Published:Updated:

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி

அவள் அரங்கம்

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி

அவள் அரங்கம்

Published:Updated:
அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி
பிரீமியம் ஸ்டோரி
அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி

`மகளிர் மட்டும்' போல முழுக்க பெண்களை மையப்படுத்தியும், அதேநேரம் ஜனரஞ்சகமாகவும், வணிகரீதியில் வெற்றிபெறும் வகையிலும் படங்கள் வெளியாவது அபூர்வமாக உள்ளது. உங்களைப் போன்ற பெண் இயக்குநர்களே அந்தக் குறையைப் போக்கலாமே?

- மலர்விழி, மேட்டுப்பாளையம்

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி

சரியான கேள்வியைக் கேட்டிருக்கீங்க. எங்களுக்கு முந்தைய மற்றும் எங்கள் காலகட்டங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகம் எடுக்கப்பட்டுச்சு. அதற்கு அப்போதைய இயக்குநர்கள் மற்றும் மக்களின் ரசனை மிக முக்கியக் காரணம். அப்படிப் பல படங்களில் நான் நடிச்சிருந்தாலும், `மகளிர் மட்டும்' என் கரியரில் மிக முக்கியமான படம். முழுக்கவே மூன்று பெண்களை மையப்படுத்தி நடக்கும் கதை. அதை மிகச் சிறப்பாக இயக்கியிருந்தார், சிங்கீதம் சீனிவாச ராவ் சார். கமல்ஹாசன் சார் படத்தைத் தயாரிச்சதுடன், எனக்கு ஜோடியாக கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். நான், ஊர்வசி, ரோகிணி ஆகியோர் நிஜ லைஃப்லயும் நல்ல தோழிகள். எந்த ஈகோவும் இல்லாம படத்துக்காக இணைந்தோம். ஒரு படத்தில் நடிக்கிற உணர்வேயில்லாம, காமெடி, சென்டிமென்ட்னு மறக்க முடியாத நிறைய நினைவுகளை அந்தப் படம் கொடுத்துச்சு. தவிர, நாகேஷ் அங்கிளின் அவுட்ஸ்டாண்டிங் காமெடி, பெரிய ப்ளஸ். இப்படி ஒரு படம் மறுபடியும் எடுக்க முடியுமா? எடுக்கப்படணும் என்பதுதான் என் ஆசை. இன்னிக்குப் பெண்களை மையப்படுத்தி சில படங்கள்தான் வெளியாகுது. வணிக நோக்கத்தை மையமாகக் கொண்டிருக்கும் இன்றைய சினிமா சூழல்தான் அதற்குக் காரணம்னு நினைக்கிறேன். இந்த நிலை மாறணும். அதற்கு இயக்குநரான நானும் பொறுப்பேற்கணும். பெண்களை மையப்படுத்திய படங்களை எடுக்கும் ஆசை நிறையவே எனக்கிருக்கு. அது என் ஒருத்தியால் மட்டுமே சாத்தியப்படாது. தயாரிப்பாளர், நடிகர்கள் உட்பட நிறைய பேரின் ஒத்துழைப்பு கிடைக்கணும். எல்லாவற்றுக்கும் மேலாக, மக்களும் பெண்களை மையப்படுத்தி வெளி யாகும் படங்களை வெற்றிபெறச் செய்யணும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதிபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தேசத்தின் கவலையாக இருக்கிறது. இந்நிலை மாற, ஒரு பெண்ணாக, பெண் குழந்தையின் தாயாக உங்கள் கருத்து என்ன?

- செ.தனலட்சுமி, கோவில்பட்டி


மனதில் நிறைய வலி உண்டாகுது. தினமும் நியூஸ் பேப்பர், நியூஸ் சேனல் பார்க்கும்போதெல்லாம் தவறாமல் இத்தகைய செய்திகள் வருது. காலையில ஸ்கூல் / காலேஜ் / வேலைக்குப் போன தன் மகள் பத்திரமா வீட்டுக்கு வரணும்னு ஒரு தாய் கவலைப்படுற இன்றைய நிலைக்கா, சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கோம்? எங்க `டபிள்யு.சி.சி (Women's Collective in Cinema)' அமைப்பின் மூலம் சமீபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த அமைப்புகளுடன் உரையாட முடிந்தது. அப்போது, எல்லா நாடுகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அச்சுறுத்தலாக இருப்பது தெரியவந்தது. இந்நிலை மாறியே ஆகணும். மாற்றத்தை முதல்ல நம் வீட்டில் இருந்து தொடங்குவோம். நம் இருபால் குழந்தைகளுக்கும் நல்ல விஷயங்களை அழுத்தமா சொல்லிக்கொடுப்போம். நாம எவ்வளவு பிஸியா வேலைபார்த்தாலும், குழந்தைகளின் நட்பு வட்டாரம், உளவியல், செயல்பாடுகளை நிச்சயம் கண்காணிக்கணும். குழந்தைகள் மற்றும் பெற்றோர் உறவு ஃப்ரெண்ட்லியா இருக்கணும். கற்பிக்கப்படும் கல்வி, நிச்சயம் குழந்தைகளை எல்லா வகையிலும் மேம்படுத்துவதாக இருக்கணும். பாலியல் குற்றச்செயலில் ஈடுபடும் ஆண்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படணும். அதைப் பார்த்துப் பிறருக்கும் தப்பு செய்யக் கூடாதுங்கிற அச்சம் வரணும். பாதிக்கப்பட்ட பெண்கள் எக்காரணம் கொண்டும் துவண்டுபோய் வீட்டுக்குள் முடங்காமல் மீண்டு வரணும்; சமூகத்தில் வெற்றி பெறணும்.

`டபிள்யு.சி.சி' அமைப்பு பற்றி..?

- உஷா ராஜகோபால், வேளச்சேரி


மலையாள நடிகை ஒருவருக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு பற்றி எல்லோருக்கும் தெரியும். அவருக்குத் துணையாக இருக்க மலையாள நடிகைகள் பலரும் ஒன்றுகூடி விவாதித்தோம். அந்த நடிகைக்கு நீதியைப் பெற்றுத்தருவதோடு, திரைப்படத்துறையில் இனி எந்த ஒரு பெண்ணுக்கும் இப்படியொரு நிகழ்ச்சி நடக்கக் கூடாதுனு தீர்க்கமா முடிவெடுத்தோம். அதற்காக, உருவானதுதான் `டபிள்யு.சி.சி' (Women's Collective in Cinema)' அமைப்பு. இதில் ஒருத்தர்தான் முதன்மையானவர்னு சொல்ல முடியாது. நான், ரீமா கல்லீங்கல், கீது மோகன்தாஸ், ரம்யா நம்பீசன் உட்பட ஏழு மலையாள நடிகைகளும், மலையாள சினிமா துறையின் பல துணை அமைப்புகளைச் சேர்ந்த 18 பெண்களும், `டீம் டபிள்யு.சி.சி' அமைப்பைச் சேர்ந்த நடிகை அமலா உட்பட 40  பெண்களும் (பல துறைகளைச் சார்ந்தவர்கள்) எங்கள் குழுவில் இருக்காங்க. திரைப்படத்துறை உட்பட சமூகத்தில் எந்த ஒரு பெண்ணுக்கும், குழந்தைக்கும் பாலியல் வன்முறை நேரக் கூடாது எனத் தொடர்ந்து போராடுறோம். இது உங்ளோடு முடியப்போகிற விஷயமில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரும் சமூகப் பிரச்னைகளுக்குக் குரல் கொடுக்கணும் என்றுதான் நாங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

பாலியல் சீண்டலுக்கு உள்ளான மலையாள நடிகைக்காக, சக நடிகைகளுடன் `அம்மா' சங்கத்தில் போராடிவருகிறீர்கள். பிரபலமான நடிகைகளே ஓர் ஆக்கபூர்வமான செயலுக்கு நீண்ட காலமாகப் போராடிவருகிறீர்கள். அப்படியெனில், சாதாரண பெண்களின் நிலை?

- தரணி விமலநாதன், பெரம்பலூர்

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி

இன்றைய நிலை அப்படித்தான் இருக்கு. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் அவரின் குடும்பத்தினர் அடைந்த துயரங்கள் விவரிக்க முடியாதவை. இந்த விஷயத்தில் தப்பு செய்தவர் யாராக இருந்தாலும் அவருக்குத் தண்டனை பெற்றுக்கொடுப்பேன்னு அந்த நடிகை உறுதியா இருக்கிறது வரவேற்க வேண்டிய விஷயம். அவருடன் இணைந்து நாங்களும், மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் குரல் கொடுத்துவர்றோம். ஆனாலும், எங்க குரலுக்கு ஆக்கபூர்வமான எதிர்வினை எதுவும் இதுவரை வரலை. பிரபலமான நாங்களே இப்படிப் போராடுறோம்னா, விளிம்புநிலை மக்கள் நீதியைப் பெறுவது என்பது போராட்டமாகத்தான் இருக்கும். மக்களின் இறுதி நம்பிக்கையான நீதித்துறை தன் கடமையை நியாயமாகவும் விரைவாகவும் செய்தால் மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

இன்றைய கலாசார சீரழிவுகளில் சினிமா வுக்கும் பெரும் பங்குண்டு என்பது பற்றி..?

- இந்திராணி சம்பத்ராஜ், காஞ்சிபுரம்


சினிமாவுக்கும் பங்குண்டு என்பதை ஒப்புக்கிறேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் எளிதில் கவரும் ஊடகமாக சினிமா  இருக்கு. அதில் நல்லதையும் சொல்றோம். ஆனா, அவை சென்றடையும் வேகத்தைவிட, ஆபாசம் மற்றும் வன்முறை உட்பட ஆபத்தான சில விஷயங்கள் ரொம்ப விரைவாக மக்களைச் சென்றடையுது. சினிமா துறையில் இருந்துகிட்டே இத்துறையைத் தவறாகச் சொல்லலை. எங்களுக்கிருக்கும் பொறுப்புணர்வை நான் உணர்ந்திருக்கேன்; இத்துறையில் இருக்கும் எல்லோரும் உணரணும். அதேநேரம், `சினிமாவைப் பார்த்துதான் என் புள்ளை கெட்டுப்போயிட்டான்'னு பெற்றோர் சொல்றதும் தவறு. அதே சினிமாவில்தான், `தப்பு செய்தவருக்கு இறுதியில் தண்டனை கிடைக்கும்; யாரும் தப்பு பண்ணாதீங்க'னும் சொல்றோம். அதையும் மக்கள் மனசுல பதிய வெச்சுக்கணும். சினிமாவை வெறும் பொழுதுபோக்கு ஊடகமா மட்டும் பாருங்க. எல்லா படத்திலும் சமூகத்துக்கான மெசேஜை எதிர்பார்க்கிறதும் தவறுதானே?

பல மொழி சினிமாக்களில் பணியாற்றியிருக் கிறீர்கள். அதற்காகப் பயிற்சிகள் எடுப்பீர்களா? எந்த மொழியில் உங்கள் பங்களிப்பு திருப்திகரமாக இருந்ததாக நினைக்கிறீர்கள்?

- மு.விஜயலட்சுமி, கோபிசெட்டிப்பாளையம்.


ஐந்து மொழிகள்ல சுமார் 250 படங்களுக்கும் மேல் நடிச்சிருப்பேன்னு நினைக்கிறேன். நடிப்பு மற்றும் கதாபாத்திரத்துக்காக நான் எப்போதும் எந்தப் பயிற்சியும் எடுத்துக்கிட்டதில்லை. ஆன் தி ஸ்பாட்டில் கதை கேட்டு நடிப்பது என் வழக்கம். தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்கள்ல நல்ல திருப்தி கிடைச்சிருக்கு. சின்ன வயசுல கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்ல படிச்சதால, இந்தி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால இந்திப் படங்களில் வேலைபார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். சல்மான்கான் உட்பட பல முன்னணி பாலிவுட் ஹீரோக்கள்கூட ஜோடியா நடிச்சிருக்கேன். தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இன்னும் நல்ல படங்கள் பண்ணியிருக்கலாம்னு தோணும்.

பெண்கள் முன்னேற்றம், கல்வி, இயற்கை விவசாய விழிப்பு உணர்வு உட்பட பல சமூக பணிகளிலும் ஈடுபாடு செலுத்துகிறீர்கள். அதற்கான அடிப்படை மற்றும் அவற்றில் கிடைத்த அனுபவம்?

- தேன்மொழி மணிவண்ணன், மதுரை


நம்ம சமூகத்தில் மாற்ற வேண்டிய, குரல் கொடுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. சினிமா துறையினர் மக்களுக்கு ரொம்ப பரிச்சயமானவங்க என்பதால், சில நல்ல விஷயங்களுக்குக் குரல் கொடுக்கலாம்னு முடிவெடுத்தேன். அதனாலதான் இயற்கை விவசாயம், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உட்பட சில சமூக விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்ல கவனம் செலுத்துறேன். இதனால் பத்து பேர்கிட்ட நல்ல மாற்றம் வந்தாலும் எனக்கு முழு திருப்தி கிடைக்கும். தொடர்ந்து என்னால் இயன்ற வழிகளிலெல்லாம் சமூகத்துக்குப் பயனளிக்கும் விஷயங்களைச் செய்வேன். இதனால் நிறைய அனுபவங்கள் கிடைச்சிருந்தாலும், ஒரு விஷயத்தைப் பகிர்ந்துக்கிறேன். மக்களுக்கு நன்மை பயக்கும் அரசியல் சூழல் இல்லை என்கிறது என் நீண்டகால கவலைகளில் ஒன்று. வெற்றி கிடைக்காதுனு தெரிஞ்சும், 1996-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டேன். 43,000 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தேன். அதனால் வருத்தமில்லை. ஒருவேளை மக்கள் என்னை வெற்றிபெற வெச்சிருந்தால், எவ்வளவு சவால்கள் வந்திருந்தாலும் நிச்சயம் அரசியலில் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றியிருப்பேன். அந்தத் தோல்வி, அரசியல் எனக்கு செட் ஆகாதுனு உணர வெச்சது. அதேநேரம் வேற வழியில் மக்களுக்கு நல்லது பண்ணலாம்னுதான் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன்.

திருமணத்துக்கு முன்பு பல கனவுகள் இருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு குடும்பக் கோட்பாடு சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக அவற்றையெல்லாம் தியாகம் செய்துவிட்டு, பல இடர்பாடுகள், மனக்கசப்புகளுடன் முழுமையற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவரும் பெருங்கூட்ட பெண்களில் நானும் ஒருத்தி. எனக்கு உங்கள் ஆலோசனை என்னவாக இருக்கும்?

-  மோகனா பரணிகுமார், வேலூர்

அந்தத் தேர்தலில் நான் ஜெயித்திருந்தால்..! - நடிகை ரேவதி

உங்களின் உணர்வுகளை என்னால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியுது. உங்க கனவு நியாயமானதாக இருப்பின், போராடியாவது அடைய முடியும்னு உறுதியோடு இருந்தா, உங்க கனவைச் சிதைச்சுக்க வேண்டிய அவசியமில்லை. யார் வாழ்க்கையிலதான் பிரச்னை இல்லை? நானும் பெரிய சோகங்களையெல்லாம் கடந்து வந்திருக்கேன். எனக்கான உலகம், என் வாழ்க்கைக்கான அர்த்தம் என்னன்னு உணர்ந்து அதை நோக்கிப் போயிட்டிருக்கேன். குடும்பக் கோட்பாடு சிதைஞ்சுடக் கூடாதுனு நீங்க நினைக்கிறது நல்லதுதான். அதையே எத்தனை தலைமுறைக்குதான் சொல்லிட்டிருக்கிறது? என்னைக் கேட்டால், குழந்தை வளர்ப்புதான் எல்லா மாற்றங்களுக்கும் அஸ்திவாரம். ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ... வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் எடுத்துச் சொல்லி வளர்த்தால், நிச்சயம் அவங்க தங்களின் எதிர்காலத்தை நல்லபடியா கட்டமைச்சுக்குவாங்க; தன் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர அன்பு, மரியாதையோடு வாழ்வாங்க. நம்ம குழந்தைங்க தலைமுறையில் இதெல்லாம் சரியாகிடும்னு நம்புவோம்.

நிஜத்தில் ரேவதி எப்படிப்பட்டவர்?

- தி.ஜெயமாலா, ஹைதராபாத்


ரொம்ப எதார்த்தமான ஒரு மனுஷி. சினிமாவில் நடிக்கிறதால, எங்க வாழ்க்கை ஸ்பெஷலானதுனு எல்லாம் இல்லை. நான் நிறைய ஏற்றத் தாழ்வுகளைப் பார்த்திருக்கேன். தோல்விகளிலிருந்து பாடம் கற்று முதிர்ச்சியான பக்குவத்துக்கு என்னைத் தயார்படுத்திக் கிட்டேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன். அது என் மனசுக்கு பல கதவுகளைத் திறந்துவிடுது.

நானும் ஒரு சிங்கிள் பேரன்ட்தான். என்னைப் போன்ற பெண்கள், சமூகத்தில் இயங்குவது சவாலானதாகவே இருப்பதாக நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?

- வெண்ணிலா சுரேஷ்குமார், மைசூரு


பிரிவுங்கிற முடிவை, தம்பதி இருவருமே வேணும்னு எடுக்கிறதில்லை. பிறகு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்காம, அடுத்துச் செய்யவேண்டிய பணிகள்லதான் கவனம் செலுத்தணும். உங்க பிள்ளையை நல்ல முறையில் வளர்த்து, அந்த நல்ல பண்பு குழந்தையின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் தொடர வைக்கணும். யார் எப்படி இருந்தாலும், சமூகத்தில் சிலர் பிறரை தப்பாதான் பேசுவாங்க. நம்ம போற பாதை சரிதானானு நாமளே யோசிக்கிற அளவுக்குப் பேசுவாங்க. அதுக்காக கலங்கிட்டு இருந்தா, முன்னேறவே முடியாது. அப்படிப் பேசுறவங்க, நம் துன்பத்தில் பங்கெடுக்கப்போவதில்லை. அதனால் பிறரின் பேச்சுக்குக் கலங்க வேண்டியதில்லை. அந்தச் சூழல் எளிதான காரியமில்லை என்கிறது எனக்கும் நல்லா தெரியும். எனக்கு என் பெற்றோர்தான் இப்போவரை பக்கபலமா இருக்காங்க. அதனாலதான் பெரும் பிரச்னைகளிலிருந்தும் என்னால் மீள முடிஞ்சது. அப்படி, சிங்கிள் பேரன்ட்டான ஆண் அல்லது பெண்ணுக்கு அவரின் குடும்பம், நண்பர்கள்தான் ஆதரவா இருக்கணும்.

கு.ஆனந்தராஜ் - படங்கள் : க.பாலாஜி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism