Published:Updated:

``கேரளத்து `அறிக்கி' கேரக்டர், ரகளையான காமெடி!" - ஃபஹத் பாசிலின் `Njan Prakashan' படம் எப்படி?

சா.ஜெ.முகில் தங்கம்

ஃபஹத் பாசிலின் 'Njan Prakashan' பட விமர்சனம்.

``கேரளத்து `அறிக்கி' கேரக்டர், ரகளையான காமெடி!" - ஃபஹத் பாசிலின் `Njan Prakashan' படம் எப்படி?
``கேரளத்து `அறிக்கி' கேரக்டர், ரகளையான காமெடி!" - ஃபஹத் பாசிலின் `Njan Prakashan' படம் எப்படி?

லையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியர் சீனிவாசன், முக்கிய இயக்குநர் சத்யன் அந்திக்காடு இருவரும் 16 ஆண்டுகளுக்குப் பின் இணையும் 16-வது படம், `ஞான் பிரகாஷன் (Njan Prakashan)'. இதில், ஃபஹத் பாசிலும் இணைந்துகொள்ள படத்திற்கான எதிர்பார்ப்பு கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. படித்துவிட்டு ஊதாரியாகச் சேட்டைகள் செய்துகொண்டு திரியும் இளைஞன், தன்னையும் தன் பொறுப்புகளையும் உணர்வதே படத்தின் கரு. இந்த எளிமையான கதையை சுவாரஸ்யமான சம்பவக் கோர்வைகள் மற்றும் கதாபாத்திரங்களின் வழியே அலுக்காமல் சொல்லியிருக்கிறார்கள்.

கதை முழுக்க பிரகாஷனைச் சுற்றித்தான் நடக்கிறது. பி.எஸ்ஸி., நர்சிங் படித்துவிட்டு சப்பையான காரணங்களைச் சொல்லி வேலை பார்க்காமல், ஏன் படித்தோம் என்றும் தெரியாமல் ஊர் சுற்றுவது, ஊருக்குள் அலப்பறைகள் செய்வது என சுற்றிக் கொண்டிருக்கிறான், பிரகாஷன். பெயர் பழசாக இருக்கிறது எனத் தனது பெயரை PR ஆகாஷ் என மாற்றிக்கொள்கிறான். ஏறக்குறைய கேரளத்தின் அறிக்கி (`களவாணி' விமல் கதாபாத்திரம்) எனத் தோன்றவைக்கிறது, பிரகாஷன் கதாபாத்திரம். ஊருக்கு நாலைந்து அறிக்கி இருப்பார்கள்தானே! கேரளாவின் கிராமங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கில்லை. ஆனால், பிரகாஷன் அறிக்கியைவிட ஒருபடி மேலே போய், தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் எவரையும் எளிதில் ஏமாற்றுபவன். என்ன இவ்வளவு ஸ்பாய்லர் என நினைக்க வேண்டாம். இவையெல்லாம் சில நிமிடங்களில் வாய்ஸ் ஓவராகக் கடந்து சென்றுவிடும். பிரகாஷனுக்குத் திடீரென ஏற்படும் ஆசையும், அதற்கு அவன் எடுக்கும் ஏமாற்று முயற்சிகளும், அதன்பின் ஏற்படும் விளைவுகளும்தான், `ஞான் பிரகாஷன்'.   

படம் முழுக்க வெடித்துச் சிரிப்பதற்காகவே பல காட்சிகளை எழுதியுள்ளனர். ஆனால், சில இடங்களில் மட்டுமே அந்த வெடிச்சிரிப்பு பார்வையாளர்களிடமிருந்து வருகிறது. மற்ற நேரங்களில் உதட்டைத் தாண்டாத சிரிப்புதான். முக்கியமாக, அந்த இடைவேளை ட்விஸ்ட்டும், அதன்பின் வரும் மற்றொரு ட்விஸ்ட்டும் யூகிக்க முடிந்ததாக இருந்தாலும் குபீர் சிரிப்பு! கேரளாவில் பெருகிவரும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், அருகிவரும் விவசாய ஆள்கள் ஆகியவற்றைப் படத்தில் கவனப்படுத்தியிருப்பது சிறப்பு. ஒரு மலையாள ஃபீல்குட் படத்துக்கான எல்லா கிளிஷே காட்சிகளும் இந்தப் படத்திலும் உண்டு. யூகிக்க முடிந்த கதை, திரைக்கதை எனக் குறைகள் இருந்தாலும், படத்தில் நடித்தவர்கள் அதை நேர் செய்துவிடுகின்றனர். அதனால், பெரிதாக ஏமாற்றமில்லை. பிரகாஷன் டினா வீட்டுக்கு வந்தபின் ஜாலியாகவும் வெடிச்சிரிப்பாகவும் கதை நகர்கிறது.   

ஒவ்வொரு முறையும் பெருமிதமாக PR ஆகாஷ் எனத் திருத்திக் கூறுவது, பொய்யை உண்மைபோலவே சொல்லும் பாவனை என பிரகாஷனாக ஃபஹத் பாசில் பிரித்து மேய்ந்திருக்கிறார். டினாவுடன் செல்லும் பயணம், அதன்பின் ஏற்படும் நெகிழ்ச்சி என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அடுத்ததாக, டினாவாக நடித்த தேவிகா சஞ்சய். படத்தின் உயிர்ப்பான பகுதிக்கு நிறைய வலு சேர்த்திருக்கிறார். அழகாக நடிக்கிறார். அதைவிட அழகாகப் பேசுகிறார். அவர் ஃபஹத் பாசிலை அசால்ட்டாக டீல் செய்யும் காட்சிகளில் அதிகம் ஸ்கோர் செய்கிறார். பிரகாஷனுக்கு உதவும் கோபால்ஜியாக கதாசிரியர் சீனிவாசனே நடித்துள்ளார். எப்போதும்போல வழக்கமான சிறப்பான நடிப்பு. குடும்பத்தை ஒற்றை ஆளாகக் காப்பாற்றும் பெண் ஸ்ருதியாக, அஞ்சு குரியன். குறைவான நேரமே வந்தாலும், நிறைவாக இருக்கிறார். கதைப்படி நிகிலா விமல்தான் ஹீரோயின். ஆனால், பெரிதாக ஸ்பேஸ் இல்லாத சலோமி கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். சலோமியின் அப்பா, அம்மாவாக நடித்திருப்பவர்கள் கவனிக்க வைக்கிறார்கள்.

எஸ்.குமாரின் ஒளிப்பதிவு வழக்கமான கேரளாவின் இயற்கை அழகைச் சிறப்பாகக் காட்டியிருக்கிறது. கே.ராஜகோபாலின் படத்தொகுப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லாவிட்டாலும், படத்துக்குத் தேவையானதைச் செய்திருக்கிறது. ஷான் ரஹ்மானில் இசையில் மூன்று பாடல்களுமே சிறப்பு. குறிப்பாக, அந்தப் பெங்காலி பாட்டு செம்ம! பின்னணி இசையும் நன்றாக இருக்கிறது. பிரகாஷன் கதாபாத்திரத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் மற்ற கதாபாத்திரங்களுக்கும் கொடுத்திருக்கலாம். மலையாள இளைஞர்களை நையாண்டி செய்து தொங்கவிட முயன்றிருக்கிறார்கள். சில இடங்களில் அந்த நையாண்டி செம்மையாக இருக்கிறது.

கேரளாவின் பெருமைகளை உணர்வதற்கு அந்த ஒரு வசனம் போதுமானதா? மனமாற்றம் நிகழ மரணம் அவசியம்தானா? எனச் சில கேள்விகள் எழுகின்றன. தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் காமெடிப் படங்களைக் கொடுத்த இணையான சீனிவாசனும், சத்யன் அந்திக்காடும் 16 ஆண்டுகள் கழித்து ரகளையான ஒரு நகைச்சுவை படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். அதற்காகவே, 'ஞான் பிரகாஷ'னுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்!