Published:Updated:

`தமிழர்களை விரட்டியடியுங்கள்!' - `தாக்கரே' படத்தின் டிரெய்லருக்குக் குவியும் கண்டனங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`தமிழர்களை விரட்டியடியுங்கள்!' - `தாக்கரே' படத்தின் டிரெய்லருக்குக் குவியும் கண்டனங்கள்
`தமிழர்களை விரட்டியடியுங்கள்!' - `தாக்கரே' படத்தின் டிரெய்லருக்குக் குவியும் கண்டனங்கள்

மேடையில் பேசும் தாக்கரே, ``தென்னிந்தியர்கள் நம்முடைய அனைத்து வேலை வாய்ப்புகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். அவர்களின் லுங்கியை அவிழ்த்து, அவர்களை விரட்டுவோம்!' என்று வசவுச் சொல்லோடு கூறுகிறார்.

பால் தாக்கரே மறைந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. மராட்டிய இனப் பற்றாளர்களாலும் இந்துத்துவ அமைப்புகளாலும் ஹீரோவாகக் கொண்டாடப்படும் பால் தாக்கரே கடும் சர்ச்சைகளுக்குள்ளானவர்; 'இனவெறியையும் மதவெறியையும் தூண்டி, கலவரங்களை உண்டாக்கியவர்' என இன்றும் அவர் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பால் தாக்கரேவின் 93-வது பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

'தாக்கரே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் இந்தி, மராட்டி ஆகிய இரு மொழிகளில் வெளியாகிறது. பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திகி, பால் தாக்கரே வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை எழுதியிருப்பதோடு, இணை தயாரிப்பாளராகவும் இருப்பவர் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத். சிவசேனாவின் திரைப்படமாகவே 'தாக்கரே' உருவாகியுள்ளது. மராட்டிய இயக்குநர் அபிஜித் பன்சே இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 

இரண்டு மொழிகளில் வெளியிடப்படும் படம் என்பதால், தனித்தனி டிரெய்லர்கள் வெளியிடப்பட்டன. சமீப காலத்தில் வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு அந்த மொழியின் பார்வையாளர்களுக்கேற்ப டிரெய்லர்கள் தொகுக்கப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன் வெளியான 'விஸ்வரூபம் -2' திரைப்படத்தின் டிரெய்லர் தமிழில் ஒரு வெர்ஷனிலும் இந்தியில் வேறொரு வெர்ஷனிலும் வெளியிடப்பட்டன. அது சர்ச்சையை எழுப்பியது. 'தாக்கரே' டிரெய்லரும் தற்போது அதே பாணியில் வெளிவந்திருக்கிறது.

இந்தி டிரெய்லர் மும்பை நகரத்தில் கடைகள் அடைக்கப்பட்டு, இஸ்லாமியர்கள் கலவரம் செய்வதாகத் தொடங்குகிறது. "எனக்கு மும்பையில் அமைதி நிலவ வேண்டும்" என்று ஒரு குரல் பேச, மற்றொரு குரல், "இந்த நேரத்தில் ஒருவரால் மட்டும்தான் மும்பைக்கு அமைதியைத் தர முடியும்" என்பதோடு புலியின் உறுமல் ஒலியோடு நவாசுதீன் சித்திகி, பால் தாக்கரேவாகக் காட்டப்படுகிறார். மக்களைத் திரட்டி மாநில உரிமைகளுக்காகப் போராடும் நபராகக் காட்டப்படுகிறார் தாக்கரே. இந்திரா காந்தியிடம் 'முதலில் இந்திய தேசம்; பிறகுதான் மராட்டிய மாநிலம்!' என்று பேசுகிறார். இந்தி பார்வையாளர்களுக்கான வெர்ஷன் இப்படியிருக்க, மராட்டியில் தாக்கரேவின் மற்றொரு முகம் வெளிப்படுகிறது. அதுதான் தற்போதைய சர்ச்சைகளுக்கும் காரணம். 

மராட்டி டிரெய்லரில் சாமான்யனாக வாழும் தாக்கரே, மலையாளி ஒருவர் மீது மோதிவிட, தாக்கரேவை 'பட்டி!' எனத் திட்டுகிறார் அந்த மலையாளி. அடுத்தடுத்த காட்சிகளில் மும்பை நகரத்தில் தமிழ் எழுத்துகளுடைய கடைகள் தென்படுகின்றன. மேடையில் பேசும் தாக்கரே, "தென்னிந்தியர்கள் நம்முடைய அனைத்து வேலை வாய்ப்புகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். இட்லி விற்கும் கடைகளில் பாத்திரங்களைக் கழுவுவதற்கும்கூட அவர்களே ஆள்களை அழைத்து வருகின்றனர். அவர்களின் லுங்கியை அவிழ்த்து, விரட்டியடிப்போம்!' என்று வசவுச் சொல்லோடு கூறுகிறார். லுங்கி அணிந்த மனிதர்கள் சென்றுகொண்டிருக்கும், 'உடுப்பி ஹோட்டல்' மீது கற்கள் எறியப்படுகின்றன. இந்தி டிரெய்லரில் காட்டப்பட்ட 1993 மும்பை வன்முறைகள் இதிலும் காட்டப்படுகின்றன. 

பால் தாக்கரே தன்னுடைய அரசியல் வாழ்க்கை முழுவதும் 'மகாராஷ்ட்ரா மராட்டியர்களுக்கே!' என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கினார். அது மற்ற மாநிலங்களைப்போல போராட்டங்களாக இல்லாமல், வன்முறையாக வெளிப்பட்டது. பால் தாக்கரே மீது இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன; அவற்றில் பெரும்பாலானவை சட்டப்பிரிவு 153ஏ - மக்களுக்கு இடையில் சாதி, மத, இன அடிப்படையில் பகைமையைத் தூண்டுதல் - என்பதன் கீழ் இருந்தன. 

அவரது அரசியல் வாழ்க்கை முற்பகுதியில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் மீதும், 1990-களில் இஸ்லாமியர்கள் மீதும், பிற்காலத்தில் வட இந்தியர்கள் மீதும் வன்முறையைப் பரப்புவதாக இருந்தது. பாபர் மசூதி இடிப்புக்குப் பின், மும்பையில் நிகழ்ந்த வன்முறையில் பால் தாக்கரேவுக்கும் அவரின் சிவசேனா கட்சிக்கும் பெரும் பங்கு உள்ளதாக மகாராஷ்ட்ரா அரசு அமைத்த நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் குற்றம் சாட்டியது. பால் தாக்கரேவின் சிவசேனா கட்சி, ஆட்சியமைத்த பின், நீதியரசர் ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் கலைக்கப்பட்டது. 

'தாக்கரே' டிரெய்லர் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சையை நடிகர் சித்தார்த் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டித்துள்ளார். 'அதீத ஹீரோயிசத்தை விற்பதற்காக மும்பையைச் சிறந்த நகரமாக வைத்திருக்க உழைக்கும் தென்னிந்தியர்களையும், பிற மாநிலத்தவரையும் எதிரிகளாகச் சித்திரிக்கிறது இந்தப் படம். வரப்போகும் தேர்தலுக்கு வாழ்த்துகள்!' எனவும் கடுமையாகச் சாடியுள்ளார் நடிகர் சித்தார்த். 

மேலும், `தன் கட்சியின் படத்தில், மராட்டியத்தை உயர்த்திப் பேசிய தாக்கரேவாக நடிப்பவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர் என்பது மிகப்பெரிய முரண்பாடு' எனவும் சித்தார்த் கூறியுள்ளார். 

2016-ம் ஆண்டு, நவாசுதீன் சித்திகி, தன் சொந்தக் கிராமத்தில் ராமாயண வீதி நாடகத்தில் நடிக்க விரும்பியபோது, சிவ சேனா கட்சியினர் நவாசுதீன் சித்திகியை இஸ்லாமியர் என்பதற்காக நாடகத்தில் இருந்து அவரை விலக்குவதற்காகப் போராட்டங்கள் நடத்தினர். தற்போது சிவ சேனா கட்சியைத் தோற்றுவித்தவராக நவாசுதீன் நடித்திருக்கிறார். 

தணிக்கைத் துறையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்கக் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி 'தாக்கரே' படத்தின் இணை தயாரிப்பாளரும், சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் பேசியபோது, "பாலாசாகேப் தாக்கரேவின் வாழ்க்கையை அப்படியே திரைப்படமாக்கி இருக்கிறோம். அவரது கருத்துகளையும் அவர் பேசியதையும்தான் படமாக வெளியிடப் போகிறோம். இதைத் தணிக்கைத் துறையால் தடைசெய்துவிட முடியாது" எனக் கூறியுள்ளார். 

சஞ்சய் ராவத் கூறியுள்ளதுபோல, பால் தாக்கரேவைப் புனிதராக மாற்றுவதுதான் ஆபத்தானது; அவரது வாழ்க்கையை அப்படியே திரைப்படமாக்குவது அல்ல.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு