Published:Updated:

2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய வாகனங்கள் என்னென்ன?|

2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய வாகனங்கள் என்னென்ன?|
2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய வாகனங்கள் என்னென்ன?|

150-160சிசி பைக் செக்மென்ட்டில் (எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டர்) ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட ஒரே மாடலான FZ V2.0 பைக்கின் புதிய மாடலைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது யமஹா.

இதோ.... மற்றுமொருமுறை ஒரு வருடம் சர்ரென முடிந்துவிட்டது; ஆம், 2018-ம் ஆண்டு முடிவுக்கு வந்து, 2019-ம் ஆண்டில் நுழைய இருக்கிறோம். கடந்த ஆண்டு வெளியான கார்கள் மற்றும் விலை உயர்வையும் பார்த்துவிட்டோம். தற்போது புத்தாண்டின் தொடக்கத்தில் (ஜனவரி மற்றும் பிப்ரவரி) என்னென்ன கார் மற்றும் பைக் வெளிவரப்போகின்றன என்பதைப் பற்றிதான் இந்தக் கட்டுரை. 

டொயோட்டா கேம்ரி - ஜனவரி 18, 2019

ஹோண்டா அக்கார்டு, ஃபோக்ஸ்வாகன் பஸாத், ஸ்கோடா சூப்பர்ப் ஆகிய கார்களுக்குப் போட்டியாக, எட்டாவது தலைமுறை கேம்ரியை ஹைபிரிட் அவதாரத்தில் மட்டும் அறிமுகப்படுத்த உள்ளது டொயோட்டா. இந்த நிறுவனத்தின் TNGA ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் (லெக்ஸஸ் ES 300h உற்பத்தியாகும் அதே GA-K ப்ளாட்ஃபார்ம்தான்) இந்த பிரிமியம் செடானில் V-வடிவ கிரில், பெரிய ஏர் டேம், ஸ்டைலான பக்கவாட்டு பாடி லைன், உயர்த்தப்பட்ட பூட் பகுதி என ஸ்போர்ட்டியான டிசைனைக் கொண்டிருக்கிறது. இதில் இருப்பது அதே 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் என்றாலும், அது 176bhp பவர் மற்றும் 22.1kgm டார்க்கை வெளிப்படுத்தும்படி ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 118bhp பவரை வெளிப்படுத்துகிறது. 

இவை இரண்டும் சேர்ந்து இயங்கும்போது, 208bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய காராக கேம்ரி இருக்கிறது. பூட் பகுதியிலிருந்து சீட்டுக்கு அடியே பேட்டரிகள் சென்றுவிட்டதால், முன்பைவிட ஹைபிரிட் சிஸ்டம் சிக்கனமாக இருக்கும் என்கிறது டொயோட்டா (உபயம் - டொயோட்டா ஹைபிரிட் சிஸ்டம் II). 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 7 இன்ச் MID, 10 இன்ச் Heads Up டிஸ்பிளே எனக் கேபின் மொத்தமும் மாடர்ன்னாகவும் டிஜிட்டல் மயமாகவும் ஆகியிருக்கிறது. முந்தைய மாடலைவிடக் குறைவான அளவு மாசு வெளியிடுவதால் (113g of CO2 Per KM), 2022-ம் ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் Corporate Average Fuel Efficiency (CAFE) கோட்பாடுகளுக்கு இப்போதே தகுதிபெற்றுவிட்டது கேம்ரி! FAME (Faster Adoption and Manufacturing of Hybrid and Electric vehicles) விதிகளுக்கு இந்தக் கார் உடன்பட்டாலும், ஹைபிரிட் கார்களின் மீது விதிக்கப்படும் அதிக GST காரணமாக, இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 39 லட்சமாக இருக்கலாம்.

யமஹா FZ ABS - ஜனவரி 21, 2019

150-160சிசி பைக் செக்மென்ட்டில் (எக்ஸிக்யூட்டிவ் கம்யூட்டர்) ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் கொண்ட ஒரே மாடலான FZ V2.0 பைக்கின் புதிய மாடலைக் களமிறக்கும் முடிவில் இருக்கிறது யமஹா. எனவே, டிசைன் மற்றும் வசதிகள் தவிர, பைக்கில் மெக்கானிக்கல் மாற்றங்களையும் எதிர்பார்க்கலாம். அதன்படி FZ 25 பைக்கில் இருப்பதுபோன்ற LED ஹெட்லைட், பாடி பேனல்கள் இங்கே இடம்பெறலாம். சிங்கிள் பீஸ் சீட் - மட்கார்டு - கிராப் ரெயில், இன்ஜின் கார்டு புதிது. டெயில் லைட் மற்றும் டிஜிட்டல் மீட்டரில் மாற்றமிருக்காது எனத் தெரிகிறது. முன்பக்க டிஸ்க் பிரேக் அளவில் பெரிதாகியுள்ளது. `தனது வகையிலேயே பவர் குறைவான பைக்காக இருக்கிறது FZ V2.0' எனும் குறைபாட்டை, இந்த மாடலில் யமஹா களைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதேபோல YZF-R15 V3.0 பைக்கின் ஏபிஎஸ் மாடலையும் நாம் எதிர்பார்க்கலாம். 

டாடா ஹேரியர் - ஜனவரி 23, 2019

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கான விடையாக, தனது பிரிமியம் எஸ்யூவியான ஹேரியரை வெளியிடுகிறது டாடா மோட்டார்ஸ். ஜீப் காம்பஸ், மஹிந்திரா XUV 5OO, ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய கார்களுக்குப் போட்டியாக வரும் இதில் இருப்பது, 140bhp பவர் மற்றும் 35kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் Kryotec டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி. லேண்ட் ரோவர் எஸ்யூவிகள் தயாரிக்கப்படும் அதே D8 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், ஹேரியரிலும் அதில் இருப்பதுபோன்ற  Terrain Response சிஸ்டம் (Normal, Wet, Rough) இங்கும் இருக்கிறது. கூடவே டாடாவின் ஸ்பெஷலான Multi Drive 2.0 மோடுகள் (Eco, City, Sport) வழங்கப்பட்டிருப்பது பெரிய ப்ளஸ். 

Impact 2.0 கோட்பாடுகளின்படி டிசைன் செய்யப்பட்டிருக்கும் இந்த பிரிமியம் எஸ்யூவியின் தோற்றம், ஐரோப்பிய கார்களை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கிறது. 8.8 டச் ஸ்க்ரீன் சிஸ்டம், 7 இன்ச் MID, JBL சவுண்ட் சிஸ்டம், Puddle Lamps, ஆட்டோமேட்டிக் ஏசி எனக் கேபின் செம மாடர்ன் ரகம். பாதுகாப்பு வசதிகளைப் பொறுத்தவரை, 6 காற்றுப்பைகள் - ABS - EBD - ESP - HDC - ISOFIX - கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் - ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் - Rollover Mitigation எனப் பட்டியல் நீள்கிறது. XE, XM, XT, XZ எனும் 4 வேரியன்ட்களில் கிடைக்கும் ஹேரியரின் நீளம்/அகலம்/உயரம்/வீல்பேஸ் -  4,598மிமீ/1,894மிமீ/1,706மிமீ/ 2,741மிமீ என்றளவில் இருக்கிறது. இதன் புக்கிங் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், ஜனவரி இறுதியில் டெலிவரிகள் ஆரம்பமாகலாம். 16 - 21 லட்ச ரூபாய் விலையில் கார் வெளிவரலாம்.

மாருதி சுஸூகி வேகன்-ஆர்: ஜனவரி 23, 2019

சமீபத்தில் வெளிவந்திருக்கும் புதிய வேகன்-ஆர் காரின் ஸ்பை படங்களை வைத்துப் பார்க்கும்போது, வெளிநாடுகளில் இருக்கும் மாடலுடன் ஒப்பிடும்போது இந்திய மாடல் வித்தியாசமாக இருக்கிறது. வழக்கமான டால் பாய் டிசைன்தான் என்றாலும், கொஞ்சம் ஸ்டைல் கூடியிருக்கிறது. ஆனால், ஹெட்லைட் - கிரில் - பம்பர் ஆகியவை சிம்பிளாக இருக்கின்றன. புதிய வேகன்-ஆர் முன்பைவிட பெரிதாகியிருப்பதால், கேபினில் இடவசதி கூடியிருக்கலாம். புதிய எர்டிகா போவே இதன் பின்பக்கமும் Floating Roof பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பில்லரில் வைக்கப்பட்டிருக்கும் டெயில் லைட்ஸும் அளவில் வளர்ந்திருக்கிறது. 

தற்போதைய மாடல் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய மாடலும் தயாரிக்கப்படும் என்றாலும், புதிய க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப அது மேம்படுத்தப்பட்டுள்ளது. 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல்/AMT - LPG/CNG ஆப்ஷன் ஆகியவை தொடர்கின்றன. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்டாண்டர்டாக 2 காற்றுப்பைகள், டச் ஸ்க்ரீன் சிஸ்டம் எனக் கேபினில் புதிய வசதிகள் எட்டிப்பார்க்கின்றன. ஹூண்டாய் சான்ட்ரோ, டாடா டியாகோ, டட்ஸன் கோ ஆகிய கார்களுக்குப் போட்டியாக வெளிவரப்போகும் புதிய வேகன்-ஆர், உத்தேசமாக 4-6 லட்சம் விலையில் கிடைக்கலாம். 

மெர்சிடீஸ் பென்ஸ் V-க்ளாஸ்: ஜனவரி 24, 2019

 புத்தாண்டில் இந்தியாவுக்கான தனது முதல் காராக, பிரிமியம் எம்பிவியான V-க்ளாஸ் காரைக் கொண்டுவருகிறது மெர்சிடீஸ் பென்ஸ். 2014 முதலாக உலகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் இந்த மாடலை, தக்க சமயத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது என்றே சொல்லலாம். 5140-5370 மிமீ என நீளத்தில் இரு ஆப்ஷன்கள் இருப்பதால், சீட்டிங்கிலும் இரு ஆப்ஷன் கிடைக்கும். சர்வதேச மாடலில் Luxury Sleeper வசதி இருக்கிறது. இதன்படி பின்பக்க இருக்கையை மடக்கினால், கட்டில் போன்ற வசதி கிடைத்துவிடுகிறது! இந்தியாவின் வாங்கும் திறனை மனதில்வைத்து, முதற்கட்ட V-க்ளாஸ் கார்களை ஸ்பெயினில் இருந்து CBU முறையில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யவுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். 

பின்னர் டிமாண்ட் அதிகரிக்கும் பட்சத்தில், உள்நாட்டிலேயே இந்த பிரிமியம் எம்பிவியை அசெம்பிள் செய்வது பற்றி அந்த நிறுவனம் முடிவுசெய்யலாம். ஜெர்மனியுடன் ஒப்பிடும்போது ஸ்பெயினில் உற்பத்திச் செலவு குறைவு என்பதால், V-க்ளாஸ் காரின் எக்ஸ் ஷோரூம் விலை 75-80 லட்சம் என்றளவில் இருக்கலாம். இதில் BS-6 மாசு விதிகளுக்கு ஏற்ற மெர்சிடீஸ் பென்ஸின் லேட்டஸ்ட் OM654 சீரிஸ் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 194bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்தும் இது, BS-4 எரிபொருளிலும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Diesel Particulate Filter (DPF), Selective Catalytic Reduction (SCR), AdBlue டேங்க் ஆகியவை, குறைவான மாசை இன்ஜின் வெளியிடுவதற்குத் துணை நிற்கின்றன. 

மஹிந்திரா XUV 3OO - பிப்ரவரி 15, 2019

ஸாங்யாங் டிவோலியின் X100 ப்ளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டிருக்கும் XUV 3OO காரின் புக்கிங், சில மஹிந்திரா டீலர்களில் ஏற்கெனவே Unofficial-ஆகத் துவங்கிவிட்டது; ஆனால், இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் அதிகாரபூர்வமான படங்கள் ஏற்கெனவே வெளிவந்துவிட்டன. XUV 5OO மற்றும் டிவோலி கலந்த கலவையாக XUV 3OO-ன் டிசைன் அமைந்திருக்கிறது. 8 இன்ச் டச் ஸ்க்ரீன், சன்ரூஃப், டூயல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, லெதர் சீட்கள், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், 7 காற்றுப்பைகள், 17 இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள் என வசதிகளில் இந்த காம்பேக்ட் எஸ்யூவி எகிறியடித்திருக்கிறது. இதில் மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன், மராத்ஸோவில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் வழங்கப்பட்டும். இரண்டுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்டு எக்கோஸ்போர்ட் தவிர பிரிமியம் மிட்சைஸ் எஸ்யூவியான க்ரெட்டாவுடனும் XUV 3OO மோதுகிறது.

பெனெல்லி TRK 502/TRK 502X - பிப்ரவரி 18, 2019

இந்தியாவில் இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருந்த தனது அட்வென்ச்சர் பைக்குகளை, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு களமிறக்க உள்ளது பெனெல்லி. இதில் TRK 502 ஆன்-ரோடு மாடலாகவும், TRK 502X ஆஃப்-ரோடு மாடலாகவும் பொசிஷன் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் DSK குழுமம் இதை இந்தியாவில் காட்சிப்படுத்தியிருந்தாலும், ஹைதராபாத்தைச் சேர்ந்த மஹாவீர் குழுமம்தான் இதை விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது. இந்தப் புதிய கூட்டணியின் முதல் மாடலாக TRK 502/TRK 502X இருக்கும். என்றாலும் இரண்டிலுமே ஒரே இன்ஜின் - சேஸி - சஸ்பென்ஷன் - வசதிகள்தான்! TRK 502-ன் இருபுறமும் 17 இன்ச் அலாய் வீல்கள் இருந்தால், TRK 502X-ன் முன்பக்கத்தில் 19 இன்ச் ஸ்போக் வீலும், பின்பக்கத்தில் 17 இன்ச் ஸ்போக் வீலும் இருக்கின்றன. 

50மிமீ USD ஃபோர்க் - மோனோஷாக் - ஏபிஎஸ் உடனான இரட்டை 320மிமீ டிஸ்க்/260மிமீ டிஸ்க் என சஸ்பென்ஷன் மற்றும் பிரேக் அமைப்பு இரண்டுக்குமே ஒன்றுதான். பெனெல்லியின் இந்த அட்வென்ச்சர் பைக்கில் இருப்பது, 47.6bhp பவர் மற்றும் 4.5kgm டார்க்கை வெளிப்படுத்தும் 499.6சிசி, லிக்விட் கூல்டு - பேரலல் ட்வின் - Fi இன்ஜின், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு இருக்கிறது. எனவே, டெக்னிக்கல் விவரங்களில் பைக் கவனத்தைக் கவர்ந்தாலும், எடை விஷயத்தில் பருமனாகிவிட்டது (213 கிலோ). எனவே, போட்டி பைக்குகளான SWM Superdual T, சுஸூகி V-Strom 650XT, கவாஸாகி வெர்சிஸ் 650 விட இதன் பர்ஃபாமென்ஸ் டல்லாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! ஆனால் விலை விஷயத்தில் (5-6 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) இது அசத்தும் என நம்பலாம்.

அடுத்த கட்டுரைக்கு