Published:Updated:

கால்நடைகளின் நோய் போக்கும் 18-ம் நூற்றாண்டு நம்பிக்கைக் கல்... உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷம்!

``இப்படிச் செய்தால் கால்நடைகள் நோய் தீர்ந்து நலமாக இருக்கும் என்பது அக்காலமக்களின் நம்பிக்கை. கால்நடைகளுக்கு ஆங்கில மருத்துவம் இல்லாத காலத்தில் இந்தக் கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.“

கால்நடைகளின் நோய் போக்கும் 18-ம் நூற்றாண்டு நம்பிக்கைக் கல்...  உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷம்!
கால்நடைகளின் நோய் போக்கும் 18-ம் நூற்றாண்டு நம்பிக்கைக் கல்... உத்திரமேரூரில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுப் பொக்கிஷம்!

தொன்மையான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் உத்திரமேரூர். ஊரைச் சுற்றிலும் வயல்கள், குளங்கள், ஆற்றங்கரைப் பகுதிகள் என அழகுற அமைந்துள்ளன. உத்திரமேரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சோழர்கள் கால வரலாற்று எச்சங்கள் அவ்வப்போது கண்டெடுக்கப்படுவது உண்டு. நிலத்தை உழும்போதும், பூமியைத் தோண்டும்போதும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் கிடைப்பதுண்டு. இந்த மந்திரக்கல் போன்ற அரிய பொக்கிஷங்களைக் கண்டெடுத்து அவற்றை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனர் ‘உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம்’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். 

அந்த வகையில் தற்போது 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘மந்திரக்கல்’ மற்றும் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஆ உராஞ்சுகல்’ ஆகியவற்றைக் கண்டறிந்து அவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.

மந்திரக் கல், உத்திரமேரூர் கல்வெட்டுகள்

உத்திரமேரூர், கயிலாசநாதர் ஆலயம் முன்பு ஒரு கல் உள்ளது. `மாட்டுப் பொங்கல் அன்று இப்பகுதி மக்கள், மாடுகள் மற்றும் மாட்டுவண்டிகளோடு இந்தக் கல்லைச் சுற்றிவந்து பூஜை செய்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்தக் கல் என்ன என்பது குறித்து ஆய்வு செய்த உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் பாலாஜியிடம் கேட்டபோது, 

``இந்தக் கல் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘மந்திரக்கல்’. இந்தக் கல்லை மந்தைவெளிக்கல், கோமாரிக் கல், சந்நியாசிக் கல் எனவும் அழைப்பார்கள். கால்நடைகளே மக்களின் செல்வக் குறியீடாக இருந்த காலத்தில் ஆங்கிலேயர் வருகையால் கலப்பின மாடுகள் மூலம் கோமாரி எனும் கொள்ளை நோய் பரவியது. நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் உணவு உண்ணாமல் பால் கறக்காமல் துடிதுடித்து இறந்தன.

இந்த நோயிலிருந்து விடுபடவும் கால்நடைகளைக் காக்கவும் சீர்செய்யப்பட்ட பலகைக் கல்லில் கட்டங்களை வரைந்து மந்திர எழுத்துகளையும் குறியீடுகளையும் கட்டங்களுக்குள் நிரப்பி, நிலத்தில் நட்டு வைத்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை அந்தக் கல்லைச் சுற்றிவரச் செய்து மஞ்சள், வேப்பிலை மற்றும் மூலிகைப் பொருள்கள் கலந்த நீரை பருகச் செய்து மந்திரக் கல்லை வழிபடுவர்.

இப்படிச் செய்தால் கால்நடைகள் நோய் தீர்ந்து நலமாக இருக்கும் என்பது அக்காலமக்களின் நம்பிக்கை. கால்நடைகளுக்கு ஆங்கில மருத்துவம் இல்லாத காலத்தில் இந்தக் கல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.“ என்கிறார்.

உத்திரமேரூர் ஆய்வுமையத்தின் கௌரவ ஆலோசகரும், தமிழ்நாடு தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியருமான மார்க்சிய காந்தி 

``18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்லின் உச்சியில் சங்கு சக்கர சின்னங்களுடன் 16 கட்டங்களில் கிரந்தம் மற்றும் வடமொழி எழுத்துகளில் மந்திரச் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் இதுபோன்ற கல்வெட்டுகள் காணப்படும். இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் மாட்டுப் பொங்கலன்று கால்நடைகள் சுற்றி வந்து வழிபட்டுச் செல்வதென்பது பழைய வரலாற்றின் தொடர்ச்சியாகவே அறிய முடிகிறது” என்கிறார்

ஆ உராஞ்சுகல்

உத்திரமேரூர், அங்காள பரமேஸ்வரி ஆலய மைதானத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆ உராஞ்சுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆ உராஞ்சுகல் என்பது கால்நடைகள் குறிப்பாக மாடுகள் தன் உடலின் சொறி, தினவைத் தீர்க்க உடலை உராய்ந்து அரிப்பை போக்கிக் கொள்ளப் பயன்படும் கல்லாகும்.

ஆ உராஞ்சுகல்லை, ஆதீண்டு குற்றி, தன்மத்தறி, நடுதறி என்றும் பழம் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பழந்தமிழர் வாழ்வில் கடைப்பிடித்த 32 அறங்களுள் இதுவும் ஒன்று. இந்தக் கல்லை யார் எதற்காகக் கொடுத்தார்கள் என்பது இந்தக் கல்வெட்டிலேயே பதிந்துள்ளனர். 'உத்திரமேரூர் சுந்தரவரதர் ஆனந்தவல்லிதாயார் இறைவனை வேண்டி சின்னப்பிள்ளை தாரம் சின்னம்மாள் கைங்கரியமாக' என்று அதில் பொறிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆ உராஞ்சுகல் பற்றி நம்மிடையே பேசிய பாலாஜி, ``மந்திரக்கல், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணப்பட்டாலும், ஆ உராஞ்சுக்கல் தானம் கொடுத்தவரின் பெயருடன் கிடைத்திருப்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுதான் முதல்முறை. கல்வெட்டுகளின் சில எழுத்துகள் சிதைந்திருக்கின்றன. ஆனால், இன்றைய தமிழில் அனைவரும் படிக்கும் வண்ணம் எழுத்துகள் தெரிகின்றன.

ஆ உராஞ்சுகல்லை தமிழ் இலக்கியத்தில் ஆதீண்டுகுற்றி எனக் குறிப்பிடுகிறார்கள். ஆ என்றால் பசு, தீண்டுதல் என்றால் தொடுதல், குற்றி என்றால் நிறுத்திவைக்கப்பட்ட கல் எனப் பொருள்படும். காலப்போக்கில் இது மருவி ஆ உராஞ்சுகல் என்று வழங்கலாயிற்று.” என்கிறார்.

இந்தக் கல்வெட்டுகள் மற்றும் கற்கள் மூலம் தமிழ்ச் சமூகம் கால்நடைகளுக்குக் கொடுத்துள்ள முக்கியத்துவம் புரிந்துகொள்ள முடிகின்றது.