Published:Updated:

வருடத்துக்கு ஆறு மாதம் தூக்கம்... உலகின் நிஜ 'கும்பகர்ணன்' இவைதாம்! #Dormice

இப்படித்தான் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை நிகழும். அது ஒன்றும் சீரியஸான சண்டையில்லை. அவ்வப்போது இப்படியாக விளையாடுவார்கள். பொழுதைப் போக்க ஏதாவது விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.

வருடத்துக்கு ஆறு மாதம் தூக்கம்... உலகின் நிஜ 'கும்பகர்ணன்' இவைதாம்! #Dormice
வருடத்துக்கு ஆறு மாதம் தூக்கம்... உலகின் நிஜ 'கும்பகர்ணன்' இவைதாம்! #Dormice

ரக்கப்பறக்கக் கடலைகளையும், பூக்கள், விதைகள் போன்றவற்றையும் சேகரித்துக் கொண்டிருந்தது அந்தக் குடும்பம். சற்றே பெரிய குடும்பம்தான். அப்பா, அம்மா, நான்கு குழந்தைகள் என்று மொத்தம் ஆறு பேர். குளிர்காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தொடங்குவதற்குள் உணவு சேர்த்தாக வேண்டும். அதனால் வேகவேகமாக வேலை செய்துகொண்டிருந்தார்கள் ஆறு பேரும். குளிர்காலத் தூக்கம் தொடங்கிவிட்டால் அவர்களுக்குப் போதுமான சத்துகளைச் சேகரிக்க மீண்டும் அலையமுடியாது.

கடலைகளோடு ஓடிக்கொண்டே மூத்தவன் கேட்டான், ``கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டு குளிர்காலமும் கொஞ்சம் நீளமாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்"

``எவ்வளவு நீளமா இருந்தா என்ன? எப்படியும் நடுநடுவுல நீ எழுந்துருவ. எங்களோட உணவையும் சேர்த்து நீயே சாப்பிட்டு முடிச்சுருவ. சரியான சோத்து மூட்டை" - அப்பா பதில் சொல்லும் முன்பே ஓடிக்கொண்டிருந்த கடைக்குட்டி சொன்னான். மூத்தவனுக்குக் கோவம் வந்துவிட்டது. கடலைகளைக் கீழே போட்டுவிட்டு அடிக்க ஓடினான். மூத்தவனும் இளையவனும் உருண்டு புரண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மரத்தில் சறுக்கல் விட்டுக்கொண்டு ஓடினார்கள். 

இப்படித்தான் அவர்களுக்குள் அடிக்கடி நிகழும். அது ஒன்றும் சீரியஸான சண்டையில்லை. அவ்வப்போது இப்படியாக விளையாடுவார்கள். பொழுதைப் போக்க ஏதாவது விளையாடிக் கொண்டே இருப்பார்கள். வாண்டுகள்தான் இப்படியென்று நினைத்தால் முதிர்ச்சி அடைந்தவையும் அப்படியேதான் இருக்கும். அவை வேறு யாருமில்லை, டோர்மைஸ் (Dormice) என்ற தூங்கும் எலி வகைதான். குளிர்காலம் முழுவதும் உடலைப் பந்துபோல் சுருட்டிக்கொண்டு செறிதுயில் கொண்டு அடங்கிக் கிடக்கும் அணில் வடிவிலான எலி வகை. குளிர்காலம் முற்றிலும் முடிந்து, உடல் வெப்பத்தை உணரும்வரை எத்தனை மாதங்கள் ஆனாலும் அவை அப்படியே தூங்கிக் கிடக்கும். இந்தத் தூக்கம் சில சமயங்களில் ஆறு மாதங்களைத் தாண்டியும் நீளும்.

Photo Courtesy: Alexames

உருண்டையான காதுகள், நீளமான வால் என்ற உடலமைப்புடைய டோர்மௌஸ் எலி இனத்தைச் சேர்ந்ததுதான். ஆனால், இவற்றுக்கு எலிகளுக்கு இருப்பதுபோன்ற முடிகளற்ற வால் இல்லை. அணில்களைப் போலவே அழகாக முடிகளோடு நீண்ட வால் கொண்டவை. அதேசமயம் நிறமும் உருவ அமைப்பும்கூட அணில்களைப் போலவே இருக்கும். ஆனாலும், இவை எலி இனத்தைச் சேர்ந்தவைதாம். எலிகளும் டோர்மைஸும் எலி குடும்பத்தின் இருவேறு துணை இனங்கள்.

மிதமான வெப்பநிலை மண்டலமான ஐரோப்பிய கண்டத்தில் வாழ்கின்றன. அதனால் அதிகமான குளிரை எதிர்கொள்ள வேண்டும். அந்தக் குளிரைத் தாக்குப்பிடிக்கக் குளிர்காலம் முழுவதும் தூங்கியே கழிக்கும் இந்த டோர்மௌஸ். அப்படித் தூங்கும் காலகட்டம் ஆறு மாதங்களுக்கோ சில சமயங்களில் அதற்கும் அதிகமாகவோ நீடிக்கும். நிலத்துக்கு அடியில் கூடமைத்துத் தங்கும். இலைகள், மரக்கட்டைகளை வைத்து முழுக்க மறைத்துக்கொண்ட பொந்துகளுக்குள் யாருக்கும் தெரியாதவாறு தூக்கத்தைத் தொடங்கும். அந்தச் சமயத்தில் இவற்றின் இதயத்துடிப்பு வேகம் வழக்கமான துடிப்பைவிட 90% குறைந்துவிடும். தூங்கும் காலகட்டத்தில் இடை இடையே இரண்டொரு முறை கண்விழித்து தாங்கள் சேர்த்துவைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் உறங்கிவிடும். குளிர்காலம் தொடங்கும் முன்பே சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தன் உடல் எடையைச் சராசரி எடையைவிட இரண்டு மடங்கு அதிகமாக்கிக் கொள்ளும். அதன்மூலம், குளிர்காலம் முழுவதும் உறங்கும்போது அதற்குத் தேவையான சத்துகள் சிறிது சிறிதாக டோர்மௌஸால் எடுத்துக்கொள்ள முடியும். இதயத்துடிப்பும் மிக மெதுவாக இருப்பதால் அவற்றுக்குத் தேவைப்படும் சத்துகளும் மிகக் குறைவே. அதனால் குளிர்காலத்துக்கு முன்னர் அவை எடுத்துக்கொள்ளும் உணவே போதுமானது. ஒருவேளை சத்துகள் தேவைப்பட்டால் உதவியாக இருக்கவே உணவு சேகரித்து வைக்கின்றன. 

அவற்றின் பெயருக்கு தூங்குபவன் என்று அர்த்தம். குளிர்காலம் மட்டுமில்லை, மற்ற நாள்களிலும் அவை பகல் முழுவதையும் தூங்கியேதான் கழிக்கும். ஏனென்றால் இவை இரவுநேரத்தில்தான் அதிகமாக இயங்கும் நாக்டர்னல் (Nocturnal) உயிரின வகையைச் சேர்ந்தவை. குறைந்தபட்சம் நான்கு குட்டிகளை ஈன்றெடுக்கும் இவை மனிதர்களைப் போலவே வளர்ந்தபிறகும் கடைசிவரை குடும்பமாக ஒற்றுமையாக வாழக்கூடியவை. அவையும் மனிதர்களைப் போலவே விளையாடும், சண்டையிடும், கொஞ்சிக் கொள்ளும். உதாரணத்துக்கு ஹாலிவுட்டில் `ஆல்வின் அண்டு தி சிப்மங்க்ஸ்' என்ற படத்தில் வரும் சிப்மங்க்ஸைப் போலவே. அந்தப் படத்தின் முதல் பாகத் தொடக்கத்தில் அவர்கள் மூன்று பேரும் உணவு சேகரித்துக் கொண்டிருப்பார்கள். அதைப்போலவே இவர்களும் குளிர்காலத் தூக்கம் தொடங்கியபின் இடையே கண் விழிக்கும்போது சாப்பிடுவதற்காகச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள்.

குறைந்தபட்சம் இரண்டு இஞ்ச்களிலிருந்து அதிகபட்சம் எட்டு இஞ்ச் வரை நீளமாக வளரக்கூடியவை. அகலமான கால்களோடு இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளத் தகுந்த விரல்களோடு இவை இருப்பதால் மற்றவற்றைவிட மிக எளிதாகவும் வேகமாகவும் இவற்றால் மரம் ஏற முடியும். அதனால் அதிக உயரத்தில் கனியும் மிகச் சுவையான பழங்களை ருசிக்கும் முதல் பாக்கியம் எப்போதும் இவற்றுக்குத்தான். உலகம் முழுவதும் சுமார் 29 வகை டோர்மைஸ் வாழ்கின்றன. சிலவற்றின் கண்களைச் சுற்றி கருமையான அடர்ந்த புருவங்கள் இருக்கும். அதனால் அந்த வகை மட்டும் எப்போதும் மற்றவற்றிடம் இருந்து தனித்துத் தெரியும். அவை நடந்து கொள்வதைப் பார்ப்பதற்கு ஏதோ அப்பாவிக் குழந்தைகளைப் போல் தெரியலாம். ஆனால், இந்த உலகில் நம்மைவிட மூத்தவர்கள் இந்த டோர்மைஸ். ஆம், 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 33 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலமான இயோசீன் காலம்தொட்டே வாழ்கின்றன. சுமார் மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குதிரைகளின் மூதாதைகளோடு, வௌவால்களின் மூதாதைகளோடு இணைந்து வாழ்ந்தன. தற்போது நமக்கு மத்தியில் வாழ்கின்றன. ஆனால், அவற்றோடு வாழும்போதெல்லாம் வராத ஆபத்து நம்மோடு வாழும்போது ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் மட்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் 70 சதவிகிதம் டோர்மைஸ் அழிந்துள்ளன. அழியும் நிலையில் தற்போது அவை உள்ளன. பிரிட்டனில் மட்டுமே காணப்படும் ஹேஸெல் டோர்மௌஸ் என்ற ஒருவகை அதைவிட ஆபத்தான நிலையில் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே வாழ்கின்றன. அதைக் காப்பாற்ற கடின முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது பிரிட்டன். 2016-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் நானூறு காடுகளில் 26,000 கூடுகளை ஆராய்ந்ததில் இந்தத் தகவல்கள் கிடைத்தன. காடுகளைச் சரியாக மேலாண்மை செய்யாதது, அதனால் ஏற்பட்ட மனித ஊடுருவல்கள், வாழிடங்களை இழப்பது, காலநிலை மாற்றம் போன்ற காரணங்களை ஆய்வாளர்கள் இவற்றின் எண்ணிக்கைக் குறைவுக்குக் கூறுகிறார்கள்.

பிரிட்டனில் மட்டுமே 17 மாகாணங்களில் அவர்களின் தனித்த இனமான ஹேஸெல் டோர்மைஸ் முற்றிலுமாக அழிந்துவிட்டது. இந்த முடிவுக்கு வரும்முன் பிரிட்டன் ஆய்வாளர்கள் இருபத்தைந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பதிவுகளை ஆராய்ந்துள்ளார்கள். 1998-ம் ஆண்டு முதலே பல்வேறு சூழலியலாளர்கள் மற்றும் விலங்குநல ஆர்வலர்களின் உதவியோடு இந்தத் தரவுகளைச் சேகரித்தார்கள். உலகிலேயே சிறிய வகைப் பாலூட்டிகளுக்கான கண்காணிப்பு ஆய்வுத் திட்டங்களில் இதுவே மிக நீண்ட காலமாக நடக்கும் ஆய்வுத் திட்டமாகும். குளிர்காலங்களில் தம் உடலைப் பந்துபோல் சுருட்டிக்கொண்டு உறங்கும் அவற்றின் அழகு காலங்களைக் கடந்தும், காலங்கள் தந்த அபாயங்களைக் கடந்தும் உயிர்ப்போடு உள்ளது. அந்த உயிர்ப்பும் அந்த அழகும் மனித இனத்தின் காலத்தில் அழிந்துவிடுமோ? உலகில் அப்படி எந்த உயிரினமும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் மீது இருக்கிறது.

Photo Courtesy: Zoë Helene Kindermann

டோர்மைஸ் மட்டும் அல்ல, இப்படி பனிக்கால உறக்கத்தில் கரடி, வௌவால், பாம்பு, தவளை போன்ற பல உயிரினங்கள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.