Published:Updated:

`கேட்டது ரூ.15,000 கோடி; கிடைத்தது 1,146 கோடி' - கஜாவுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு

மலையரசு
`கேட்டது ரூ.15,000 கோடி; கிடைத்தது 1,146 கோடி' - கஜாவுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு
`கேட்டது ரூ.15,000 கோடி; கிடைத்தது 1,146 கோடி' - கஜாவுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு

கஜா புயல் நிவாரண நிதியாகத் தமிழகத்துக்கு ரூ.1,146 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு.

கஜா புயல் முடிந்து ஒரு மாதமாகியும் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் புயல் ஏற்படுத்திய பாதிப்பின் சுவடுகள் இன்னும் மறையவில்லை. தமிழக அரசு தன்னால் முடிந்த அளவுக்கு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தி வந்தாலும் மத்திய அரசிடமிருந்து போதுமான நிதி வரவில்லை. புயல் அடித்த ஆறாவது நாளே பிரதமர் மோடியைச் சந்தித்து புயலின் பாதிப்பை எடுத்துரைத்து தமிழக அரசின் சார்பில் 15,000 கோடி நிவாரண நிதி வேண்டும் என்றும், இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1,500 கோடி வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

ஆனால், அதைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு முதல்கட்டமாக ரூ.353 கோடி நிவாரண நிதி அறிவித்தது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரும் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து வந்தனர். ஆனால், மத்திய குழுவின் அறிக்கையைப் பொறுத்தே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு காலம் தாழ்த்திவந்தது.

இந்நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடந்தது. இதில் கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.1,146.12 கோடியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கெனவே, ரூ.353 கோடி வழங்கிய நிலையில், கூடுதலாக இந்த ரூ.1,146.12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இடைக்கால நிவாரணமாக ரூ.1,500 கோடி வேண்டும் எனத் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், புயல் முடிந்து இன்றுடன் ஒன்றரை மாதம் ஆன பிறகு, நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.