Published:Updated:

``ரேஷன் கடையில் உரிய அளவு அரிசி கிடைப்பதே இல்லை!" - திண்டிவனம் பகுதி மக்கள் வேதனை

``ரேஷன் கடையில் உரிய அளவு அரிசி கிடைப்பதே இல்லை!" - திண்டிவனம் பகுதி மக்கள் வேதனை
``ரேஷன் கடையில் உரிய அளவு அரிசி கிடைப்பதே இல்லை!" - திண்டிவனம் பகுதி மக்கள் வேதனை

ந்தியாவில், ரேஷன் கடைகளை மட்டுமே நம்பிப் பல குடும்பங்கள் வசிக்கின்றன என்பது உலகறிந்த விஷயம். அதன்மூலம் தன்னுடைய வயிற்றுப் பிழைப்பை நடத்திவரும் அவர்களுக்கு, முழுமையான அளவில் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதில்லை என்பதுதான் வேதனையான விஷயம். 

கடந்த தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாயாக இருந்தது. அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் விலையில்லா அரிசி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றளவும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி வழங்கப்படும் அரிசி, முழுமையாக தங்களுக்குக் கிடைப்பதில்லை என்கின்றனர், திண்டிவனம் பகுதி மக்கள். 

இதுகுறித்து அறிவதற்காகத் திண்டிவனம் பகுதிக்குட்பட்ட சில ரேஷன் கடைகளுக்குப் படையெடுத்தோம்... அங்குள்ள பெரமண்டூர் ரேஷன் கடையிலிருந்து பொருள் வாங்கிவந்த ஒரு மூதாட்டியைச் சந்தித்தோம். அவர், "என் குடும்ப அட்டைக்கு 25 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டும். ஆனால், 23 கிலோதான் கொடுக்கிறார்கள். ஏன்தான் இப்படி ஏமாற்றுகிறோர்களோ" என்று புலம்பினார். மூதாட்டி சொல்வது உண்மையா, பொய்யா என்ற சந்தேகத்தில் அங்கிருந்த சிலரிடமும் இதுகுறித்து விசாரித்தோம். அவர்களுக்கும் உணவுப்பொருள் குறைத்தே வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள், "யாருக்கும் உரிய அளவில் அரிசியைக் கொடுப்பது கிடையாது. எல்லோருக்கும் குறைத்துத்தான் கொடுக்கிறார்கள். உரியக் காரணம் கேட்டாலும் சொல்வதில்லை" என்றனர், சற்றே கோபத்துடன்.

மேலும் அவர்கள், "போலிக் குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து அனைத்து மக்களுக்கும் சராசரியாக பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு லாபம் பார்க்கின்றனர். குறிப்பாக, ஸ்மார்ட் கார்டு மூலம் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. இருப்பினும், எங்களுக்கு வழங்கப்படவேண்டிய விலையில்லா அரிசி முழுமையாக வழங்கப்படவில்லை. (உதாரணத்துக்கு... 20 கிலோ அரிசிக்கு, 18 கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.) அதேநேரத்தில், எங்கள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வரும்போது மட்டும் முழுமையாக அரிசி வழங்கப்பட்டதாகத் தகவல் வருகிறது" என்றனர், வேதனையுடன்.

பொதுமக்களுக்குக் குறைவாக அரிசி வழங்குவதைக் கண்டறிந்த நாம், இதுகுறித்து அந்த ஊர் ரேஷன் கடை ஊழியரான பொங்கலட்சுமிடம் பேசினோம். "இந்தக் கிராமத்தில் 945 குடும்ப அட்டைகள் உள்ளன. ஆனால், எங்களுக்குத் தாலுகா அலுவலகத்திலிருந்து அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அரிசி முழுமையாக வழங்கப்படுவதில்லை. இந்தக் கிராமத்திற்கு மாதம் ஒன்றுக்கு, 22,000 கிலோ அரிசி வழங்கப்பட வேண்டும். ஆனால், 19,500 கிலோ அரிசிதான் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டைவாரியாகப் பார்த்தால், 93 குடும்ப அட்டைகளுக்கான அரிசி எங்களுக்கு வழங்கப்படுவதில்லை. ஆனாலும், எங்களுக்கு வழங்கப்பட்ட அரிசியைச் சமன்படுத்தி அனைவருக்கும் வழங்கிவருகிறோம். இதைத்தான் அதிகாரிகளும் அறிவுறுத்துகிறார்கள். அதன் அடிப்படையில், குடும்ப அட்டையின் அளவீட்டைப் பொறுத்து 1 கிலோவில் இருந்து 3 கிலோவரை மக்களுக்கு அரிசியைக் குறைத்துக் கொடுக்கிறோம். அந்த 93 குடும்ப அட்டைகளுக்கும் அரிசி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச் செயல்படுகிறோம். முந்தைய மாதம் வழங்கப்பட்ட அளவீட்டை வைத்தும் அல்லது கவனக்குறைவாலும் ஒருசிலருக்கு குறுஞ்செய்தி தவறாகச் சென்றிருக்கும்" என்றார். 

இதுகுறித்து திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலர் ஞானசேகரனைச் சந்தித்து விளக்கம் கேட்டோம். "இதுகுறித்து நீங்கள் மாவட்ட ஆட்சியரிடம்தான் விசாரிக்க வேண்டும். நான், வட்ட வழங்கல் அலுவலர் மட்டும்தான். வரும் சரக்குகளை வட்டத்துக்குட்பட்ட அனைத்து நியாய விலை கடைகளுக்குக் கொடுப்பதும், அவற்றைக் கண்காணிப்பதும்தான் என் வேலை. மேலும், மக்களின் புகார்களை ஏற்றுச் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் அபராதம் விதித்து எதிர்காலத்தில் அதன்பிறகு எவ்வித பிரச்னையும் வராமல் நடவடிக்கை எடுக்க முடியும். அதே நேரத்தில், அரசு எங்களுக்குச் 80 சதவிகித அரிசியைத்தான் வழங்கிவருகிறது. அதைப் பிரித்து அந்தந்த நியாயவிலை கடைகளுக்கு அளித்துச் சமன்செய்து அளிக்கும்படி கூறுகிறோம். இந்த 80 சதவிகித அரிசியைத்தான் அனைவருக்கும் கொடுங்கள் என்று கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்துகிறோம். மேலும், வழங்கப்படாதவர்களுக்கு அடுத்த மாதம் முன்னுரிமை  கொடுத்து கொடுங்கள் என்று கூறுகிறோம். ஆனால், அதையும் மீறி ஒருசில கடை ஊழியர்கள் தவறு செய்கிறார்கள்" என்றார். 

மேலும் அவர், "நாங்கள் போலி குடும்ப அட்டைகளை இப்போது கட்டுப்படுத்திக் கொண்டு வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு 70 சதவிகித அளவு அரிசிதான் அனைவருக்கும் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது 35 கிலோ அரிசியைப் பெறும் 65-க்கும் மேற்பட்ட போலி குடும்ப அட்டைகளைக் கண்டறிந்து முடக்கியுள்ளோம். இதேபோல், பல போலி அட்டைகளைக் கண்டுபிடித்துள்ளோம். இதனால் 70 சதவிகிதமாக அளிக்கப்பட்டு வந்த அரிசி, தற்போது 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் அது 100 சதவிகிதமாக மாறிவிடும் எனும் நம்பிக்கை உள்ளது. இது தவிர, விரைவில் பயோமெட்ரிக் சிஸ்டத்தையும் கொண்டுவர உள்ளோம். இது கொண்டுவரப்பட்டால் பல போலி அட்டைகள் ஒழிக்கப்படும். அப்போது, அனைவருக்கும் 100 சதவிகிதம் அரிசி வழங்கப்படும். மேலும், விலையில்லா அரிசி தேவைப்படாத சிலர், அந்த அரிசியைச் சந்தையில் விற்றுவருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

கூட்டேரிபட்டு, சிங்கனூர், வைரம்பேட்டை உள்ளிட்ட ரேஷன் கடைகளிலும் இதேநிலைதான் உள்ளது என்கின்றனர், அப்பகுதி மக்கள்.