Published:Updated:

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு. தற்கொலை செய்து கொண்ட ஊழியர்... ஜென்பாக்டில் என்ன நடந்தது?

கடந்த டிசம்பர் 18ம் தேதி, ஜென்பாக்ட் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்வரூப் ராஜ் என்பவர் தன் அப்பார்ட்மென்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காரணம், அவர் மீது அவரின் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஜூனியர் பெண் ஊழியர்கள், பாலியல் புகார் அளித்ததுதான்.

பாலியல் தொல்லை குற்றச்சாட்டு. தற்கொலை செய்து கொண்ட ஊழியர்... ஜென்பாக்டில் என்ன நடந்தது?
பாலியல் தொல்லை குற்றச்சாட்டு. தற்கொலை செய்து கொண்ட ஊழியர்... ஜென்பாக்டில் என்ன நடந்தது?

லகையே அதிர வைத்த `மீ டு' இயக்கத்தின் ஆரம்பப் புள்ளியே பணியிடங்களில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைதான். எழுத்து, கலை, தொழில்நுட்பம் எனப்  பல துறைகளில் இதுகுறித்த விழிப்புஉணர்வு விவாதங்களும் பல்வேறு தளங்களில் நடந்துகொண்டிருக்க, இந்தப் பாலியல் புகாரை எதிர்கொள்ள  முடியாத ஆண்கள் நிலையோ அல்லது போலியான பாலியல் புகாரினால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தோ நாம் பெரிதாகச் சிந்திக்கவில்லை. ஆனால், சமீபத்தில் கிரெட்டர் நோய்டாவில் நடந்த ஒரு சம்பவம், இதற்கான ஓர் ஆரம்பத்தை அளித்திருக்கிறது என்றே கூறலாம். 

கடந்த டிசம்பர் 18ம் தேதி, ஜென்பாக்ட் என்ற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்வரூப் ராஜ் என்பவர் தன் அப்பார்ட்மென்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காரணம், அவர் மீது அவரின் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஜூனியர் பெண் ஊழியர்கள், பாலியல் புகார் அளித்ததுதான். அந்தப் புகாரை விசாரித்த இன்டர்நெல் கமிட்டி, விசாரணை முடியும்வரை, அவரைப் பணி இடைநீக்கம் செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்துதான், அவர் இந்த விபரீத முடிவை எடுத்தார். அதற்கு முன்னர், தன் மனைவிக்கு அவர் எழுதிய கடிதத்தில், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் ஆனால் நிறுவனத்தில் உள்ளவர்களுக்கு இதுபற்றித் தெரிந்ததால்...  எப்படி எதிர்கொள்ள முடியும். அந்தத் துணிவு இல்லாததால் இந்த முடிவை எடுக்கிறேன்'என்று எழுதியிருந்தார்.


இதையடுத்து, அவர் நிறுவனத்தைச் சேர்ந்த 7 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஸ்வரூப்பின் குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ‘சேவ் இந்தியா பேமிலி’ அமைப்பைச் சேர்ந்த பலரும், ஸ்வரூப் பணிபுரிந்த அலுவலகத்தின் முன் கடந்த திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து ஸ்வரூப்பின் தந்தை பி.கே ரங்கன் பேசுகையில், ``நாங்கள் இந்த விவகாரம் தெரிந்த ஆரம்ப முதலே, அவர் குற்றமற்றவர் என்று கூறி வருகிறோம். எந்த வித முன் அறிவிப்புமின்றி அவரைப் பணி இடை நீக்கம் செய்தது மிகவும் கொடூரமான செயல். இது தற்கொலை இல்லை; கொலை! இதற்கு அந்த நிறுவனம் விளக்கமளித்தே ஆக வேண்டும்!”, என்று கூறினார். 

அதே சமயம்,  ஜென்பக்ட் நிறுவனம், தன் இரங்கல் அறிக்கையில், ``எதிர்பாராமல் நடந்த இந்தச் சம்பவத்தில் ஸ்வரூஃப் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் போலவே எங்கள் ஊழியரின் இழப்பைப் பார்க்கிறோம். இந்தச் சம்பவத்தில் எங்கள் நிறுவனம் சட்டத்துக்கு முழுமனதுடன் ஒத்துழைப்பு கொடுக்கும்'', என்று அறிக்கை விடுத்திருக்கிறது. 

இதற்கிடையில், ஸ்வரூப் மீது புகார் அளித்த பெண்கள் `டிசம்பர் மாதம் நடந்த அலுவலக நிகழ்ச்சியில் அவரின் காரில் சென்ற எங்களிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றார் என்றும் தேவையில்லாத பல குறுஞ்செய்திகளைத் தொடர்ந்து அவர் அனுப்பினார்'' என்றும் கூறியுள்ளனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சமூகவலைதளங்களிலும் பல விவாதங்கள் தொடங்கியுள்ளன. `அவர் குற்றமற்றவர் என்றால் அதை நிரூபிக்க வேண்டியதுதானே'' என்று ஒரு தரப்பு கூற, `பெண்கள் இத்தகைய விஷயங்களை ஆயுதமாகக் கொண்டுள்ளனர்’ என்று மறு தரப்பும், `அவரின் தற்கொலைக்கு அந்த இரண்டு பெண்கள் காரணமாக முடியாது!” என்றும் விவாதங்கள் சூடாகக் கிளம்புகின்றன. இது குறித்து நொய்டாவின் காவல் அதிகாரி அஜய் பால் ஷர்மா கூறுகையில், ``தன் மீதுள்ள புகாரால் குற்றஉணர்ச்சிக்கு ஆளாகி அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் அல்லது அவரைச் சுற்றி சூழ்ச்சி நடந்திருக்கலாம். விசாரித்து வருகிறோம்'' என்று பதில் அளித்திருக்கிறார். 

ஆனால், அடிப்படையில் இந்தச் சம்பவம் உணர்த்துவது,  #metoo இயக்கத்தை நாம் இன்னும் விசாலமான கண்ணோட்டத்தில் அணுகி தீர்வு காண வேண்டும் என்பதுதான்!