Published:Updated:

`வெளில சொல்லக்கூடாதுனு சொன்னாங்க!' - சேலம் கர்ப்பிணிக்கு ஏற்றபட்ட ரத்தத்தில் எய்ட்ஸ்

எய்ட்ஸ்

''சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2014-ம் ஆண்டு கர்ப்பம் தரித்திருந்த போதும், குழந்தை பிறக்கும் போதும் இரத்தம் ஏற்றினார்கள். அந்த இரத்தத்தின்  மூலம் என் மனைவிக்கு எய்ட்ஸ் பரவியுள்ளது. இதை வெளியில் சொன்னால் சமூகம் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று எங்களைப் பயமுறுத்தியதால் நாங்கள் வெளியே சொல்லவில்லை'' என்று வேதனையோடு சேலம் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

`வெளில சொல்லக்கூடாதுனு சொன்னாங்க!' - சேலம் கர்ப்பிணிக்கு ஏற்றபட்ட ரத்தத்தில் எய்ட்ஸ்

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவரின் கணவர் சேகர் பேசுகையில், ''என்னோட சொந்த ஊர் மேச்சேரி அருகே உள்ள குதிரைக்காரன்புதூர்.  நானும் என் மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டோம். 2014-ம் வருடம் என் மனைவி கர்ப்பம் தரித்தாள். அதையடுத்து 7வது மாதத்தில் மேச்சேரி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு சென்றோம். என் மனைவிக்கு இரத்தம் குறைவாக இருப்பதாகச் சொல்லி இரத்தம் ஏற்றினார்கள். அதன் பிறகு குழந்தை பிறப்பதற்காக 10வது மாதத்தில் சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கேயும் இரத்தம் குறைவாக இருப்பதாகச் சொல்லி இரத்தம் ஏற்றினார்கள். அதன் பிறகு எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது.

`வெளில சொல்லக்கூடாதுனு சொன்னாங்க!' - சேலம் கர்ப்பிணிக்கு ஏற்றபட்ட ரத்தத்தில் எய்ட்ஸ்

2015-ம் ஆண்டு என் மனைவி மீண்டும் கர்ப்பமானாள். அதையடுத்து கர்ப்பம் தரித்து 3வது மாதத்தில் 4.11.2015ம் தேதி மேச்சேரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தோம். அப்போது என் மனைவிக்கு எய்ட்ஸ் இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தார்கள். அதைக் கேட்டு நானும் என்  மனைவியும் திகில் அடைந்தோம். உடனே எனக்கும் அங்கு ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்தார்கள். ஆனால் எனக்கு எய்ட்ஸ் இல்லை.அரசு மருத்துவமனைகளில் ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலம் தான் எய்ட்ஸ் பரவி இருக்குன்னு சொல்லி அழுதோம். மேச்சேரி மருத்துவமனையில் எய்ட்ஸ் பிரிவில் இருந்த மருத்துவர் ''இதை வெளியில் சொன்னால் உங்களுக்குத் தான் அசிங்கம். சமுதாயம் உங்களை ஒதுக்கி வைத்து விடுவார்கள். அதனால் யாரிடமும் சொல்ல வேண்டாம். அரசு எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு நிறைய உதவிகள் செய்கிறார்கள். அதை பெற்றுத் தருகிறோம். வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம்'' என்றார்கள். அதையடுத்து நாங்கள் வெளியே சொல்லாமல் கடந்த 3 வருடமாக மனதளவில் பெரும் பாதிப்புள்ளாகினோம். என் மனைவி பல முறை தற்கொலை முயற்சியும் மேற்கொண்டார்.விருதுநகர் சம்பவத்தை அடுத்து எங்களுக்கும் நடந்த அநீதியை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் நடக்கும் அநீதிகளை வெளியே சொல்ல வந்திருக்கிறேன். என் மனைவி மிகவும் கண்ணியமானவர். அவருக்கு அரசு மருத்துவமனைகளில் ஏற்றப்பட்ட ரத்தத்தின் மூலமே ஹெ.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கிறது'' என்று கண்ணீர் வடித்தார்.

சேகரின் சார்பாக வந்திருந்த வழக்கறிஞர் சங்கரபிரசாத், '' நிறையப் பேருக்கு வந்திருக்கும் சந்தேகம். முதல் பிரசவத்தின் போது கொடுக்கப்பட்ட இரத்ததின் மூலம் எய்ட்ஸ் வந்திருந்தால் அடுத்த அவருடைய கணவர் உறவு கொண்டதால் தானே இரண்டாவது முறை கருத்தரிக்க முடிந்தது. அப்படியென்றால் அவருடைய கணவருக்கும் எய்ட்ஸ் வந்திருக்கும் தானே என்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ஒரு பெண் எய்ட்ஸ் நோயாளியாக இருந்தால் அவளோடு 10,000யிரம் முறை உறவு கொண்டாலும் 0.4 சதவீதமே ஆணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று வர வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.