Published:Updated:

கி.பி.536... மனிதர்கள் சூரியனையே தொலைத்த வருடம் இது!

கி.பி.536... மனிதர்கள் சூரியனையே தொலைத்த வருடம் இது!
கி.பி.536... மனிதர்கள் சூரியனையே தொலைத்த வருடம் இது!

மேற்கு ஐரோப்பாவிலிருந்து சீனா வரை விவசாயம் பெருநாசமடைந்ததாக மத்தியகால வரலாற்றில் பதிவுகள் காணப்படுகின்றன. அடர்த்தியான வறண்ட புகைமூட்டம் வான் முழுவதும் நிரம்பப் பரவியிருந்ததாக மத்தியக் கிழக்கு, சீனா, ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

வ்வோர் ஆண்டின் இறுதியிலும் ஒப்பாய்வு நடக்கும். முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு எந்த விதத்தில் சிறந்தது? எவ்வளவு மோசமாக இருந்தது?

அரசியல் சிக்கல்கள், வன்முறைகள், ஒடுக்குமுறைகள், குற்றங்கள், சூழலியல் பேரழிவுகள் என்பன போன்ற விஷயங்களை அலசி ஆராய்வோம். எவ்வளவு ஆராய்ந்தாலும் குறிப்பிட்ட ஓர் ஆண்டைத் தவிர மற்ற ஆண்டுகளில் வாழ்ந்த மனிதர்கள் எவ்வளவோ கொடுத்து வைத்தவர்கள். ஆம், அந்த வருடத்தில் வாழ்ந்தவர்கள்தாம் மனித வரலாற்றின் மிக மோசமான ஆண்டில் வாழ்ந்த துர்பாக்கியசாலிகள். அந்த ஆண்டு கி.பி. 536.

அந்த ஆண்டு ஏன் அவ்வளவு மோசமானது? சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அவர்கள் சூரியனைத் தொலைத்துவிட்டார்கள்.

``என்ன சூரியனையே தொலைத்துவிட்டார்களா?" என்று ஷாக் ஆகவேண்டாம். சூரியன் எங்கும் போகவில்லை. அதே இடத்தில்தான் இருந்தது. ஆனால் என்ன, அந்த ஆண்டில் பூமியின் வடகோளத்தில் வாழ்ந்த மக்களின் கண்களுக்குத்தான் அது தெரியவில்லை.

பிரைசாண்டியப் பேரரசில் 5ம் நூற்றாண்டின் முதற்பாதி முழுவதும் வாழ்ந்தவர் புரோகோபியஸ் (Procopius) என்ற வரலாற்று ஆசிரியர். அவர் நேரில் கண்டதை இப்படிக் குறிப்பிட்டுள்ளார்,

``இந்த ஆண்டு மிக மோசமான அறிகுறி தோன்றியது. சூரியன் அதன் ஒளியைத் தர மறுத்துவிட்டது. மாதக்கணக்கில் கிரகணத்திலேயே இருந்தது. அது வீசிய கதிர்களில் துளிகூட வெப்பம் இருக்கவில்லை"

Photo Courtesy: https://creativecommons.org/licenses/by/4.0 Wikimedia Commons

அதேபோல் சீனாவிலும் அப்போது வடக்கு மற்றும் தெற்கு சாம்ராஜ்ஜியங்கள் இரண்டின் வரலாற்றிலும் இந்தப் பேரழிவு குறிப்பிடப்பட்டுள்ளது. கோடைக்காலத்தில்கூட பனிப்பொழிவு இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆண்டில் பல பகுதிகளிலும் அறுவடையே இல்லையென்றும் வெகுசில இடங்களில் மட்டும் அதுவும் மிகத் தாமதமாகவே அறுவடை செய்யமுடிந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவிலிருந்து சீனா வரை விவசாயம் பெருநாசமடைந்ததாக மத்தியகால வரலாற்றில் பதிவுகள் காணப்படுகின்றன. அடர்த்தியான வறண்ட புகைமூட்டம் வான் முழுவதும் நிரம்பப் பரவியிருந்ததாக மத்தியக் கிழக்கு, சீனா, ஐரோப்பிய வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

இந்த வரலாற்றுப் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு தன் ஆய்வைத் தொடங்கினார்கள் இயற்கை வரலாற்று ஆய்வாளர்கள். பல நூற்றாண்டுகளாக இருக்கும் ஓக் மரம், சிலி நாட்டின் ஃபிட்ஸ்ரோயா (Fitzroya tree) போன்ற மரங்களை ஸ்வீடன், ஃபின்லாந்து, ஐயர்லாந்து ஆகிய நாடுகளில் ஆய்வு செய்தனர். அதே சமயம், கிரீன்லாந்து மற்றும் அன்டார்டிகாவில் சில பனிப்பாறைகளின் மையப் பகுதிகளைக் குடைந்து எடுத்து சோதனை செய்தனர். அவற்றில் 534 முதல் 538 வரையிலான அந்த இடைப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குள் படிந்த கந்தகப் படிமங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இவற்றின் மூலம் அத்தகைய சூழலியல் மாற்றங்களுக்குக் காரணம் வளிமண்டலத்தில் பரவிய புகைமூட்டமாகத்தான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வளிமண்டலத்தில் கந்தகம் கலந்த நச்சுப்புகை எப்படிக் கலக்கும்? வடகோளம் முழுவதும் வளிமண்டலத்தில் யாரும் வேண்டுமென்றே கலந்திருக்க மாட்டார்கள். வேறு எப்படிக் கலந்திருக்கும்? இரண்டு வழிகளில் இது நடக்கலாம். ஒன்று எரிகல் விழுதல், இன்னொன்று எரிமலை வெடிப்பு. அந்த வருடத்தில் எரிகல் விழுந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் ஓர் எரிமலை வெடித்துள்ளது.

1816-ம் ஆண்டைப் பற்றி நாம் படித்திருப்போம். இந்தோனேசியாவின் சும்பாவா என்ற பகுதியில் அமைந்திருக்கும் தம்போரா என்ற எரிமலை வெடித்தபோது ஏற்பட்ட சேதங்களால், அந்த ஆண்டு முழுவதும் கோடைக்காலமே இல்லை. அதை வரலாற்றில் கோடைக் காலமற்ற வருடமாகக் (A Year Without Summer) குறிப்பிடுகிறார்கள். அந்த நிகழ்வுக்குப் பிறகு அங்கு படிமங்களாகப் படிந்த சல்ஃபேட்டுகளைவிடப் பலமடங்கு அதிகமான சல்ஃபேட் இங்கு பரவியுள்ளது.

அந்தக் கந்தகப் புகை கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு வளிமண்டலத்தில் பரவியிருந்தது. இதன் விளைவாகப் பூமியின் வெப்பநிலையே சுமார் ஒன்றரை டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்துவிட்டது. வெப்பநிலையில் ஏற்பட்ட அந்தத் திடீர் மாற்றம், கடந்த 2300 ஆண்டுகளிலேயே அதிகக் குளிர்ச்சியான ஆண்டாக கி.பி.536-ம் ஆண்டைக் குறிப்பிடும் அளவுக்கு இருந்துள்ளது. அதனால், பயிர்கள் வளரவில்லை, மரம், செடி என்று அனைத்துமே பாதித்தன. இறுதியில் உணவுப் பற்றாக்குறை கற்பனைகூட செய்யமுடியாத அளவுக்கு இருந்தது.

ஐரிஷ் சரித்திரக் குறிப்புகளில் அந்த ஆண்டு மட்டும் அதைத் தொடர்ந்துவந்த ஆண்டுகளைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளார்கள்,

``536-ம் ஆண்டு ரொட்டிகளே விளையவில்லை. அதைத் தொடர்ந்து 539-ம் ஆண்டுவரை இங்கு யாரும் ரொட்டியைச் சாப்பிடவே இல்லை"

கி.பி. 541-ம் ஆண்டு இன்னும் மோசமான பிரச்னைகளை வடகோள மக்கள் சந்தித்தார்கள். 536-ம் ஆண்டு ஏற்பட்ட எரிமலை வெடிப்பு நிகழ்வின் தாக்கம் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. அதற்கு அடுத்த ஆண்டே ஆபத்தான பிளேக் நோய் மக்களைப் பிடிக்கத் தொடங்கியது. ஏற்கனவே பஞ்சத்தால் மக்கள்தொகையில் பாதியை இழந்துவிட்ட வடகோளம், அப்போது பிளேக் நோய்க்குத் தன் மக்களை இழந்துகொண்டிருந்தது. உதாரணத்துக்கு அப்போதைய பிரைசாண்டியன் பேரரசில் வாழ்ந்த மக்களில் மூன்றில் ஒரு பங்கு பிளேக் நோய்க்குப் பலியானது. பேரழிவின் வீரியம் பெரிதாகிக் கொண்டே போனது.

``541-ம் ஆண்டுவரை வடகோளத்தில் நிகழ்ந்த அழிவுகள் அதிகம். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் மனித வரலாற்றின் மிக மோசமான காலத்தை அனுபவித்தவர்கள். அந்தத் தொடர்ச்சியான அழிவுகளுக்குக் காரணகர்த்தாவே 536-ம் வருடம்தான். அதனால் அந்த ஆண்டுதான் மனித வரலாற்றின் மிகமோசமான ஆண்டு" என்று கூறுகிறார் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மத்தியகால வரலாற்று ஆசிரியர் மைக்கேல் மெக்கார்மிக்.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த இயற்கை வரலாற்று ஆய்வுகள், 535 மற்றும் 536-ம் ஆண்டுகளில் பூமி அதிகமாகக் குளிர்ச்சி அடைந்தது தெரியவந்தது. அதற்கு அடுத்ததாக மீண்டும் 542-ம் ஆண்டு பூமியின் தட்பவெப்பநிலை மீண்டும் குறைந்தது. இவை அப்போது ஏதோ மோசமான சூழலியல் மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட வைத்தது. அதுதான் அப்போது நிகழ்ந்த பஞ்சம், குளிர்காலம், சூரிய ஒளி ஊடுருவாமை போன்றவற்றுக்குக் காரணம் என்றும் முடிவுசெய்தனர். குறிப்பாக 536-ம் ஆண்டு. அப்போது என்ன நடந்திருக்கும்?

மைக்கேல் மெக்கார்மிக் உட்பட ஓர் ஆய்வுக்குழு விடைதேடிப் புறப்பட்டது. முடிவில் ஐஸ்லாந்தில் இருந்த ஒரு எரிமலை வெடித்ததுதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்று முடிவுசெய்தனர். ஸ்விஸ் பனிமலையிலிருந்து 235 அடி பரப்பளவுடைய பனிப்பாறை மையப்பகுதியை ஆய்வுசெய்தனர். அதில் படிந்திருந்த தூசுப் படிமங்கள், காற்றில் பரவும் நுண்துகள்கள் போன்றவற்றின் படிமங்களை ஆய்வுசெய்தனர். அதில் எரிமலைத் துகள்கள் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எரிமலைத் துகள்களுடைய படிமங்கள் ஐஸ்லாந்தில் கிடைத்த எரிமலை வாயுப் படிமங்களோடு இதுவும் ஒத்துப்போனது. ஒரு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்ததற்கான ஆதாரமாக ஆய்வாளர்கள் இதைக் குறிப்பிட்டனர். அந்த நிகழ்வுதான் மிகப்பெரிய அளவில் கந்தகம் கலந்த வாயுவை வளிமண்டலத்தில் பரவ விட்டிருக்க வேண்டும். அந்த வாயுவின் அடர்த்திதான் சூரிய ஒளி ஊடுருவ முடியாமல் வடகோளம் முழுக்க ஓர் ஆண்டுக்கும் அதிகமாகக் குளிர்காலம் வியாபித்திருக்கக் காரணம்.

ஆனால், இதே ஆண்டில் நடந்த வேறு சில நிகழ்வுகளையும் சில ஆய்வுக் குழுக்கள் காரணமாகக் கூறுகின்றன. 2015-ம் ஆண்டு வட அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழு எரிமலை வெடிப்புதான் இதற்குக் காரணமென்று ஒப்புக்கொண்டது. ஆனால், அந்த வெடிப்பு ஐஸ்லாந்தில் நிகழ்ந்ததல்ல, வட அமெரிக்காவில் நிகழ்ந்ததென்று கூறியது. அதற்கும் அமெரிக்காவின் ஓக் மரங்களில் கிடைத்த ஆய்வு முடிவுகளையே குறிப்பிட்டனர். அமெரிக்காவைவிட பிரிட்டனுக்கும் வடமேற்கு ஐரோப்பாவுக்கும் அருகில்தான் ஐஸ்லாந்து அமைந்துள்ளது. அதனால் அங்கு வரையிலும் புகைமூட்டம் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று வாதிடுகிறார்கள் சிலர். வரலாறும் வடகோளத்தில் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்குப் பகுதி, சீனா ஆகியவற்றின் வரலாறுகளில்தான் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு வடமேற்கு ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் அதிகமான சிக்கல்களையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அந்த அளவுக்குப் பாதிக்கவில்லை என்றும் ஆய்வுமுடிவுகள் கூறுகின்றன. விவசாயம் செய்ய இயலாமை, பஞ்சம், நோய், மரணம் என்று அனைத்துவிதமான கொடுமைகளையும் 536-ம் ஆண்டு கொடுத்துச் சென்றது.

சுற்றுச்சூழல் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாறும். கேள்வி என்னவென்றால் அது தானாக மாறியதா நம்மால் மாறியதா என்பதுதான். இந்த 2018-ம் ஆண்டில் மனிதர்களால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகள் பலவற்றின் மூலம் பாடம் கற்பித்துள்ளது இயற்கை. அந்தப் பாடங்களைப் புரிந்து நாமாக எந்த மாற்றங்களையும் உண்டாக்காமல் சுற்றுச்சூழலோடு இயைந்து வாழ்வோம்.

அடுத்த கட்டுரைக்கு