Published:Updated:

`96' ரூட்டில் `86’...! இது சமூகரெங்கபுரம் ஆசிரியர்கள் ரீ யூனியன்

``எல்லாரும் வந்திருக்க மாட்டாங்கன்னுதான் நினைச்சிட்டே வந்தேன். கிராமத்துல வந்து இறங்கினா, அத்தனை பேரும் இருக்காங்க. இதுவரை தொடர்புகொள்ள முடியாம இருந்த சிலரையும் இந்த விழாவுல சந்திச்சிட்டேன். இனி நாங்க எல்லாருமே புது உறவினர்கள்.’’

`96' ரூட்டில் `86’...! இது சமூகரெங்கபுரம் ஆசிரியர்கள் ரீ யூனியன்
`96' ரூட்டில் `86’...! இது சமூகரெங்கபுரம் ஆசிரியர்கள் ரீ யூனியன்

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, அமோக வரவேற்பைப் பெற்ற படம் `96'. ஹீரோவும், ஹீரோயினும் பழைய நட்புகளைத் தேடிச் சென்று பசுமையான கடந்த காலங்களை திரும்பிப் பார்ப்பதே கதை. 96 கதை போலவே, 86-ம் ஆண்டு ஒன்றாகப் படித்த முன்னாள் மாணவர்கள் தங்களது கடந்த காலத்தை மீட்டெடுத்த நிகழ்வு ஒன்று, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகேயுள்ள பேரிலோவன்பட்டி கிராமத்தில் சமீபத்தில் நடந்தது. இந்த முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்கள் என்பது ஹைலைட்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பேரிலோவனபட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமாரிடம் பேசினோம்.

``திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல இருக்கிற சமூகரெங்கபுரம் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துல 1985-87 கல்வியாண்டுல படிச்சவன் நான். இப்போ மத்திய அரசின் தணிக்கைத் துறையில் அதிகாரியாக சென்னையில் வேலைபார்க்கிறேன். பிறந்து வளர்ந்த பேரிலோவன்பட்டி கிராமத்துல வீடு கட்ட ஆசைப்பட்டு, இந்தாண்டு அந்த ஆசை நிறைவேறுச்சு.

அந்தப் புதுவீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்குத்தான், ஒண்ணா `டீச்சர் ட்ரெய்னிங்' படிச்ச எல்லாரையும் அழைக்கலாம்னு முடிவு செய்தேன். படிச்சு முடிச்சு முப்பது வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. ரெண்டாவது வருஷம் படிப்பு முடிஞ்ச கடைசி நாள் சந்திச்சது. அதுக்கப்புறம் நாங்க எந்தவொரு சந்தர்ப்பத்துலயும் சேர்ந்து சந்திச்சதே இல்லை. இப்பதான் சோஷியல் மீடியா புண்ணியத்துல உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் நிமிஷத்துல தொடர்புகொள்ள முடியுதே! அதனால இப்படியொரு சந்திப்பு சாத்தியப்படும்னு தோணுச்சு. எங்கிட்ட இருந்த சிலரோட தொடர்பு எண்களைச் சேர்த்து ஒரு வாட்ஸ் அப் குரூப் க்ரியேட் பண்ணினேன். அந்த ஒரு சிலர்கிட்ட இருந்து மத்தவங்க, அவங்ககிட்ட இருந்து இன்னும் சிலர்னு ஒவ்வொருத்தரா தொடர்புகொள்ள முடிஞ்சது. 

எங்க செட்ல மொத்தம் நாற்பது பேர். தர்மலிங்கம், பால்ராஜ்னு ரெண்டு பேர் இப்ப இல்லை. மீதி 38 பேர்ல நாலு பேரைத் தவிர மத்த எல்லாரும் கிரகப்பிரவேசத்துல கலந்துகிட்டாங்க. சரியா பேருந்து வசதி கூட இல்லாத என்னோட கிராமத்தை விசாரிச்சுக் கண்டுபிடிச்சு அத்தனை பேரும் அன்னைக்கு திரண்டு வந்தது, எங்க எல்லாருடைய வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வு'' என்றார் செந்தில் குமார்.

இந்த `86' நண்பர்களின் சந்திப்பை ஒருங்கிணைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்கள், முருகேசன், தமிழ்ராஜன், ஜபருல்லா சாத்தான்குளம் அந்தோணி சார்லஸ் மற்றும் சில நண்பர்கள். அந்தோணி சார்லஸிடம் பேசினோம்.

``படிச்ச சமூகரெங்கபுரத்துலயே எல்லாரும் சந்திச்சா நல்லா இருக்குமேன்னு ரொம்ப நாளா நினைச்சிட்டிருந்தேன். ஆனா, எல்லாரும் ஆளுக்கொரு இடத்துல இருந்ததாலும், வேலை பளுவாலும், அந்த எண்ணம் நிறைவேறாம தள்ளிப் போயிட்டே இருந்தது. அப்படியான நேரத்துலதான் செந்தில் வீட்டு கிரகப்பிரவேசம் வந்தது. எங்கள்ல ஒருசிலரைத் தவிர மத்த எல்லாருமே மதுரைக்குத் தெற்கேதான் இருக்கோம்கிறதால, செந்தில் கிராமம் எங்களுக்கு ரொம்ப தொலைவு இல்லைங்கிறது பெரிய சௌகர்யமாச்சு. அதனால, இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது'ங்கிறதுல ரெண்டு மூணு பேர் முதல்ல உறுதியா இருந்தோம். அதனால ஒவ்வொருத்தரா மத்தவங்ககிட்டப் பேசி ஒருவழியா எல்லாரையும் கூட்டி வர முடிஞ்சது'' என்றார்.

கிருஷ்ணகிரியிலிருந்து வந்திருந்த ஜான்சன் ஞானகுமார், `இந்த நிகழ்ச்சியில கலந்துக்கறது உறுதியான நாள்ல இருந்தே சந்தோஷத்துல சரியா தூக்கமே இல்லை. இன்னைக்கு ஆசிரியர்களா இருந்தாலும் நாங்களும் மாணவர்களா இருந்து வந்தவங்கதானே? ஒரு தலைமுறை கடந்து சந்திக்கிறோம். `யார் யார் எப்படி இருப்பாங்க', `அடையாளம் காண முடியுமா...’ இப்படி பல யோசனைகள். எல்லாரும் வந்திருக்க மாட்டாங்கன்னுதான் நினைச்சிட்டே வந்தேன். கிராமத்துல வந்து இறங்கினா, அத்தனை பேரும் இருக்காங்க. இதுவரை தொடர்புகொள்ள முடியாம இருந்த சிலரையும் இந்த விழாவுல சந்திச்சிட்டேன். இனி நாங்க எல்லாருமே புது உறவினர்கள். அடுத்து எங்கள்ல யார் வீட்டுல என்ன விசேஷம்னாலும் எல்லாரும் கலந்துக்குறதுன்னு முடிவு செய்திருக்கோம். அதோட, கூடிய சீக்கிரமே நாங்க படிச்ச சமூகரெங்கபுரத்துக்கும் குடும்பத்தோட ஒரு விசிட் போற திட்டம் இருக்கு'' என்றார்.

கிரகப்பிரவேச விழாவில் கூடிய இந்த நண்பர்களில் செந்தில் குமாரைத் தவிர அனைவருமே ஆசிரியர்களாக, தலைமை ஆசிரியர்களாக அல்லது கல்வித் துறை அதிகாரிகளாகவே பணியாற்றி வருகிறார்கள். (செந்தில்குமாரும் ஆசிரியராக இருந்தவரே. பிறகு போட்டித் தேர்வெழுதி தணிக்கைத் துறைப் பணியில் சேர்ந்தார். இவரது மனைவி ரேணுகா தேவி தற்போது அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்) இவர்களில் அகத்தியன் வில்ஃப்ரட், செல்வம் இருவரும் இந்தாண்டு பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.

``படிச்சு முடிச்சுட்டு, `எங்க வேலை கிடைக்கும்'னு தேடத் தொடங்கினப்ப பிரிஞ்சது. வேலை கிடைச்சு, திருமணம், குடும்பம், குழந்தைன்னு அடுத்தகட்டங்களுக்குப் போய் வேலையில இருந்து ரிட்டயர்டு ஆகிறபோது சந்திக்க முடிஞ்சிருக்கு. இப்பவாவது சந்திக்க முடிஞ்சதே, இதுவே பெரிய பாக்கியம்' என்றார்கள் அகத்தியன், செல்வன் இருவரும்.

இந்த 86 பேட்ஜ் மாணவர்கள் விரைவிலேயே தங்களை ஆசிரியர்களாக்கிய சமூகரெங்கபுரத்திலும் சங்கமிக்கட்டும்!