Published:Updated:

ஹூண்டாயின் விலை உயர்வு... பிஎம்டபிள்யூவின் 7 சீட் எஸ்யூவி... மோட்டார் அப்டேட்!

X5-க்கு மேலே பொசிஷன் செய்யப்படவிருக்கும் இந்த லக்ஸூரி எஸ்யூவி, கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற Los Angeles Motor Show-ல் முதன்முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

ஹூண்டாயின் விலை உயர்வு... பிஎம்டபிள்யூவின் 7 சீட் எஸ்யூவி... மோட்டார் அப்டேட்!
ஹூண்டாயின் விலை உயர்வு... பிஎம்டபிள்யூவின் 7 சீட் எஸ்யூவி... மோட்டார் அப்டேட்!

முதலில், மோட்டார் விகடன் வாசகர்களுக்கு, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! 2018-ம் ஆண்டில் வெளிவந்த கார்கள் மற்றும் டூ-வீலர்கள், புத்தாண்டு முதல் விலை உயரப்போகும் கார்கள் மற்றும் புதிதாக அறிமுகமாகப்போகும் கார்களைப் பற்றியும் நாம் பார்த்துவிட்டோம். தற்போது முன்னே சொன்ன ஹூண்டாய் மற்றும் பிஎம்டபிள்யூ மேட்டருக்கு வருவோம். 

*தொடர்ச்சியாக அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் மூலப்பொருள்களின் விலை காரணமாக, புத்தாண்டு முதல் தனது கார்களின் விலையை 30 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது, கொரிய நிறுவனமான ஹூண்டாய். 2018-ம் ஆண்டைப் பொறுத்தவரை,  டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் எலீட் i20 காரின் பேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியது. பின்னர் i20 ஆக்டிவ் பேஸ்லிஃப்ட், வெர்னாவில் 1.4 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் கொண்ட மாடல்கள் மற்றும் Anniversary Edition, டூஸான் எஸ்யூவியில் GL (O) வேரியன்ட், கிராண்ட் i10 மற்றும் எக்ஸென்ட்டில் கூடுதல் வசதிகள், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சான்ட்ரோ ஆகியவற்றை  ஹூண்டாய் இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருந்தது. 2019-ம் ஆண்டில் QXi காம்பேக்ட் எஸ்யூவி, கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி, புதிய AI3 கிராண்ட் i10, டூஸான் பேஸ்லிஃப்ட் ஆகிய கார்களை இந்த நிறுவனம் களமிறக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம்! இதன் வெளிப்பாடாக, மாருதி சுஸூகிக்குக் கடும் சவால் அளிக்க ஹூண்டாய் தயாராவது தெரிகிறது.

*இந்தியாவில் தனது விலை அதிகமான எஸ்யூவியாக, M50d எனும் வேரியன்ட்டில் X7 எஸ்யூவியை வரும் ஜனவரி 31, 2019 அன்று, புதுடெல்லியில் நடைபெறும் India Art Fair-ல் விற்பனைக்குக் கொண்டு வரஉள்ளது, ஜெர்மானிய நிறுவனமான பிஎம்டபிள்யூ. இந்த நிறுவனத்தின் X5-க்கு மேலே பொசிஷன் செய்யப்படவிருக்கும் இந்த லக்ஸூரி எஸ்யூவி, கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற Los Angeles Motor Show-ல் முதன்முறையாகக் காட்சிபடுத்தப்பட்டது. அதாவது செடானில் 7 சீரிஸ் எப்படியோ, எஸ்யூவியில் X7 அப்படி இருக்கும் எனத் தெரிகிறது. இதனால் 7 சீட்களுடன் இருக்கும் இது, பார்க்க நீளமான X5 போலவே காட்சியளிக்கிறது. கேபினில் 12.3 டச் ஸ்க்ரீன் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, 3 Piece Glass-ல் ஆன சன்ரூஃப், ரிவர்ஸ் கேமரா உடனான பார்க் அசிஸ்ட், 3 வரிசை இருக்கைகளுக்கும் Reclining வசதி என சிறப்பம்சங்களில் அசத்துகிறது. 

*இதில் பொருத்தப்பட்டிருக்கும் 3 லிட்டர், இன்லைன் 6 சிலிண்டர், Quad Turbo டீசல் இன்ஜின் - 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணி, 400bhp பவர் மற்றும் 76kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதனுடன் ஆஃப் ரோடு பேக்கேஜ் மற்றும் டிரைவிங் மோடுகளும் உண்டு. உத்தேசமாக 1.6 கோடி ரூபாய் எனும் எக்ஸ்-ஷோரும் விலையில் வெளிவரப்போகும் X7 M50d, ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் உடன் போட்டிபோடுகிறது. ஒருவேளை 6 சீட் மாடல் விற்பனைக்கு வந்தால், அதன் நடுவரிசையில் கேப்டன் சீட்கள் இருக்கும்; இதுவே 7 சீட்டர் மாடல் என்றால், நடுவரிசையில் பெஞ்ச் சீட் இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் விலைகுறைவான xDrive40i மற்றும் xDrive30d வேரியன்ட்கள் வெளிவரலாம். இதில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர், ட்வின் டர்போ பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும். இவை CKD முறையில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, சென்னையில் அசெம்பிள் செய்யப்படலாம் என்பதால், இந்த வேரியன்ட்களின் விலை குறைவாகவே இருக்கும். உள்நாட்டு உதிரிபாகங்களும் இடம்பெறலாம்.