Published:Updated:

ராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை?

ராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை?
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை?

முன்னேறும் பி.ஜே.பி... பதுங்கிப்பாயும் பினராயி...

பரிமலை சன்னிதானத்தில் சரணகோஷ போராட்டத்தில் இரண்டாவது முறையாக தங்களது பிடியை மேலும் இறுக்கியிருக்கின்றன சங் பரிவார் அமைப்புகள். கோயிலுக்கு வந்த 52 வயது பெண்மீது தாக்குதல், ‘இளம் பெண்களைக் காவல் துறையினரே தடுப்பார்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் பேசியது என மொத்த சபரிமலையையும் ரணகளமாக்கிக் கொண்டிருக்கின்றன சங் பரிவார் அமைப்புகள். அதேசமயம், ஆரம்பத்தில் சங் பரிவார் அமைப்புகளைக் கடுமையாக ஒடுக்கிய பினராயி அரசின் காவல் துறை இந்த முறை அடக்கியே வாசித்தது. இதன் பின்னணியில் ராஜ்நாத் சிங் அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரபூர்வமற்ற உத்தரவைக் காரணம் காட்டுகிறார்கள் கேரள காவல் துறையினர்.

சபரிமலையில் சித்திரை ஆட்ட விசேஷ தினம் ஒன்று இருப்பது இந்த ஆண்டுதான் பெரும்பாலானோருக்கு தெரியவந்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் இந்தத் திருநாளுக்கு பக்தர்கள் எண்ணிக்கை 1000 முதல் 1500 வரை இருப்பது வழக்கம். இந்த ஆண்டு பத்தாயிரத்தைத் தாண்டியது கூட்டம். இம்முறை இரண்டு நாள்களுக்கு முன்பே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நிலக்கல் தொடங்கி சன்னிதானம் வரை மூவாயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய கமாண்டோ வீரர்கள், தண்ணீர் பீரங்கி வாகனம், கண்காணிப்பு கேமராக்கள், பத்திரிகையாளர்களுக்குத் தடை, ஐயப்பனைத் தரிசிக்க அடையாள அட்டை,  இரண்டு மணி நேரத்திற்கு மேல் சன்னிதானத்தில் நிற்கக்கூடாது என ஏகத்துக்கும் கட்டுப்பாடுகள். ஆனால், இவை எல்லாம் அப்பாவி பக்தர்களுக்கு மட்டுமே. சங் பரிவார் அமைப்பினர் தாராளமாக விளையாடினார்கள்.

ராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை?

பேரக் குழந்தைக்குச் சோறு கொடுக்க வந்த லீலா என்கிற 52 வயது பெண் தாக்கப்பட்டார். அவர் கோயிலுக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தவர்களைக் காவல் துறையால் சமாளிக்க முடியவில்லை. கண்ணூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் வல்சன் தில்லங்கேரியிடம் மெகாபோனைக் கொடுத்துச் சமாதானம் பேச வைத்தது காவல்துறை. 18-ம் படியில் ஏறி நின்று பேசிய அவர், ‘இளம் பெண்கள் சன்னிதானத்திற்கு வந்தால் காவல்துறையினரே தடுப்பார்கள்’ என்றார். இந்நிலையில், கோழிக்கோட்டில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் பினராயி விஜயன்,

 “ஆர்.எஸ்.எஸ் தலைவர் தில்லங்கேரி, இருமுடி இல்லாமல் சபரிமலை பதினெட்டாம் படியில் ஏறியிருக்கிறார். அப்போது எங்கே போனது நீங்கள் சொல்லும் ஆச்சாரம்? எதற்காக அங்குள்ள நடைமுறையைத் தகர்த்தீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். 

சபரிமலைக்குக் கடந்த 5-ம் தேதி வந்த சங் பரிவார் அமைப்பினர் 6-ம் தேதி இரவு நடை அடைத்த பிறகுதான் வெளியேறினர். இதன் மூலம் ‘இரண்டு மணி நேரத்திற்கு மேல் சன்னிதானத்தில் யாரும் இருக்கக் கூடாது’ என்ற விதியும் அங்கு மீறப்பட்டது. இதுகுறித்துப் பேசிய போலீஸ் அதிகாரிகள் சிலர், “மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அலுவலகத்திலிருந்து கேரள ஐ.பி.எஸ் உயர் அதிகாரிகளுக்கு ஓர் உத்தரவு வந்திருக்கிறது. அதில், ‘சபரிமலையை ரத்தக் களரி ஆக்கக் கூடாது. அனைத்தும் அமைதியான முறையில் நடக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், பேச்சுவார்த்தைக்காகக் காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நாடவேண்டியிருந்தது. டெல்லியிலிருந்து போன் வந்த துணிச்சலில்தான், ‘இளம்பெண்கள் வந்தால் காவல்துறையினரே தடுப்பார்கள்’ என்று அதிகாரிகள் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருக்கிறார்” என்கிறார்கள் அவர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை?

அதேசமயம் ஆளும் சி.பி.எம் தரப்பினரோ, “தலைமைச் செயலகம் முன்பு பிரச்னை செய்பவர்களைத் தண்ணீர் பீரங்கியால் விரட்டியடிக்கலாம். ஆனால், தலைமைச் செயலகமும் சபரிமலையும் ஒன்றல்ல. சபரிமலையில் போலீஸ் கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் பெரிய அளவில் கலவரங்கள் ஏற்படும். கலவரம் ஏற்பட வேண்டும் என்பதுதான் சங் பரிவார் அமைப்புகளின் திட்டம். பினராயி விஜயன் அரசு இதைச் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறது” என்கிறார்கள்.

“சபரிமலைப் பிரச்னையைக் கையில் எடுத்த பிறகு கேரள அரசியல் களத்தில் பி.ஜே.பி -க்கு முக்கிய  இடம் கிடைத்துள்ளது. பின்னுக்குக் கிடந்த பி.ஜே.பி-யின் ஜனம் டி.வி-யின் பார்வையாளர் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. முதல்வர் பினராயி பதுங்கிப் பாய்கிறார். பி.ஜே.பி-யின் இந்த அரசியலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும் இடதுஜனநாயக முன்னணி பிரசார நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இடது ஜனநாயக முன்னணி சார்பில் கேரளாவின் பல இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. எருமேலியில் வரும் 13-ம் தேதி நிறைவடையும் வகையில் பி.ஜே.பி நடத்தும் ரதயாத்திரைக்குப் போட்டியாக, ‘சபரிமலா விஸ்வாச சம்ரக்ஸன’ யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

- ஆர்.சிந்து