Published:Updated:

`விண்வெளியில் 7 நாள்கள் தங்கப்போகும் 3 இந்தியர்கள்!’ - ரூ.10,000 கோடி ககன்யான் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

`விண்வெளியில் 7 நாள்கள் தங்கப்போகும் 3 இந்தியர்கள்!’ - ரூ.10,000 கோடி ககன்யான் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
`விண்வெளியில் 7 நாள்கள் தங்கப்போகும் 3 இந்தியர்கள்!’ - ரூ.10,000 கோடி ககன்யான் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி நாட்டுமக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 2022-ம் ஆண்டுக்குள் இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் (ககன்யான்) நிறைவேற்றப்படும் என்று பேசியிருந்தார். ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்பும் பணிகளை இஸ்ரோ மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்தத் திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இஸ்ரோவின் தலைவர் சிவன் கூறியிருந்த நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியிருக்கிறது. 

ககன்யான் திட்டம் மூலம் இந்தியர்கள் 3 பேரை 7 நாள்களுக்கு விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டிருக்கிறது. இந்தத் திட்டத்துக்கான செலவு ரூ.10,000 கோடி என மதிப்பிடப்பட்டு அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட இருக்கிறது. ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக இரண்டு ஆளில்லா விண்கலங்கள் செலுத்தப்பட இருக்கின்றன. அதன் வெற்றிக்குப் பின்னர் மூன்றாவதாக 3 விண்வெளி வீரர்களுடன் விண்கலம் செலுத்தப்பட இருக்கிறது. 2020 வாக்கில் முதல் விண்கலம் பயணப்பட இருக்கிறது. 

மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து இஸ்ரோ, ககன்யான் திட்டத்துக்கான வேலைகளைத் துரிதப்படுத்த இருக்கிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதன் மூலம் அப்போதைய சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். விண்வெளிக்கு மனிதர்களை 2022-ம் ஆண்டுக்குள் அனுப்பும் திட்டத்தில் டென்மார்க் நாடும் இருப்பது குறிப்பிடத்தக்கது.