Published:Updated:

சபரிமலை... போகக்கூடாது என்பவர்களின் நியாயம் என்ன; சென்று வந்த 'மனிதி'யின் நியாயம் என்ன?

"எங்கள் நெற்றியில் ஏன் சந்தனம், குங்குமம் இல்லையென்று கேட்டிருந்தார் ஹெச்.ராஜா. எங்களுடன் வந்த ஐயப்ப பக்தைகள்  விரதமிருந்துதான் சபரிமலைக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவரான கலாவுக்கு 53 வயதாகிறது. அவர்தான் குருசாமியாக எங்களுடன் வந்தார்."

சபரிமலை... போகக்கூடாது என்பவர்களின் நியாயம் என்ன; சென்று வந்த 'மனிதி'யின் நியாயம் என்ன?
சபரிமலை... போகக்கூடாது என்பவர்களின் நியாயம் என்ன; சென்று வந்த 'மனிதி'யின் நியாயம் என்ன?

ல்லா நியாயங்களுக்கும், ஏன் பிரச்னைகளுக்கும்கூட இரண்டு பக்கங்கள் இருக்கும். சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்லலாமா, கூடாதா என்பதிலும் இதே போன்ற இரண்டு விதமான கோணங்கள்தாம் நம் முன்னே வைக்கப்பட்டுள்ளன. முதல் கோணம், ஐயப்பன் பிரம்மச்சாரி தெய்வம். அதனால், மாதவிடாய் இருக்கிற பெண்கள் அவரைத் தரிசிக்க சபரிமலைக்குப் போகக்கூடாது என்பது. இரண்டாவது கோணம், மாதவிடாயைத் தீட்டு என்று சொல்வது தீண்டாமைக்குச் சமமானது. அந்தக் காரணத்தைச் சொல்லி பெண்களை தடுப்பவர்கள் மேல் தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கே போடலாம் என்பது. 

`ஏன் எல்லா வயதுப் பெண்களும் ஐயப்பனைத் தரிசிக்க சபரிமலைக்குச் செல்லக்கூடாது' என்பதற்கான நியாயங்களை, சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள `ஸ்ரீ ஹரிஹர புத்ர ஐயப்பன் சுவாமி' திருக்கோயிலில் ஐயப்பனுக்குப் பணிவிடை செய்துகொண்டிருக்கும் 60 வயதுகளில் இருக்கிற லெட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோரிடம் கேட்டோம். 

``ஐயப்ப சாமி பிரம்மச்சரிய விரதம் இருக்கிற ஒரு முனிவர் மாதிரி. அவர் தன்னோட பிரம்மச்சரிய விரதத்துக்காகப் பெண்கள்கிட்ட இருந்தே ஒதுங்கி இருக்கிறாரு. எத்தனையோ முனிவர்களும் ரிஷிகளும் குடும்ப வாழ்க்கை வேண்டாம்னு ஒதுங்கி தவ வாழ்க்கை இருந்ததை நாம புராணங்கள்ல படிச்சிருக்கோம். அவங்ககிட்ட போயி நீங்க ஏன் தவம் இருக்கிறீங்கன்னு அப்போதுள்ள பெண்கள் யாரும் கேட்டாங்களா? அப்படித்தான் இதுவும்.  

நான் இந்தக் கோயில்லதான் ரொம்ப வருஷமா ஐயப்பனுக்குப் பணிவிடை செஞ்சுக்கிட்டு இருக்கேன். எல்லா சாமிங்களுக்கும் நான் அலங்காரம் பண்ணுவேன். ஆனா, ஐயப்ப சாமி பக்கத்துல மட்டும் போக மாட்டேன். கருவறைக்கு வெளியில நின்னுக்கிட்டே எல்லா உதவிகளையும் செய்வேன். வயசானாலும் நான் அந்தக் கட்டுப்பாட்டை மதிக்கிறேன். சபரிமலைக்குப் போகணும்னுகூட நான் நினைச்சது இல்ல. இங்க இருந்தே அவருக்கு சேவை செய்யணும்னுதான் விரும்புறேன். அதுல ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது” என்கிறார் லெட்சுமி அம்மா. 

அடுத்து பேசிய சரஸ்வதி அம்மா, ``ஐயப்பனைக் கும்பிடக் கூடாதுன்னு யாரும் சொல்லலைங்க. எல்லா வயசுப் பெண்களும் வீட்டுல இருந்தோ இல்ல அக்கம் பக்கத்துல இருக்கிற கோயில்களுக்குப் போயோ ஐயப்பனைத் தாராளமா கும்பிடலாம். ஆனா, சபரிமலைக்குப் போகாதீங்கன்னு சொல்றதுக்குக் காரணம் அங்க அவரு தவ வாழ்க்கையில அவர் இருக்கிறதாலதான். எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஐயப்ப சாமியை ரொம்பப் பிடிக்கும். 51 வயசுலதான் மாலை போட்டு பெருவழிப்பாதை மூலமா சபரிமலைக்குப் போனேன். அப்போ இருந்து கடந்த 13 வருஷமா எந்தத் தடையும் இல்லாம போயிட்டு இருக்கேன். ஆனா பாருங்க, இப்போ உள்ள புள்ளைங்களுக்கு எல்லாமே உடனே கிடைச்சிடணும். எல்லாத்தையும் உடனே பாத்துடணும்னு நினைக்கிறாங்க. அந்த எண்ணத்தைக் கடவுள்கிட்டயும் காட்டினா எப்படி?'' என்றார். 

சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் போவோம் என்பவர்களின் தரப்பு நியாயம் என்னவென்று தெரிந்துகொள்ள `மனிதி' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வியிடம் பேசினோம். சில தினங்களுக்கு முன்னால் இந்த அமைப்பு 11 பெண்கள் கொண்ட குழுவாக சபரிமலைக்குச் சென்றதும், அங்கு ஐயப்ப பக்தர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் விரட்டப்பட்டதும் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். 

``பூனைக்கு யார் முதலில் மணி கட்டப் போகிறார்கள் என்கிற நிலைதான், சபரிமலைக்கு எல்லா வயதுப் பெண்களும் செல்வதில் இருக்கிற பிரச்னையே. எங்களைப் போல யாராவது ஒரு சிலர் ஒரு முறை சென்று வந்துவிட்டால், அந்தத் தடை உடைந்துவிடும். அதற்காகத்தான் இவ்வளவு ரிஸ்க்கை நாங்கள் எடுத்தோம்.   

சபரிமலைக்கு நீங்கள் செல்வதால், அங்கிருக்கிற மக்களுடைய காலங்காலமான நம்பிக்கையை நீங்கள் சிதைக்கப் பார்க்கிறீர்கள் என்கிறார்கள் சிலர். குழந்தைத் திருமணம், கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறுதல் போன்றவைகூட இங்கே காலங்காலமாக இருந்தவைதான். அதற்காகவே அவையெல்லாம் சரியென்றாகி விடுமா என்ன? சாதியின் பெயர் சொல்லி சிலரைக் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்வது எப்படிச் சட்டத்துக்குப் புறம்பானதோ அதேபோல பெண்களை தீட்டு என்று சொல்லி கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதும் சட்டத்துக்கு முன்னால் தவறுதான். தவிர, சபரிமலைக்கு இளவயதுப் பெண்கள் சென்றிருக்கிறார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. மன்மோகன் சிங்கின் தனிச்செயலர் டி.கே. நாயர்கூட, ஐயப்பன் கோயிலில்தான் தன் அம்மாவின் மடியில் அமர்ந்து முதல் உணவு எடுத்துக்கொண்டதாகச் சொல்லியிருக்கிறார். அவர் குழந்தையாக இருக்கும்போது, அவருடைய அம்மாவுக்கு என்ன வயதிருக்கும் என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள். தவிர, பந்தள குடும்பத்து அரசி, சிலர் லஞ்சம் கொடுத்துவிட்டெல்லாம் ஐயப்பனைத் தரிசித்திருப்பதாகப் புகாரே சொல்லியிருக்கிறார்'' என்ற செல்வி, ஹெச்.ராஜாவின் கேலி ட்விட்டுக்கும் பதில் சொன்னார்.  

``எங்கள் நெற்றியில் ஏன் சந்தனம், குங்குமம் இல்லையென்று கேட்டிருந்தார் ஹெச்.ராஜா. எங்களுடன் வந்த ஐயப்ப பக்தைகள்  விரதமிருந்துதான் சபரிமலைக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவரான கலாவுக்கு 53 வயதாகிறது. அவர்தான் குருசாமியாக எங்களுடன் வந்தார். சம்பவம் நடந்த அன்று, நாங்கள் எல்லோரும் பம்பையில் குளித்துவிட்டு, முறைப்படி இருமுடிக்கட்ட, பூஜைக்கான பொருள்களை வாங்க அங்கிருக்கிற கணபதி கோயிலுக்குச் சென்றோம். அந்தப் பொருள்கள் வாங்குவதற்கான பணம் கட்டிய ரசீதைக் காட்டியும் அந்தக் கோயிலின் தந்திரி எங்களுக்கு எந்தப் பொருளையும் தரவில்லை. அதோடு, அங்கிருந்த அரிசி, நெய் தேங்காய், வாழைப்பழம், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எங்களுக்கு பூஜை சாமான்கள் தராமல், அவற்றை எடுத்துக்கொண்டு ஓடியது தவறு'' என்றார் `மனிதி' செல்வி.