Published:Updated:

சித்த மருத்துவம்மீது நம்பிக்கையை விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்! #WorldSiddhaDay

சித்த மருத்துவம்மீது நம்பிக்கையை விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்! #WorldSiddhaDay
சித்த மருத்துவம்மீது நம்பிக்கையை விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்! #WorldSiddhaDay

`சித்த மருந்துகள் நோய்களை விரைவாகக் குணப்படுத்தத் தவறுகிறது' என்று சித்த மருத்துவத்தின்மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. முதலில் சித்தா மருந்துகளும் அலோபதி மருந்துகளும் ஒன்றில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

ச்சிலைச் சாறு உட்கொண்ட வாலிபர் மரணம், இயற்கை வழி பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பலி... இதுபோன்ற செய்திகளை தினசரி பத்திரிகைகளில் அவ்வப்போது பார்க்க முடிகிறது. இவை சித்த மருத்துவமா, சித்த மருத்துவம் என்றால் என்ன? இன்றைய அவசர உலகத்தில் சித்த மருத்துவம் சாத்தியமா? இதுபோன்ற கேள்விகள் நம்மிடம் அதிகம் காணப்படுகின்றன.

இன்று உலக சித்த மருத்துவ தினம். இதுபற்றி அரசு சித்த மருத்துவர் ஸ்ரீராமிடம் கேட்டோம். விரிவாகப் பேசினார்.

`` `அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே'

இதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை. நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்களின் கலவையாகவே நம் உடலின் உள்ளேயும் வெவ்வேறு விகிதத்தில் அமைந்துள்ளன. மேலும், நம் உடலை வாதம் (காற்று), பித்தம் (தீ), கபம் (நீர்) ஆகிய உயிர்த்தாதுக்கள்தான் இயக்குகின்றன. இவை அனைத்தும் அடிப்படையில் ஒரே விகிதத்தில் அமைந்திருக்கும். அதன் விகிதம் மாறும்போதுதான் நோய் உண்டாகும். நாம் உண்ணும் உணவுகளின் சுவை, அவற்றின் தன்மை, வீரியம் போன்றவற்றைப் பொறுத்தும் நோய் உண்டாகும். மேலும், ஆங்கில மருத்துவத்தைப்போல் அல்லாமல் இதில் எல்லோருக்கும் ஒரே மருத்துவமுறை கிடையாது. ஒருவரின் உடலமைப்பைப் பொறுத்து வாதம், பித்தம், கபம் என பிரித்து வைத்துள்ளனர். அதன் பொருட்டே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது உடல் தன்மையைப் பொறுத்து சிகிச்சை முறைகள் வேறுபடும். 

`சித்த மருந்துகள் நோய்களை விரைவாகக் குணப்படுத்தத் தவறுகின்றன' என்று சித்த மருத்துவத்தின்மீது குற்றச்சாட்டு  வைக்கப்படுகிறது. முதலில் சித்தா மருந்துகளும் அலோபதி மருந்துகளும் ஒன்றில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். சித்தமருத்துவம் நாடி மூலமாகவும் நீர்க்குறி, நெய்க்குறி மூலமாகவும் நோயின் தன்மை மற்றும் காரணத்தை அறிந்து அதை அழிக்கக்கூடியது. சித்த மருந்துகளை உட்கொள்ளும்போது முதலில் பேதிக்கு மருந்து சாப்பிட்டு, எண்ணெய் தேய்த்து தலைக்குக் குளித்த பிறகே நோயின் வன்மைக்கேற்ற மருந்துகளைத் தகுந்த அளவு சாப்பிட வேண்டும்‌. அத்துடன் தவறாமல் மருந்துக்கேற்ற பத்தியம் இருந்தால் எதிர்பார்த்த குணம் கிடைக்கும். இதுதான் சித்தமருத்துவத்தின் 'லைன் ஆஃப் ட்ரீட்மென்ட்' (Line of Treament). 

பண்டைய காலங்களில் வேண்டுமானால், சித்த மருந்துகளின் தரம் பற்றிய கேள்வி எழுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால், இன்றோ வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியுடனும், பரிசோதனை முறைகளுடனும்தான் இன்றைய சித்தமருத்துவம் இருக்கிறது‌. இன்றைய உலகில் சித்தர் நூல்களிலுள்ள செய்முறைகளுடன் மட்டுமல்லாமல் முறையான பரிசோதனைக்கும், தரமதிப்பீடுகளுக்கும் உட்பட்டே ஒவ்வொரு சித்த மருந்துகளும் சந்தைக்கு வருகின்றன. ஒருவேளை சித்த மருத்துவர்கள் சொந்தமாக மருந்து தயாரித்தாலும்கூட அவற்றை முறையான மதிப்பீடு மற்றும் சோதனைகளான `செல் லைன் டெஸ்ட், அனிமல் டெஸ்ட்' (Cell line test, Animal test) போன்றவற்றுக்கு உட்படுத்தாமலும், முறையான `காப்புரிமை' (Patent) பெறாமலும் மருத்துவமனைகளில் விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மற்ற மருத்துவமுறைகளைப் போலவே சித்தமருத்துவத்துக்கென பிரத்யேக ஆராய்ச்சிக் கழகம் செயல்பட்டு வருகிறது. Central Council Research in Siddha (CCRS) என்ற மத்திய அரசு நிறுவனம் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது. இப்படியாக பல்வேறு ஆராய்ச்சிகளையும் பல்வேறுகட்ட தொழில்நுட்ப உத்திகளையும் கொண்டே இன்றைய சித்த மருத்துவம் செயல்படுகிறது. ஆனால், இவை எவற்றையும் தெரிந்துகொள்ளாமல் பாட்டி வைத்தியம், நாட்டு வைத்தியம் போன்றவை முறையாகப் பரிசோதனை செய்யப்படாமல் இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் அறைகூவல் விடுத்து எள்ளலுக்கு உட்படுத்துவது முற்றிலும் தவறானது.

மேலும், டி.வி நிகழ்ச்சிகளில் வரும் போலி மருத்துவர்கள் தங்களது பெயருக்குக் பின்னால் `சித்தா' என்று போட்டுக்கொள்வது குறை கண்டுபிடிப்பவர்களுக்கு சற்று மகிழ்ச்சியாக அமைந்துவிடுகிறது. இத்தகைய போலி மருத்துவர்கள்தான் மக்களிடையே சித்தமருத்துவம் பற்றிய தவறான தகவல்களைக் கொண்டுசேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். முறையாகச் சித்த மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறாமல் நிகழ்ச்சி நடத்தும் இத்தகைய போலி மருத்துவர்களின் நிகழ்ச்சிகளைத் தடை செய்யக் கோரிய சுற்றறிக்கை இந்திய மருத்துவக் கழகத்திலிருந்து அத்தனை தொலைக்காட்சிகளுக்கும் அனுப்பப்பட்டது. 

முன்பெல்லாம் வெறும் சித்த மருத்துவ நூல்களை மட்டுமே படித்து, பட்டம் பெற்று மருத்துவம் பார்த்து வந்தனர். ஆனால், இன்றைக்கு  ஃபார்மகாலஜியைத் தவிர அலோபதி மருத்துவ மாணவர்கள் படிக்கும் அதே மாடர்ன் சப்ஜெக்ட்டுகளையும் சித்த மருத்துவ மாணவர்கள் படிக்கிறார்கள். அதற்கு இணையாகக் குணபாடம் என்னும் மருந்துகள் மற்றும் மருத்துவச் செய்முறைகள் பற்றிய பாடம் இருக்கிறது. மற்றபடி அலோபதியில் இருக்கும் அத்தனை பாடப்பிரிவுகளுக்கும் இணையான சித்த மருத்துவப் பாடங்களையும் படிக்கின்றனர். இதனால், `கம்பேரட்டிவ் ஸ்டடி' (Comparative Study) சாத்தியமாகிறது. இதைத் தவிர பட்டமேற்படிப்பில் பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் உட்பட 8 பிரிவுகள் இருக்கின்றன. தேசிய சித்த மருத்துவக் கழகம் (National Institute of Siddha) என்னும் மத்திய அரசின் சிறப்புவாய்ந்த கல்லூரி அத்தனை ஆயுஷ் மருத்துவமனைகளுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது. 

சித்த மருத்துவம் இன்றைக்கு இந்தியாவைத் தாண்டியும் உலக அளவில் தன் இருப்பை நிலை நிறுத்தியுள்ளது. அதற்கான முக்கியக் காரணம் சித்த மருத்துவத்தின் மருத்துவ முறைகள்தான். உள் மருத்துவம் என்பதில் 32 வகைகளும், புற மருத்துவம் என்பதில் 32 வகைகளும் என இருபெரும் பிரிவுகளுடன் மொத்தம் 64 வகையான மருந்துகளையும், மருத்துவ முறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும், புற மருத்துவ முறைகளில் அனைவருக்கும் தெரிந்த வர்மம், தொக்கணம் மட்டுமல்லாமல் அட்டைவிடல், பொடி திமிர்தல் போன்ற புற மருத்துவ சிகிச்சை முறைகளால் தீர்க்க முடியாத நோய்களும் தீர்ந்துள்ளன. உலக சுகாதார மையத்தால் 'தீர்க்க முடியாத நோய்கள்' என வரையறுக்கப்பட்ட நோய்களுக்குக்கூடச் சித்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்களின் தாக்கத்திலிருந்து பெரிய முன்னேற்றம் காணப்படுகிறது. பல மருத்துவர்களால் சிகிச்சையின்றி கைவிடப்பட்ட `செரிபிரல் பால்சி' (Cerebral Palsy) என்னும் குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோயை 'பொடி திமிர்தல்' என்னும் முறைப்படி குணப்படுத்துவது சித்தமருத்துவத்தால் மட்டுமே சாத்தியம்.

சித்த மருத்துவத்தில் பெரிதாக நோய்களைப் பற்றிய விழிப்பு உணர்வுகள் இல்லை, ஒழுங்கான ஆராய்ச்சிகள் இல்லை எனக் கூறுபவர்கள் கூகுளில் `Research papers in siddha, Cancer studies in siddha' என்று `டைப்' செய்து பார்த்தால், அதில் வரும் தரவுகள் பதில் சொல்லும். புற்று நோய் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்கு நித்தியக்கல்யாணியில் தொடங்கி ஏராளமான சித்த மருத்துவ மருந்துகள் ஏராளம் உள்ளன. இவை விஞ்ஞானிகளால் உரிய ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டவை. இன்றைக்குச் சித்த மருத்துவத்தில் ஆய்வு செய்யப்படாமல் எந்த மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இல்லை. மொத்தத்தில் இன்றைய நடைமுறைக்கேற்ப புதிய மாற்றங்களோடும் அதன் தனித்தன்மை மாறாமலும் செயல்பட்டு வருகிறது. ஆனால், எவ்வளவு மாற்றங்கள் வந்தாலும் சித்தர்களின் கூற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மருந்து செய்முறைகளும் சிகிச்சைகளும் நடைபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 

சித்த மருத்துவத்தைப் பொறுத்தமட்டில் அதன் அடிப்படைகளை மீறியோ, அவற்றை மறந்தோ மருத்துவம் பார்த்தால் செயல்படாமல் போய்விடும். அத்தகைய கட்டமைப்பைக் கொண்டது இந்த மருத்துவம். இப்படியாக, பல்வேறு படிமங்களையும் அடுக்குகளையும் கொண்டதே சித்த மருத்துவம். அத்தகைய மருத்துவத்தை நாம் வெறுமனே கடந்துபோவதோ மற்றவற்றுடன் ஒப்பிடுவதோ, குறை காண்பதோ, எள்ளலுக்கு உட்படுத்துவதோ முற்றிலும் அபத்தமானது. மக்களே சற்று உங்களின் பார்வையை உங்கள் மருத்துவத்துக்குத் திருப்புங்கள். அதன்மீது கொஞ்சம் நம்பிக்கை வைத்தால்போதும்; அது பன்மடங்காக உங்களுக்குத் திருப்பி செய்யும். 

உங்கள் பகுதியிலிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு சித்த மருத்துவர் கண்டிப்பாக இருப்பார். அவரிடம் போய் உரையாடுங்கள். உங்கள் கேள்விகள், குறைகள், சந்தேகங்களை அவர்முன் அடுக்குங்கள்; அவர் நிச்சயம் பதில் சொல்வார். எல்லாம் முடிந்த பிறகு, சித்த மருத்துவம் பற்றிய தேவையில்லாத பகடிகளையோ எள்ளல்களையோ தவறான ஃபார்வர்டு மெசேஜ்களையோ தயவுகூர்ந்து அனுப்பாதீர்கள். உங்களைப் போன்ற சித்தத்தை மதிக்காதவர்கள் நம்புவார்கள்‌; அது பொருட்டல்ல. ஆனால், சித்த மருத்துவத்தை மதித்துப் பின்பற்றுபவர்களும் நம்பி ஏமாறுவார்கள்‌. அதனால், ஏற்படும் வீழ்ச்சிதான் தாளாதது. முடிந்தால் சித்த மருத்துவம் பற்றிய நம்பிக்கையை அனைவர் மனதிலும் விதையுங்கள்; அது விருட்சமாக வளரும்'' என்கிறார் ஸ்ரீராம்.

அடுத்த கட்டுரைக்கு