ.டி, டெல்லியில் படித்தவர்கள். சண்டிகர் நகரைச் சேர்ந்தவர்கள். அதைவிட முக்கியமான ஒற்றுமை ஒன்று உண்டு. இருவரும் அமேசானில் வேலை செய்தவர்கள்.

கேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART

அமேசான் அமெரிக்காவில் தெறி ஹிட். இதையே நாம் ஏன் இந்தியாவிலும் செய்யக்கூடாது என நினைத்தார்கள் பன்சால்கள். டாலர்களைக் கொட்டித்தந்த வேலையை விட்டுவிட்டு இந்திய ரூபாய்க்கட்டுக்காகத் தாயகம் திரும்பினார்கள். ரூபாய் என்பது ஒரு சுவாரஸ்யத்துக்காகச் சொல்வதுதான். உலகை மாற்றிய எல்லோரின் விருப்பமும் பணமாகவோ அல்லது பணம் மட்டுமேயாகவோ இருந்ததில்லை. அப்படி இருந்தவர்கள் உலகை மாற்றியதுமில்லை. இந்திய ஷாப்பிங் செய்யும் முறையை மாற்றுவது என்ற எண்ணத்துடன் நாடு திரும்பியவர்கள் வசம் ஐடியா மட்டுமல்ல; அனுபவமும் இருந்தது. அதுவே ஃப்ளிப்கார்ட்டுக்கு மூலதனமானது.

கேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART



Flipkart.com என்ற தளம் உதயமானது. அமேசான் தந்த அனுபவத்தில், ‘வாடிக்கையாளர்கள்தாம் நமக்கு எல்லாமே’ என்பதில் பன்சால்கள் தெளிவாக இருந்தனர். ஆனால், வாடிக்கையாளர்தான் கிடைக்கவில்லை. அமேசானைப் போலவே ஃப்ளிப்கார்ட்டும் முதலில் விற்கத் தொடங்கியது புத்தகங்களைத்தான். தங்கள் வாடிக்கையாளர்கள் வாசிப்பாளர்கள்தாம் என முடிவானதும் அவர்களைத் தேடினர் இரண்டு பன்சால்களும். பெங்களூரில் புகழ்பெற்ற கங்காராம் புத்தகக் கடையின் வாசலில் நின்று, கையில் புத்தகங்களோடு வெளிவரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஃப்ளிப்கார்ட் பெயர்கொண்ட புக்மார்க்குகளை இலவசமாகக் கொடுத்தனர். ம்ஹூம். ஃப்ளிப்கார்ட் இணையதளத்துக்குச் சிலர் விசிட் அடித்தாலும் ஆர்டர் வரவில்லை.

கிடைக்கும் நேரத்தில் இணையத்தை மேய்ந்தவர்கள், ஆங்காங்கே கமென்ட் செய்துவிட்டு, கீழே flipkart.com என்ற முகவரியையும் பதிவு செய்துவிட்டு வருவார்கள். ஹைதராபாத்தைச் சேர்ந்த வி.வி.கே சந்திரா என்பவருக்கும் ஒரு கமென்ட் செய்திருந்தார்கள். அங்கிருந்து லிங்க்கை க்ளிக் செய்து, ஃப்ளிப்கார்ட்டுக்கு வந்த சந்திராவுக்கு, தளத்தின் டிசைன் பிடித்திருந்தது.  இந்திய ஸ்டார்ட் அப்களை உன்னிப்பாகக் கவனித்து வந்த சந்திராவுக்கு ஏனோ ஃப்ளிப்கார்ட் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. மேலும், அவர் அப்போது தேடிக்கொண்டிருந்த ‘Leaving Microsoft to Change The World’ என்ற புத்தகம் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இருக்க, ஆர்டர் ஒன்றைப் போட்டார். ஹைதையில் சந்திராவின் மவுஸ் க்ளிக் செய்த தகவலை, இணையம் பெங்களூரிலிருந்த ஃப்ளிப்கார்ட் அலுவலகத்துக்குக் கொண்டு வந்தது. 500 ரூபாய். அதுதான் ஃப்ளிப்கார்ட்டுக்கு வந்த முதல் ஆர்டர். வரவு. `உ’ லாபம்.

பன்சால்களுக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. முதல் ஆர்டர் தந்த சந்தோஷம் அதற்குக் காரணமல்ல. அந்தப் புத்தகம் ஸ்டாக் இல்லை என்பதே காரணம். இந்தியா முழுவதும் தேடினார்கள். பன்சால்கள் தளரவில்லை. “கொஞ்சம் லேட் ஆகுது ப்ரோ. ஆனா நிச்சயம் ஆர்டர் வந்துடும்” என ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாத இணையத்தில், யாரென்றே தெரியாத ஒரு வாடிக்கையாளருக்குப் பொறுப்புடன் அனுப்பிய அந்த முதல் மின்னஞ்சல், ஃப்ளிப்கார்ட்டின் வாடிக்கையாளர் சேவைக்கான ஒரு சோறு. பன்சால்களின் தேடலுக்கு பெங்களூரு, இந்திரா நகரிலிருந்த ஒரு புத்தகக் கடை பதில் சொன்னது. பக்கங்கள் பழுப்பேறிப்போன ஒரே ஒரு பிரதி அந்தக் கடையிலிருந்தது.

அன்று பெங்களூரு முழுவதும் செம மழை. “இந்தியாவையே நம்ம பாக்கெட்டுக்குள்ள இருக்கிறதை ஷாப்பிங் செய்ய வைக்கப்போறோம். இதெல்லாம் விஷயமா?” என இரு சக்கர வாகனத்தில் நீந்திக் கடையை அடைந்தார் பன்சால். ஆனால், அன்று புத்தகக் கடைக்குப் போகும் அவசரத்தில் பர்ஸை மறந்துவிட்டார். மீண்டும் மழையில் நனைந்தபடி, அருகிலிருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்று 500 ரூபாய் கடன் வாங்கி, கடைக்குத் திரும்பிப் புத்தகத்தைக் கைப்பற்றினார் பன்சால்.

ஃப்ளிப்கார்ட்டின் முதல் டெலிவரி சென்றது. “கொஞ்சம் லேட்... புத்தகமும் கொஞ்சம் டேமேஜ். அதனால் கம்பெனி உங்களுக்கு வழங்கும் அதிசயப் பரிசு... 10% தள்ளுபடி” என்ற ஃப்ளிப்கார்ட்டின் மெசேஜைப் பார்த்த சந்திராவுக்கு ஆச்சர்யம்; ஆனந்தம். ‘இந்தப் பசங்க தேறிடுவாங்க’ என நினைத்துக் கொண்டார். அவர் நினைத்ததை நிஜமாக்கினார்கள் பன்சால்கள்.

2008. புத்தகங்கள் வாங்கியவர்களின் வாய் விளம்பரத்தால் வளர்ந்தது ஃப்ளிப்கார்ட். அந்த ஆண்டின் முடிவில் ஃப்ளிப்கார்ட் செய்திருந்த ஷிப்மென்ட்கள் 3400. அடுத்தடுத்த ஆண்டுகளில் வளர்ச்சி வேகமெடுத்தது. ஃப்ளிப்கார்ட்டின் நதிமூலம் அமேசான்தான். ஆனால், அதை இந்தியச் சந்தைக்கு ஏற்ப மாற்றுவதில்தான் சவால் இருந்தது. திரைப்படங்களை ரீமேக் செய்வது போலதான். ஆனால், அது ‘கில்லி’யா ‘ஆதி’யா என்பதில் இருக்கிறது விஷயம். பலர் இதை முயற்சி செய்து தோற்க, ஃப்ளிப்கார்ட் சரியாகச் செய்தது. இந்தியர்கள் பொருளைப் பார்க்கும்முன் பணத்தைக் கொடுக்க பயப்படுகிறவர்கள். அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தரும் ஒரு ஜீபூம்பா ஐடியாவுக்காகக் காத்திருந்தனர். அதுதான் `கேஷ் ஆன் டெலிவரி.’ ``பொருளைப் பாத்துட்டு பணத்தக் கொடுப்பா” எனும் திட்டம். அது ஃப்ளிப்கார்ட்டின் ஹிட் கிராஃபை ஏற்றியது. அடுத்து, வாங்கிய பொருளில் பிரச்னை என்றால் 30 நாள்களுக்குள் திருப்பித் தரலாம் என்றது. எல்லாமே செலவாகும் விஷயங்கள்தாம். ஆர்டர் போட்டவர்கள் டெலிவரி செய்யும்போது வேண்டாம் என்பார்கள். ``டெலிவரிச் செலவு தண்டம். பொருளை வாங்கிப் பயன்படுத்திவிட்டு 29-வது நாளில் ரிட்டர்ன் போடுவார்கள். டெலிவரியோடு அதைத் திரும்ப வாங்கும் செலவும் தண்டம்.  ஃப்ளிப்கார்ட் எடுப்பது பெரிய ரிஸ்க்’’ என்றெல்லாம் போட்டியாளர்கள் பேசினார்கள். பன்சால்களிடமிருந்து புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.  அவர்கள் சொன்ன ‘தண்டமெல்லாம்’ ஃப்ளிப்கார்ட்டின் மீது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையாய் மாறியது. நம்பிக்கை என்ற பெரிய மீனைப் பிடிக்க பன்சால்கள் போட்ட சின்ன மீன்தான் அவையெல்லாம் என்பது, பிறகுதான் மற்றவர்களுக்குப் புரிந்தது.

சமூக வலைதளங்கள் இந்தியாவில் பிரபலமான சமயம். அதன் இன்னொரு பலனாக ஆன்லைன் ஷாப்பிங்கும் பரவலானது. “அவன் வாங்கியிருக்கானே... அப்ப நானும் வாங்கி, ஒரு ஸ்டேட்டஸ் போடுறேன்” என நெட்டிசன்களின் Peer pressure-ஐ ஃப்ளிப்கார்ட் தனக்குச் சாதகமாக்கியது. அலைபேசி ஆர்டர் செய்த ஒருவர்  ‘24 மணி நேரத்துல குடுப்பியா?’ என்று ட்வீட் போட, அதைச் சவாலாக எடுத்துக் கொண்டு 24 மணிநேரம் முடிய கொஞ்ச நேரம் இருக்கும்போது கொண்டு வந்து கொடுத்து `எப்பூடி?’ என்றார்கள். மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்ற அந்த வாடிக்கையாளர், ஃப்ளிப்கார்ட்டின் டெலிவரி ஸ்பீடு பற்றி இன்னொரு ட்வீட்டைத் தட்டிவிட்டார். இந்த சோஷியல் மீடியா டெக்னிக் நன்றாக ஒர்க் அவுட் ஆனது. இணையத்தில் பிரபலமானவர்களைத் தங்களின் பி.ஆர்.ஓக்களாக மாற்றியது ஃப்ளிப்கார்ட்.

ஆன்லைன் ஷாப்பிங் வளர்ச்சியால் இந்தியாவில் நிறைய ஆன்லைன் போர்ட்டல்கள் உருவாகி வளர்ந்தன. கையில் நிறைய வாடிக்கையாளர்கள், முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்கள் என அசுர பலத்தில் இருந்த ஃப்ளிப்கார்ட் சதுரங்கப் போட்டியில் அடுத்த காயை நகர்த்தியது. சின்னச் சின்ன நிறுவனங்களை வாங்கிப்போட்டது. letsbuy.com, myntra எனப் பல நிறுவனங்கள் ஃப்ளிப்கார்ட்டின் ஜோதியில் ஐக்கியமாகின. ஃப்ளிப்கார்ட் விஸ்வரூபம் எடுத்தது.

கேம் சேஞ்சர்ஸ் - 11 - FLIPKART

ஃப்ளிப்கார்ட்டைச் சிறு நகரங்களுக்கு எடுத்துச் சென்றது மொபைல்கள்தாம். அதுவரை கடை கடையாக ஏறி மொபைல் வாங்கிய இந்தியர்களை, ஆன்லைன் மூலம் மொபைல் வாங்க வைத்தது ஃப்ளிப்கார்ட். மோட்டரோலோவுடன் கைகோத்து, அதன் ஒரு மாடலை ஃப்ளிப்கார்ட்டில் மட்டுமே வாங்க முடியும் என அறிவித்தது. நல்ல மொபைல், குறைந்த விலை. ஆனால் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் முதன்முதலாக ஃப்ளிப்கார்ட்டுக்கு வந்தவர்கள் பலர். அவர்களை எல்லாம் தனது தேர்ந்த சேவை மூலமாக நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆக்கிக்கொண்டது ஃப்ளிப்கார்ட். மொபைல் வாங்க வந்தவர்கள், அந்த மொபைல் மூலம் கடலை மாவு வரைக்கும் ஆர்டர் போட்டார்கள். ``ஒரு ரங்கநாதன் தெருவையே மொபைலுக்குள்ள வச்சிருக்கான்ப்பா” எனத் தாய்மார்களும் ஃப்ளிப்கார்ட்டின் ரசிகர் ஆனது வேற லெவல் வளர்ச்சி.

ஃப்ளிப்கார்ட்டின் இன்னொரு மிகப்பெரிய ஜீபூம்பா ‘பிக் பில்லியன் டே’. முதன்முதலில் இந்த ஷாப்பிங் திருவிழாவை அறிவித்த ஆண்டில் ஃப்ளிப்கார்ட்டுக்கு அடிதான் விழுந்தது. வாடிக்கையாளர்களிடம் கையெடுத்து மன்னிப்பெல்லாம் கேட்டது ஃப்ளிப்கார்ட். ஆனால், உள்ளுக்குள் ஆனந்தம் அன்லிமிட்டெட்தான் பன்சால்களுக்கு. காரணம், அவர்கள் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு வாடிக்கையாளர்கள் வந்ததால்தான் அவர்களால் சரிவரக் கையாள முடியாமல்போனது. நாம் எதிர்பார்த்ததைவிட வேகமாக வளர்கிறோம் எனத் தெரியும்போது யாருக்குத்தான் ஆனந்தமாக இருக்காது?

இப்போது ஒவ்வோர் ஆண்டும் பிக் பில்லியன் சேலுக்காக ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே வேலைகளைத் தொடங்கிவிடுகிறது ஃப்ளிப்கார்ட். இரண்டு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட சாம்ராஜ்யத்தில் இன்று 30,000 பேர் வேலை செய்கிறார்கள். ஃப்ளிப்கார்ட்டின் இன்றைய ஆண்டு வருமானம் 20,000 கோடி. நான்கு லட்சம் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் 11 ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இரண்டு பன்சால்களின் சொத்து மதிப்பும் 6000 கோடியைத் தாண்டும்.

அமேசானில் நல்ல வேலை, நல்ல வாழ்க்கை என இருந்தவர்கள் அதை உதறிவிட்டு, ரிஸ்க் எடுத்து இன்று, இந்தியாவின் ஷாப்பிங் முறையையே மாற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஸ்டார்ட் அப் நிறுவனரும் முயற்சி செய்வது இந்த ஒன்றைத்தான். அது உலகை மாற்றியமைப்பது.

- ஐடியா பிடிப்போம்

கார்க்கிபவா