Published:Updated:

`உருளைக்கிழங்கு, களிமண்ணாலான குண்டுகள்!’ - கலவரங்களைக் கட்டுப்படுத்த கும்பகோணம் இளைஞர் உருவாக்கிய நவீன துப்பாக்கி

`உருளைக்கிழங்கு, களிமண்ணாலான குண்டுகள்!’ - கலவரங்களைக் கட்டுப்படுத்த கும்பகோணம் இளைஞர் உருவாக்கிய நவீன துப்பாக்கி
`உருளைக்கிழங்கு, களிமண்ணாலான குண்டுகள்!’ - கலவரங்களைக் கட்டுப்படுத்த கும்பகோணம் இளைஞர் உருவாக்கிய நவீன துப்பாக்கி

அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் போராடும் போதும், கலவரம் ஏற்படும் சூழல் உள்ள போதும் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கூட்டத்தைக் கலைப்பார்கள். இது போன்ற சமயங்களில் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுவதுண்டு. துப்பாக்கியில் சுட்டாலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் புதியவடிவிலான நவீன ரக துப்பாக்கியைக் கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார். தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியபோது  நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். அதன் பாதிப்பிலேயே இந்தப் புதிய துப்பாக்கியைக் கண்டுபிடித்துள்ளதாக உருக்கமுடன் அந்த இளைஞர் பேசினார்.  

கும்பகோணம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரின் மகன் சரவணன். இவர் ரஷ்யாவில் அவனிக்ஸ் என்ற தொழில்நுட்பப் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர். தனது படிப்புக்குப் பிறகு, தன் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு அறிவுபூர்வமான ஆய்வை மேற்கொண்டு வருவதோடு புதிய தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான சம்பவம் சரவணன் மனதைப் பாதித்தது. இதைத் தொடர்ந்து கலவரத்தின்போது உயிர் சேதம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர என்ன செய்யலாம் என்று கடந்த 3 மாதமாகச் சிந்தித்ததன் விளைவாக சுமார் 7 அடி நீளமுள்ள புதிய வகை துப்பாக்கியை அவர் உருவாக்கி இருக்கிறார்.

இதன் செயல்முறை விளக்கத்தை செய்தியாளர்களுக்கு சரவணன் செய்துகாட்டினார். அவர் கூறுகையில், ``என் தந்தை சாதாரண வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். எனக்கு ஒரு தங்கை அவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். நான் சிறு வயது முதல் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி பேசுவதும் அதைச் செய்வதுமாக இருந்தேன். இதற்கு என் குடும்பம்  சிறந்த ஒத்துழைப்பை அளித்தது. இதன் அடிப்படையில் நான் ப்ளஸ் டூ படித்த பிற்கு, ரஷ்யாவில் உள்ள உக்ரைன் பல்கலைக்கழகத்தில் அவனிக்ஸ் என்ற தொழில்நுட்பப் பொறியியல் படிப்பை 3 ஆண்டுக்காலம் படித்தேன்.

படிப்பு முடிந்ததும் எனக்கு பல நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வந்தபோதிலும் வேலைக்குச் செல்லாமல் நான் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் செலுத்தியதோடு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல பொருள்களைக் கண்டுபிடித்துள்ளேன். இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது தூத்துக்குடியில் நடத்தப்பட்ட  துப்பாக்கிச்சூட்டில் பலர் இறந்தது மனதளவில் என்னை பெரிதும் பாதித்தது. இனி இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களின்போது உயிரிழப்பு ஏற்படாமல் கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதி நிலைக்குக் கொண்டுவர புதிதாக ஏதாவது கருவி கண்டுபிடிக்க வேண்டும் என நினைத்து அதில் ஆர்வம் செலுத்தி ஆய்வு செய்து தேட ஆரம்பித்தேன். 

எனது ஆய்வின் முடிவில் இந்த 7 அடி நீளம் கொண்ட புதிய வகை துப்பாக்கியை வடிவமைத்தேன். இதைக் கையாள்வது மிகவும் எளிது. இந்தத் துப்பாக்கியில் உருண்டை வடிவில் உள்ள உருளைக்கிழங்கு மற்றும் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட உருண்டை வடிவிலான பொருள்களைக் குண்டாகப் பயன்படுத்தலாம். அந்தக் குண்டை உள்ளே வைத்து எலக்ட்ரானிக் மற்றும் வாயு அழுத்தம் மூலம் இயக்கினால் இதில் உள்ளே உள்ள குண்டு சுமார் 500 மீட்டர் தூரம் வரை வேகமாகச் சென்று எதிரில் உள்ளவர்களைத் தாக்கும். இதனால் குண்டுபடும் இடத்தில் லேசான காயம் ஏற்பட்டு வலிக்குமே தவிர, உயிர்ச் சேதம் ஏற்படாது. 

இந்தக் கண்டுபிடிப்பைப் பாதுகாப்புத்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல உள்ளேன். அதன் மூலம் எனது கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன். மேலும் 7 அடி கொண்ட இந்தத் துப்பாக்கியை சிறிய அளவில் உருவாக்குவதற்கான திட்டமும் உள்ளது. போதுமான பொருளாதார வசதி இல்லாததால் இதற்கான செயல்களில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதைச் செயல்படுத்த அரசு எனக்கு பொருளாதார உதவி செய்வதோடு அரசின் அறிவியல் துறை ஒத்துழைப்பும் கிடைத்தால் சிறிய ரக துப்பாக்கியை உருவாக்கி, அரசுக்கு சமர்ப்பிப்பேன்’’ என்றார்.