Published:Updated:

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
பிரீமியம் ஸ்டோரி
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

Published:Updated:
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
பிரீமியம் ஸ்டோரி
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

எவர் கிரீன் நாயகி

த்ரிஷா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

19 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திரைப்பயணம் இன்னமும் அதே வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது த்ரிஷாவுக்கு. சவாலான புதுப்புது பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கென தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு உழைக்கிற பழக்கம் மட்டும் ஆண்டுகள் பல கடந்தபோதும் குறையவேயில்லை த்ரிஷாவுக்கு. அதிலும் `96' ஜானுவையும் அந்த மஞ்சள் சுடிதாரையும் இனி தமிழ்நாடு மறக்கவே மறக்காது. அந்த இனிய நினைவுகளை எப்போதும் நெஞ்சில் சுமக்கும்.

90-களில் தொடர்ந்து அழகிப்போட்டி களில் அடுத்தடுத்து வென்று கவனம் ஈர்க்கத் தொடங்கியவர் த்ரிஷா. மாடலிங்கிலிருந்து சினிமாவுக்கு வந்தவருக்கு மகுடம் சூட்டி அழகு பார்த்தனர் தமிழ் ரசிகர்கள். காதல் என்றாலே ஜானுவுக்கு முன்புவரை `விண்ணைத்தாண்டி வருவாயா' ஜெஸ்ஸிதான். `அபியும் நானும்' படத்தில் வந்த அழகிய மகளை எல்லோருக்குமே பிடித்தது. `கொடி’ ருத்ராவின் வில்லத்தனமும் பிடித்தது. த்ரிஷா இப்படி எதைச்செய்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு அழகுதான்.

தமிழின் அத்தனை முன்னணி நடிகர்களோடும் நடித்தவர் இப்போது நடித்துக்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டாரோடு. எதற்கும் சமரசம் செய்துகொள்ளாமல் தன் வித்தியாச முயற்சிகளால் எப்போதும் வியக்க வைக்கும் `மார்க்கண்டேயினி' த்ரிஷா!

சில்வர் குயின்

கீர்த்தி சுரேஷ்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ன்றைய தேதிக்கு, தமிழ்நாட்டின் செல்ல டார்லிங் கீர்த்திதான். ‘பைலட்ஸ்’ எனும் படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் தடம் பதித்தவர், இன்று தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கிறார். நாயகியாக மலையாளத்தில் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருந்தவரை ‘இது என்ன மாயம்’ மூலம் தமிழுக்கு அழைத்துவந்தார் இயக்குநர் விஜய். முதல் படம் தொடங்கியே தமிழ்நாட்டில் உருவாகிவிட்டது கீர்த்தி ஆர்மி! அடுத்தடுத்த படங்களில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஏற்றம்கண்டார்.

இவருடைய நடிப்பு சமூக வலைதளங்களில் கேலி செய்யப்பட்டபோது அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும்படி நடித்ததுதான் ‘நடிகையர் திலகம்’. சாவித்திரியின் வாழ்க்கையைத் திரையில் அச்சு அசலாக வாழ்ந்துகாட்டி, கேலி செய்த அத்தனை பேரையும் தன் அபார நடிப்பாற்றலால் அசரடித்தார் கீர்த்தி. சாவித்திரியாக நடிப்பதற்காக எடையைக் கூட்டி, உடல்மொழி மாற்றி கீர்த்தி மேற்கொண்டது பெருந்தவம். கீர்த்தியின் உழைப்புக்கு இமாலய வெற்றியை அள்ளித்தந்தனர் ரசிகர்கள்.

வெற்றி தோல்விகளைத் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தன்னுடைய திறனில் கவனம் செலுத்தி மேலும் மேலும் முன்னேறும் தமிழ்நாட்டின் செல்லம் கீர்த்தி சுரேஷ்!

மாண்புமிகு அதிகாரி

அமுதா ஐ.ஏ.எஸ்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சிவில் சர்வீஸ் பணியில் கால் நூற்றாண்டை நிறைவு செய்திருக்கிறார் அமுதா ஐ.ஏ.எஸ். செங்கல்பட்டு சப்-கலெக்டராக இருந்தபோது, மணல் மாஃபியா கும்பல்களுக்குக் கடும் நெருக்கடி தந்ததால், மணல் கடத்தலைத் தடுக்கக் களமிறங்கிய ஒரு நாளில் லாரியை ஏவி, உயிர் பயம் காட்டினர். இந்த மிரட்டலால், அவரது துணிச்சலை அசைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை.

பெண் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமணம் தடுப்பு, மகளிர் சுயஉதவிக் குழு ஆகியவற்றில் தர்மபுரி மாவட்டத்தை வளர்ச்சியடையச் செய்தார். 2015-ம் ஆண்டு சென்னை பெருவெள்ளப் பாதிப்புகளைச் சரிசெய்யும் சிறப்பு அதிகாரியானபோது, தலைநகரம் தன்னிலைக்குத் திரும்ப பம்பரமாகச் சுழன்று உழைத்தார். நேர்மையையும் எளிமையையும் அடையாளமாகக் கொண்ட மதிப்புக்குரிய நிர்வாகி அமுதா ஐ.ஏ.எஸ் அடுத்த தலைமுறைக்கு முன்னுதாரணம்!

இரும்புப் பெண்மணி

டாக்டர் பிரேமா தன்ராஜ்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

பெங்களூருவில் இயங்குகிறது ‘அக்னி ரக்‌ஷா’. தீயில் வெந்து சிதைந்த பெண்களின் உருவங்களை மட்டுமல்ல; அவர்களின் வாழ்க்கையையும் மீட்டுத் தருகிறது இந்த அமைப்பு.  தீ விபத்துக்குள்ளானவர்களுக்கான மறுவாழ்வு மையமான இது, இந்தியாவிலேயே முன்னோடி முயற்சி. மருத்துவ உதவிகள் மட்டுமல்ல, குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு சட்டப்படி நீதி பெறவும் உதவுகிறார்கள் இந்த அமைப்பினர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் பயிற்சிகள் தந்து சுயஉதவிக் குழுக்கள் அமைத்துத் தருகிறார்கள். இந்த சேவைகளுக்குப் பின்னால் வலுவான அஸ்திவாரமாக கம்பீரமாக நிற்கிறார் இதன் நிறுவனர் டாக்டர் பிரேமா தன்ராஜ்.

பிரேமாவும், தீக்கிரையாகி, மீண்டவர்தான். தன் அம்மாவின் வைராக்கியத்தாலும் தன்னம்பிக்கையாலும் மருத்துவராகி, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் தவைவராக இருந்து ஓய்வுபெற்றவர். 66 வயது என்கிறார். ஆனால், உழைப்பில் பதினாறைத் தாண்டாத உற்சாகம்!

கல்வி தேவதைகள்

குழந்தைகளைக் கொண்டாடுவோம் குழுவினர்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

`பாடத்திட்டம் மட்டுமே கல்வியல்ல; அதையும் தாண்டி கற்றுத்தர நிறைய இருக்கிறது' என்று விருப்பத்துடன் செயலாற்றுகிற அதிசய ஆசிரியர் படை இது. திருவள்ளூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டிருக்கும் இக்குழுவில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து செயல்படுகிறார்கள். சமச்சீர் கல்வி உருவாக்கத்தில் பங்கெடுத்து, அதை மாணவர்களுக்கு நெருக்கமானதாக மாற்ற முயற்சி எடுத்தவர்கள் இவர்கள். பாலினம், சாதியம், பொருளாதாரம் உள்ளிட்ட பாகுபாடுகளால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் களைவதற்கான தீர்வுகளைக் கண்டறிந்து செயல்படுத்துகிறார்கள். கல்வி தொடர்பான ஆய்வுகூட்டங்களை மாநில அளவில் நடத்துவது, மாற்றுப்பள்ளிகளைப் பார்வையிடுவது, கல்விக் கொள்கைகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்களைப் பரப்புரை செய்வது என பெருமுனைப்புடன் இயங்கிவருகிறார்கள்.

செயல்புயல்

பிரியா பாபு

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

மூகத்தின் வசைச்சொற்களுக்கு அஞ்சி தற்கொலைக்கு முயன்றவர் பிரியா பாபு. இன்று எத்தனையோ திருநங்கைகளுக்கு வாழ்வதற்கான நம்பிக்கையாக மாறி நிற்கிறார். திருநங்கைகளின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடிவருகிறார். வெவ்வேறு ஊடகங்களின்வழி திருநங்கையரின் வாழ்வை அவர்களுடைய துயரக்கதைகளை ஆவணமாக்கிவரும் சமூக செயற்பாட்டாளர். குறும்படங்கள், ஆவணப்படங்கள், நாவல், கட்டுரைகள், கவிதைகள் என எல்லா பாதைகளிலும் பயணித்து, திருநங்கைகளின் வாழ்வைப் பதிவு செய்துவருகிறார்.  அரவாணிகள் சமூக வரைவியல், மூன்றாம் பாலின் முகம், மாற்றுப்பாலினர் காதல் பதிவு, தமிழகத்தில் திருநங்கையர் சமூக இயக்க வரலாறு என  பிரியா பாபு எழுதிய ஏழு நூல்களும் தமிழில் திருநங்கையர் குறித்த முக்கியமான ஆவணங்கள்.

வெறும் எழுத்தையும் போராட்டங்களையும் மட்டுமே சுமக்காமல், தகுதியுள்ள திருநங்கையரைத் தேடிப்பிடித்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகிறார். வழக்கறிஞர் ரஜினியோடு இணைந்து சட்டப் போராட்டம் நடத்தி, திருநங்கையருக்கு ஓட்டுரிமை கிடைக்கச் செய்திருக்கிறார். செய்தித்தாள் தரவுகள், திருநங்கைகள் குறித்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், அரசாணைகள், தீர்மான நகல்களைத் தொகுத்து மதுரையில் பிரியா பாபு நடத்தும் ‘திருநங்கையர் ஆவண மையத்தைப் பயன்படுத்தி இதுவரை ஏழு மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வை முடித்திருக்கிறார்கள். சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, தன் பாலினத் தேர்வால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு தன் வாழ்வனுபவங்களின் வழி தனக்கான பாதையை அமைத்துக்கொண்டு தனித்துவமான ஆளுமையாக மிளிர்கிறார்!

திரைத் தாரகை

ராதிகா சரத்குமார்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

`கிழக்கே போகும் ரயில்' படத்தில் 'பாஞ்சாலி' யாக அறிமுகமானபோது,  தமிழ் சினிமாவின் ஆளுமையாக உருவெடுக்கப்போகிறார் என்பதை அந்த 15 வயதுச் சிறுமியே அப்போது நினைத்திருக்க மாட்டார். லண்டனில் படிப்பை முடித்த கையுடன் சினிமாவுக்கு வந்ததால் தமிழ் பேசவே சிரமப்பட்டவர், பிறகு தன்னைத் திரைக்காகவே செதுக்கிக்கொண்ட அத்தியாயம் ஆரம்பமானது.  சென்டிமென்ட், ஆக்‌ஷன், கிளாமர், காமெடி எனப் பலதரப்பட்ட கேரக்டர்களிலும் முத்திரை பதித்தார். 80-களில் தென்னிந்திய சினிமாவின் கனவு நாயகியாக வலம்வந்தவர், உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடியானார். ஹீரோ சென்டர்டு சினிமா உலகில், `நீதிக்கு தண்டனை', `ஊர்க் காவலன்', `நானே ராஜா நானே மந்திரி', `சிப்பிக்குள் முத்து', `கிழக்குச் சீமையிலே' என தன் ஹிட் படங்களில் ஹீரோயிஸத்தையும் தாண்டி சிக்ஸர்களை அடித்து ஆடினார்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, சினிமாவில் சிகரங்கள் பார்த்தவர் சின்னத்திரையில் கால்வைத்தபோது, இவரின் நிர்வாகத்திறனும் போட்டிபோட்டு உழைத்தது. `ராடான்' நிறுவத்தின் சிஇஓ ஆக, `சித்தி' சீரியலில் தொடங்கிய ராதிகாவின் சின்னத்திரைப் பயணம், 19 ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருக்கிறது. `வாணி ராணி'யைத் தொடர்ந்து, சரித்திர சீரியலில் சந்திரகுமாரியாக மிரட்டத் தயாராகிவிட்டார் ராதிகா. பொதுவாக, ஹீரோயின்களுக்கு 30 வயதுகளில் விடை கொடுத்துவிடும் திரைச்சூழலில், 40 ஆண்டுகளாக மோஸ்ட் வான்ட்டட் ஆளுமையாகக் கம்பீரமாகப் பயணித்துக்கொண்டிருக்கிறார் ராதிகா!

இலக்கியச் செல்வி

குட்டி ரேவதி

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

‘கண்ணீரும் முத்தங்களும் உதிரமும்தான் பாடலாக முடியும் சொற்கள் அல்ல’ என்று கவிதைகளில் முழங்குகிற உக்கிரமான கவிக்குரல் குட்டி ரேவதி. கவிஞர், பாடலாசிரியர், புனைவெழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், களப்பணியாளர், சித்த மருத்துவர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமை. தமிழில் பெண்ணிய உரையாடல்களில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர் குட்டி ரேவதி. அதேநேரம், இந்தியச் சமூகச் சூழலில் பால் சமத்துவம், எவ்வளவு வகுப்பு மற்றும் வர்க்கச் சிக்கல்கொண்டது என்ற ஆழ்ந்த அரசியல் பார்வையும் கொண்டவர். கலையில் அழகியலையும் அரசியலையும் கச்சிதமாக வார்த்தெடுக்கும் நவீனத் தமிழ்ப் படைப்பாளி. தளம் எதுவாகினும் அதில் அழுத்தமாகவும் தொடர்ச்சியாகவும் இயங்குவது இவரது தனிச்சிறப்பு. 2018-ம் ஆண்டின் கொண்டாடப்பட வேண்டிய இலக்கிய ஆளுமை குட்டி ரேவதி!

லிட்டில் சாம்பியன்

ஆஷிகா

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

14 வயதாகும் ஆஷிகா பிறந்தது புதுச்சேரி ஐயங்குட்டுபாளையத்தில். ஆஷிகாவின் தந்தை ஆறுமுகம் வாகன ஓட்டுநர். வலு தூக்கும் (Power lifting) விளையாட்டில் குறையாத ஆர்வம்கொண்டிருந்த ஆஷிகாவின் அயராத உழைப்பு சர்வதேச போட்டிகளுக்குத் தேர்வு பெறச் செய்தது.

வெற்றிகள் பெற்றபோதும் ஸ்பான்சர்கள் கிடைக்கவில்லை. உதவிகளுக்காக எங்கெங்கோ அலைந்த அப்பா இறுதியில் கடன்வாங்கி நகைகளை விற்று மகளை தென்னாப்பிரிக்கா அனுப்பி வைத்தார். சென்ற இடத்தில் சப்-ஜூனியர் பிரிவில் மூன்று தங்கப்பதக்கங்களை வென்று முடிசூடி திரும்பியிருக்கும் இந்த இளம் வீராங்கனை, சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்திருக்கிறார்.

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

தமிழன்னை

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

`காணி நிலம் வேண்டும்’ என்பது பாரதியின் கோரிக்கை. தமிழகத்தில் உள்ள அத்தனை விவசாயக் கூலிகளுக்கும் சொந்த நிலம் வேண்டும் என்பது கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் ஒற்றைக்கனவு. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, இலவச மையத்தில் தங்கி கல்வி பயின்று, ‘மதுரையின் முதல் பெண் பட்டதாரி’ என்ற பெருமையைப் பெற்றார். விடுதலைப் போராட்ட வேள்விக்கென தன்னையே அர்ப்பணித்தவர், கணவர் சங்கரலிங்கம் ஜெகநாதனுடன் இணைந்து செயலாற்றினார். வினோபா பாவேவின் ‘பூமிதான இயக்கத்’தின் அடித்தளங்களில் ஒருவர் இந்த அம்மா.

1968-ல் தமிழகத்தையே தலைகுனியச் செய்தது கீழ்வெண்மணி படுகொலை. அரைப்படி நெல் கூடுதலாகக் கேட்டு போராடியதற்காக 44 பேர் ஒரே குடிசையில் வைத்துக்கொளுத்தப்பட்ட அந்தத் துயரம் கிருஷ்ணம்மாளின் இதயத்தில் ரத்தம் கசியச்செய்தது.  பாதிக்கப்பட்ட, நிலமற்ற பண்ணைக் கூலிகளுக்கு நிலம்பெற்றுத் தருவதையே தன் வாழ்நாள் தவமென முடிவெடுத்தார். அதற்காகவே ‘லஃப்டி (LAFTI)’ எனும் உழவனின் நில உரிமை இயக்கத்தைக் கட்டமைத்து, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளையும், ஏராளமானவர்களுக்கு நிலங்களையும் பெற்றுத்தந்தார்.

கிருஷ்ணம்மாளின் இந்தப் பயணம் எளிதானதல்ல... அச்சுறுத்தல்கள், அவமானங்கள், கைது, சிறை என்று எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும் அச்சமின்றி தொடர்ந்து போராடிய அஹிம்சைப் போராளி. 92 வயதிலும் எளிய மக்களுக்காகத் தொடர்ந்து களத்தில் நின்று போராடிவரும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், நம் காலத்தின் போற்றப்பட வேண்டிய பொக்கிஷம்!

வைரல் ஸ்டார்

ஆர்ஜே ராகவி

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ணகள சேட்டைதான் ஆர்ஜே ராகவியின் அடையாளம். தன் ஜாலியான எக்ஸ்பிரஷன்களால் லைக்ஸ் அள்ளும் யூடியூப் சென்சேஷன். நெட்டிசன்களின் சமகால ‘ராசாத்தி’. அமைதியான அக்காவின் அலப்பறை தங்கையாக சிரிக்க வைப்பார். சுட்டித் தம்பியின் பாசக்கார அக்காவாக நெகிழ வைப்பார். ‘டி-ஷர்ட் வாங்கித் தர்றியா, கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட மாட்டிவிடவா?’ என்று ஒரண்டை இழுக்கும் மாடுலேஷனில் தெரிவதெல்லாம் அக்மார்க் தோழிகளின் குணம். எட்டு நிமிட வீடியோவில் இவரால் எப்படித்தான்  80 எக்ஸ்பிரஷன்கள் காட்டமுடிகிறது என்பது ஆய்வுகள் செய்து கண்டுபிடிக்கப்பட வேண்டிய ரகசியம்! நடிப்பு மட்டுமல்ல... திரைக்கதை, இயக்கம் என கிரியேட்டிவிட்டியின் எல்லா மூலைகளையும் தொட்டுப் பார்க்கிற ராகவி, ‘சர்கார்’ படத்தில் ஒரு குடிமகளும்கூட. தன் ஓயாத குறும்புத்தனங்களால் நம்மை குஷிப்படுத்தும் ஜாலி ஸ்டார் ராகவி!

கலை நாயகி

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

மிழர்களின் வாழ்வு சொல்லும் வயக்காட்டு பாடல்களைப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் வரை கொண்டுசேர்த்த அற்புதக்கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன். கிராமிய இசையின் மீதும் நாட்டுப்புறக் கலைகளின் மீதும் கொண்ட தீராக் காதலால், அவற்றையெல்லாம் சேகரிக்கத் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள்வரை கலைப்பயணம் செய்தவர். தெம்மாங்கு பாடல்கள் மட்டுமல்ல... தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என அனைத்தையும் கற்றார்; அதை பலருக்கும் திறம்பட கற்பித்தார். நம் மண்ணின் கலைகள், பத்தாயிரம் ஒலிப்பேழைகளாக இவரால் ஆவணப்படுத்தப்பட்டு, அழிவிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளன. குங்குமப்பொட்டும் கண்டாங்கிக்கட்டுமாக தொலைக்காட்சிகளில் தோன்றி இவர் குரலெடுத்துப் பாடியதில், தெம்மாங்குப் பாடல்கள் தமிழ் நெஞ்சங்களில் புத்துயிர் பெற்றன!

கலை நாயகி

அருணா சாய்ராம்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ழு வயதில் கர்னாடக சங்கீதம் பயில ஆரம்பித்தவர் அருணா சாய்ராம். தமிழ்நாட்டின் இசை முகம். தன் அம்மா ராஜலட்சுமி சேதுராமன், குரு டி.பிருந்தா ஆகியோரிடம் சங்கீதம் பயின்றவரின் தேன் குரல், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் மேடைகளையும், மக்களையும் வசீகரித்தது.

‘விஷமக்கார கண்ணன்’, ‘மாடு மேய்க்கும் கண்ணா’ ஆகிய பாடல்களில் அருணா சாய்ராம் தந்த செவி உணவு, சங்கீத ரசிகர்களைத் தாண்டி சராசரி மனிதர்களையும் ஈர்த்தது.

ராஷ்டிரபதி பவனில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் பெண்மணி, கலைமாமணி விருது, பத்மஸ்ரீ விருது எனப் பெருமைகள் இவரை வந்து சேர்ந்தன.

இசை குறித்து ஆய்வு செய்யவும், கர்னாடக சங்கீதத்தை அனைத்து மக்களிடமும் கொண்டுசேர்க்கவும் ‘நாதயோகம் டிரஸ்ட்’ என்ற தொண்டு அமைப்பை நடத்திவரும் அருணா சாய்ராம், கடந்த 50 வருடங்களாக கர்னாடக சங்கீதத்துக்கு அளித்திருக்கும் பங்களிப்பு ஆத்மார்த்தமானது!

சூப்பர் சாம்பியன்ஸ்

தமிழக ஜூனியர் பெண்கள் கால்பந்து அணி 

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

நாமக்கல், திண்டுக்கல், திருவாரூர் என வேறு வேறு ஊர்களையும், மிகச்சிறிய கிராமங்களையும் சேர்ந்தவர்கள் இந்தப் பெண்கள். இவர்கள்தான் இன்று தமிழகத்தைத் தலைநிமிரச்செய்த தேசிய சாம்பியன்கள். தமிழக ஜூனியர் பெண்கள் கால்பந்தாட்ட அணி இந்த முறை தேசிய போட்டிகளில் ஆடிய ஐந்து போட்டிகளில் 25 கோல்கள் அடித்ததோடு, நடப்பு சாம்பியன் மணிப்பூரையும் வீழ்த்தி, பிரமிக்க வைத்திருக்கிறார்கள். 12 கோல்கள் அடித்து டாப் ஸ்கோரராக போடியம் ஏறியிருக்கிறார் மாரியம்மாள். வேறு வேறு தளங்களிலிருந்து வந்த இவர்களை அந்த ஒரு வாரத்துக்குள் ஒருங்கிணைத்து, அழகான கால்பந்து ஸ்டைலையும் வெளிக்கொண்டுவந்தார் பயிற்சியாளர் கோகிலா.

வாழ்வே போராட்டமாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு ஆடி, சாம்பியன் பட்டம் வென்ற செல்லங்களுக்கு ஜே!

பெஸ்ட் மாம்

சலீனா வாஸ் 

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

மிடில்கிளாஸ் மகளை மிஸ் வேர்ல்டு வரைக்கும் கொண்டுசென்ற அல்டிமேட் அம்மா. சிங்கிள் பேரன்ட்டாக பிள்ளைகளை வளர்க்கும் இரும்பு மனுஷி. மகளின் ஆசையைக் கேட்டு அதற்கு முட்டுக்கட்டை போடாமல் தட்டிக்கொடுத்து தைரியமாகக் களத்தில் இறங்கியவர். மிஸ் தமிழ்நாடு, மிஸ் இந்தியா, உலக அழகிப் போட்டி வரை வந்துவிட்டார் மகள். அனுகீர்த்தி ஏறிவந்த ஒவ்வொரு படியிலும் சலீனாவின் அர்ப்பணிப்பு நிறைந்து இருக்கிறது. 16 ஆண்டுகளாகப் பிள்ளை களுக்காகத் தன் கனவுகளைத் துறந்து பிபீஓ நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் சலீனா வாஸ். மகளின் ஆர்வம்புரிந்து அவருடைய வெற்றிக்கான பாதைகளை வகுத்துக் கொடுக்கும் அற்புத அம்மா சலீனா!

சேவை தேவதை

டாக்டர் மல்லிகா திருவதனன்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ருபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது மல்லிகாவின் இந்தப் பணி. தந்தையின் முதுகுவலி சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றவர், அங்கிருந்த புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைக் கண்டார்.

உச்சகட்ட உடல் மற்றும் மனவலியோடு அவர்கள் கிடந்த படுக்கைகள், மல்லிகாவின் தூக்கம் பறித்தன. அவர்களின் வலிகளைப் போக்க தன் வாழ்நாளை செலவிடத் தீர்மானித்தார். ‘ல‌க்ஷ்மி பெயின் அண்டு பேலியேட்டிவ் கேர்’ டிரஸ்ட்டை, மேலும் சில மருத்துவர்களுடன் சேர்ந்து ஆரம்பித்தார். முழுக்க முழுக்க இலவச சிகிச்சைதான் எனத் தீர்மானித்தவர், புற்றுநோய் வலி தணிப்பு மருத்துவம் பற்றி உலக சுகாதார அமைப்பின் சார்பாக, பல மாநிலங்களிலும் வகுப்புகள் எடுக்கவும் தொடங்கினார். 20 ஆண்டுகளாக, சேவையே எண்ணமாக, எண்ணமே செயலாக வாழ்ந்துவரும் அற்புதம் மல்லிகா திருவதனன்!

சேவை தேவதை

அபர்ணா கிருஷ்ணன்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

பாலகோட்டுப்பள்ளியில் இருக்கிறது தலித்வாடா என்கிற தலித் கிராமக் குடியிருப்பு. தன் கனவுகளைத் தேடி அபர்ணா சென்றது அங்குதான். காந்தியக் கொள்கைகளிலும் கிராமத்து வாழ்க்கையிலும்கொண்ட அதீத ஈடுபாடு,  இன்ஜினீயரிங் வேலையை உதறச் செய்தது. இன்று தன்னை முழுமையான கிராமத்து மனுஷியாக மாற்றிக்கொண்டிருக்கிறார் அபர்ணா. ஏராளமான விவசாயிகளைப் பொருளாதார ரீதியில் முன்னேற்றியுள்ளார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்குப் பிழைப்புக்கு மாற்றுவழிகளை ஏற்படுத்தித்தருவது, அரசாங்கத் திட்டங்களை ஒருங்கிணைத்துத்தருவது என ஓயாமல் ஓடுகின்றன அபர்ணாவின் கால்கள். தேடித்தேடி உதவிகள் செய்கிறார் இந்த முன்னுதாரணப் பெண்மணி!

பசுமைப் பெண்

சித்தம்மா

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ருபது ஆண்டுகளாக இயற்கை விவசாயம் தான் சித்தம்மாவின் இயங்கு திசை. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த அத்திமாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தம்மா.  மலைகளுக்கு மத்தியில் கட்டாந்தரையாக வாங்கிய 13 ஏக்கர் நிலத்தைத் தனியொருத்தியாக நின்று வளமாக்கி இன்று வளர்ந்து நிற்கிறார். சரிவுப் பகுதிகளில் கிடைக்கும் மழைநீரை இவர் சேமிக்கும் முறை, வியக்கவைக்கும் நீர் மேலாண்மை உத்தி. பாரம்பர்ய நெல் ரகங்கள், ஒற்றை நாற்று நடவு, சிறுதானியங்கள் சாகுபடி, பயறுவகைச் சாகுபடி, நீர் மேலாண்மை, மரம் வளர்ப்பு என்று சித்தம்மா உருவாக்கியிருக்கும் பண்ணையில் எல்லோருக்கும் இருக்கிறது கற்றுக்கொள்ள ஏராளமான சங்கதிகள். இயற்கை விவசாயத்தையே தன் உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்கிறார் சித்தம்மா!

சாகச மங்கை

ரூபா அழகிரிசாமி

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ந்திய வரலாற்றின் முதன்முறையாக ‘கடற்படை ஆயுத ஆய்வாளர்’ பதவிக்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா அழகிரிசாமியும் ஒருவர். ஏரோனாடிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும்போதே, முப்படைகளில் ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்கிற தேசப்பற்றோடு வளர்ந்தவர். ராணுவத்தில் சேர்கிற முயற்சிகளில் எல்லாம் தொடர் தோல்விகள். தோல்விகள் இவரை மேலும் வலுவாக்கியதே தவிர, பலவீனமாக்கவில்லை. `கடற்படை ஆண்களுக்கானது’ என்ற வரைமுறையை உடைத் தெறிந்து, மற்ற பெண்களையும் கனவு காண வைத்திருக்கிறார் இந்த வீராங்கனை. தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றியமைத்த மங்கை  ரூபா அழகிரிசாமி!

செயல்புயல்

வசுமதி

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ரசியல் கட்சிகளுக்கே சாத்தியப்படாத மென்பொருள்துறைத் தொழிற்சங்கத்தை நிகழ்த்திக்காட்டியவர் வசுமதி. எவ்வித அறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்படுகிற தொழிலாளர்களுக்காக தீவிரமாகக் களமாடுகிறது வசுமதி உருவாக்கிய Forum for IT employees (FITE) தொழிற்சங்கம். புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சி தந்து அவர்களுக்குப் புதிய வேலைகள் கிடைக்கவும் உதவுகிறது. மென்பொருள் துறை ஊழியர்கள் சமூகத்தைவிட்டு விலகி நிற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை உடைத்து ஜல்லிக்கட்டு, நீட், ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோகார்பன், விவசாயிகள் பிரச்னை என சமூக பிரச்னைகளுக்காக அவர்களைக் களத்துக்குக் கொண்டுவந்து போராடவும்வைத்து ஆச்சர்யப்படுத்துகிறார் வசுமதி. மிரட்டல்கள், எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து போராட்டம், பேச்சு வார்த்தை, வழக்கு எனப் பரபரப்பாக இயங்கிவரும் வசுமதி, ஐ.டி தொழிலாளர்களுக்குக் கிடைத்த வரம்!

பிசினஸ் திலகம்

மலர்விழி 

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

றுமைதான் குடும்பத்தின் நிறம். அதற்கு நடுவிலும், ஓர் இலக்கை நிர்ணயித்து ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடித்தார் மலர்விழி. மலர்விழியின் கவனம் முழுக்க பிளாக் பிரின்ட்டிங் புடவைகள் தயாரிப்பில் நிலைகுத்தியது. தொழிலை ஆரம்பித்த 10 ஆண்டுகளில் பல தோல்விகள், சவால்கள். இன்று, ஸ்டிச்சிங், பிளாக் பிரின்ட்டிங், எம்ப்ராய்டரிங் என நான்கு யூனிட்கள், 60 பணியாளர்கள், ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் டர்ன் ஓவர் என வெற்றிகரமான தொழில்முனைவோர் மலர்விழி. பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு வந்திருக்கும் இந்தக் கடினப் பாதையைத் தனி மனுஷியாகவே கடந்திருக்கிறார் இந்தச் சுயம்பு. தன் தொழிலை இன்னும் பெரிய அளவுக்குக் கொண்டுசெல்லும் முனைப்பில் இருப்பவருக்கு தன்னம்பிக்கையே பிரதானமாகக் கைகொடுக்கிறது.

குணச்சித்திர நாயகி

ஈஸ்வரி ராவ்

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் இதுவரை கண்டிராத வித்தியாச நாயகி `காலா’ செல்வி. ஊருக்கே அடங்காத முரட்டு `காலா’வை தன் அன்பால் அடக்கி ஆண்ட தங்க சிலை! தமிழ் சினிமாவை எண்ணங்களாலும் வண்ணங்களாலும் நிரப்பிய இயக்குநர் பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்பு இவர். ‘ராமன் அப்துல்லா’வில் தொடங்கிய ஈஸ்வரி ராவின் பயணம், அதற்குப்பிறகு பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என அமைத்தது.

கால இடைவெளிக்குப் பிறகு அவரின் நடிப்புத் திறமைக்கு மீண்டும் மிகச்சரியான களம் அமைத்துத்தந்தது ‘காலா’தான். ரஜினிகாந்த், நானா படேகர் என இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளுக்கு நடுவில் ஈஸ்வரியின் உயிரோட்டமுள்ள நடிப்பாற்றல் இவருக்கென பெற்றுத்தந்தது தனிப்பட்ட கவனம். சிறிய பாத்திரமே என்றாலும் அதற்குள்ளே காதல், தாய்மை, கம்பீரம், நகைச்சுவை, வெகுளித்தனம் என எத்தனை எத்தனை உணர்வுகளை விதவிதமாக வார்த்திருந்தார். `தப்படிக்கிற பெருமாள் இல்ல... கிறுக்குப்பிடிச்ச மேனிக்கு என் பின்னாலேயே சுத்திக்கிட்டு கிடந்தான். எனக்கும் இஷ்டந்தான். ஆனா, நீதான் கட்டிட்டு வந்துட்டியே’ என திருநெல்வேலித் தமிழில் ஈஸ்வரி ராவ் பேசிய வசனத்துக்கு ‘காலா’வும் அதிர்ந்தார்; திரையரங்குகளும் அதிர்ந்து குலுங்கின. இப்படி, நம் காலம் கண்டுபிடித்த கலைப்பொக்கிஷம் ஈஸ்வரிராவ்!

புதுமைப் பெண்

ரூபி பியூட்டி

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்

ணவர், குழந்தை, வீடு என ரூபி பியூட்டி நம்மில் ஒருத்தியாக இருந்தவர். இன்று, சர்வதேச அளவில் பாடி பில்டிங்கில் வெற்றிபெற்று கோடியில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். பிரசவத்துக்குப் பிறகு எடை கூடிய ரூபியிடம் அவர் கணவர், ‘ஓவர் வெயிட் ஆகிட்ட, உன் மேல எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல’ என்று கூற, மூச்சிரைக்க ஓட ஆரம்பித்தார் ரூபி. உடற்பயிற்சிக் கூடத்தில் தஞ்சமடைந்தார். அந்த நேரத்தில் கணவரைப் பிரிய நேரிட்டது. மனஅழுத்தத்தில் இருந்து வெளியேவர, பாடி பில்டிங் கைகொடுத்தது. கண்ணீரை எல்லாம் வியர்வையாக வெளியேற்றினார்.

‘இதென்ன ஆம்பள மாதிரி உடம்பை மாத்திக்கிட்டு’ என்ற கேலிகளும் விமர்சனங்களும் விரட்டின. ஆனால், விமர்சனங்களை விரட்டியடித்து, இந்திய அளவிலான மூன்று பாடி பில்டர் போட்டி களிலும் ரூபி வென்றது முதலிடத்தை. டெல்லியில் நடைபெற்ற சர்வதேச பாடி பில்டர் போட்டியில் ‘மிஸ் வேர்ல்டு’ பட்டத்தை வென்றிருக்கிறார்.

முதன்முதலாக பிகினி போட்டுக்கொண்டு போட்டி மேடையில் நின்றபோது ரூபி மிரண்டுபோனார். அம்மா ஜெயித்துவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்த தன் ஆறு வயது மகனை நினைத்த நொடியில், தனது உடலை வெற்றிக்கான ஆயுதமாக்கியதாகச் சொல்கிறார் இந்த அபூர்வ திறமைசாலி ரூபி!

அவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism