Published:Updated:

மேலாளர் முதல் காவலாளி வரை... பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்

மேலாளர் முதல் காவலாளி வரை... பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்
மேலாளர் முதல் காவலாளி வரை... பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால்

பெண்களுக்காக பெண்களே நடத்தும் இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால் கோழிக்கோட்டில் தொடங்கி செயல்பட்டுவருகிறது. பெண்களைத் தொழில் முனைவோராக மாற்றும் குடும்பஸ்ரீ திட்டத்துக்குக் கேரளத்தில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கேரள அரசு பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்த 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது குடும்பஸ்ரீ என்ற திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களைச் சொந்தக்காலில் நிற்கவைத்து வருகிறது அரசு. இந்தத் திட்டத்தின் மூலம் பட்டியலின பெண்கள் மட்டும் நடத்தும் கஃபேஸ்ரீ கேண்டீன் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி கோழிக்கோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டது. இந்தியாவிலே பட்டியலின பெண்கள் மட்டும் இணைந்து நடத்தும் முதல் உணவகம் என்ற பெருமையை பெற்றது இந்த கேண்டீன். 15 பெண்கள் இணைந்து நடத்தும் இந்த கேண்டீனுக்கு கோழிக்கோடு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கோழிக்கோடு மாநகராட்சியின் அடுத்த முயற்சியாகப் பெண்களுக்காகப் பெண்களே இணைந்து நடத்தும் இந்தியாவின் முதல் ஷாப்பிங்மால் கோழிக்கோடு வயநாடு சாலையில் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.5 கோடி செலவில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் செயல்படும் இந்த மகிளா மாலை கடந்த மாதம் இறுதியில் முதல்வர் பினராயி விஜயன் திறந்துவைத்தார். மேலாளர் தொடங்கி காவலாளி வரை அனைத்து பொறுப்பிலும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களை மட்டும் வாடிக்கையாளர்களாகக் கொண்ட வங்கி, ஏ.டி.எம், யோகா சென்டர், கட்டுமான நிறுவனம் என 79 வகையான ஸ்தாபனங்கள் பெண்களுக்காக மட்டுமே இயங்குகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு மையம், உணவகம் என வாரநாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11 மணிவரை ஷாப்பிங் செய்யலாம். இந்தியாவில் பெண்கள் நடத்தும் முதல் ஷாப்பிங் மாலை பார்வையிடுவதற்காகவே மக்கள் இங்கு கூடுகிறார்கள்.

இதுகுறித்து கோழிக்கோடு மாநகராட்சி குடும்பஸ்ரீ திட்ட அலுவலர் ரம்சி இஸ்மாயில் கூறுகையில், ``கேரள அரசின் உள்ளாட்சித் துறையின் கீழ் குடும்பஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடும்பஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதில் கோழிக்கோடு மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைச் சொந்தக்காலில் நிற்கவைக்கிறோம். பெண்கள் நடத்தும் உணவகமாக இருந்தாலும் சரி, ஷாப்பிங் மாலாக இருந்தாலும் சரி வரவு செலவு என அனைத்தையும் பெண்கள் பொறுப்பிலே விட்டுள்ளோம். இதுமட்டுமல்லாது பயன்படுத்திய துணிகளை வீணாக எறிந்துவிடாமல் ஏழைகளுக்கு வழங்கும் ட்ரஸ் பேங்க், மருந்துகளைப் பெற்று தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் ட்ரக் பேங்க் ஆகியவற்றை நடத்திவருகிறோம்.

கோழிக்கோடு நகரத்தில் சுத்திகரிக்கப்பட்ட கேன் வாட்டர் தயாரித்து 'தீர்த்தம்' என்ற பெயரில் பெண்கள் விற்பனை செய்துவருகிறார்கள். பெண்கள் தனியாக வெளியூர்களுக்குச் சென்றால் தங்குவதற்கு ரூம் எடுப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். எனவே, பெண்கள் ஒரு மணிநேரத்தில் இருந்து மாதக்கணக்கில் தங்குவதற்கு குறைந்த வாடகையில் நான்கு தங்கும் விடுதிகள் நடத்துகிறோம்" என்றார்.