Published:Updated:

``மனஅழுத்தம்தான் என்னை உந்தித் தள்ளி ஜெயிக்க வைத்தது!'' - இயக்குநர் பிரம்மா #LetsRelieveStress

``மனஅழுத்தம்தான் என்னை உந்தித் தள்ளி ஜெயிக்க வைத்தது!'' - இயக்குநர் பிரம்மா #LetsRelieveStress
``மனஅழுத்தம்தான் என்னை உந்தித் தள்ளி ஜெயிக்க வைத்தது!'' - இயக்குநர் பிரம்மா #LetsRelieveStress

தற்போது நிறைய போராட்டங்களை எதிர்கொண்டு, உற்சாகமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். ஒருவரது வளர்ச்சிக்கு மனஅழுத்தம்தான் மிகப்பெரும் பங்காற்றுவதாக உணர்கிறேன்.

`குற்றம் கடிதல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரம்மா. தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றதுடன் சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். குற்றம் கடிதலைத் தொடர்ந்து ஜோதிகாவை வைத்து அவர் இயக்கிய `மகளிர் மட்டும்’ படம் பலரது கவனத்தை ஈர்த்தது. தற்போது, அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். திரைப்படம் இயக்கும்போது தனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் பற்றியும் அவற்றைக் கடந்த விதத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.  

``ஒரு படைப்பு என்பது ஏதோ ஒரு சம்பவத்தின் பாதிப்பால் உருவாகிறது. அந்தப் பாதிப்பின் அடுத்தகட்டம் மனஅழுத்தமாகி அதன்பிறகே படைப்பாகிறது. பொதுவாக மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளின்போது பல்வேறுவிதமான போராட்டங்கள் நடக்கும். அப்போது பெரும்பாலும் கலைஞர்கள் களத்தில் இறங்கிப் போராடுவதில்லை. ஆனால், அந்தப் பிரச்னையைத் தங்களது படைப்புகளில் வெளிப்படுத்துவார்கள். அவற்றில் தங்களது ஆதங்கத்தையும், அவதானிப்பையும் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பதையும் சொல்வார்கள். அதேபோல, மனஅழுத்தத்திலிருந்து விடுபட கலைஞர்களுக்கு இருக்கும் ஒரே வழி படைப்பை உருவாக்குவது மட்டுமே. அது ஓவியம் வரைவதாகவோ அல்லது கதை, கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதாகவோ அல்லது வேறு எந்தவகையான கலைப்படைப்பை உருவாக்குவதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், சினிமா என்று வரும்போது அது முற்றிலும் வேறொன்றாக இருக்கிறது. படைப்பில் ஈடுபடும்போது அந்தக் கலைஞனுக்கு மனஅமைதியும், திருப்தியான உணர்வும் கிடைக்கிறது. அதேநேரத்தில் மனஅழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரு வழியாகவும் இருக்கிறது. ஆனால், பலர் சேர்ந்து உருவாக்கப்படும் படைப்பாக சினிமா இருப்பதால், மனஅழுத்தம் தரக்கூடியதாக மாறிவிடுகிறது.

ஓர் உதவி இயக்குநருக்கு சினிமா வாய்ப்பு என்பது பெரும் போராட்டமாக இருக்கும். குறிப்பிட்ட நாளுக்குள் எல்லா திரைக்கலைஞர்களையும் ஒருங்கிணைத்து, தான் நினைத்த மாதிரி படத்தை முடிப்பது என்பது சவாலானதாகவே இருக்கும். பிறகு, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்து, படத்தைத் திரைக்குக் கொண்டுவருவதற்குள் போராட்டத்தின் எல்லைக்கே ஓர் இயக்குநர் நகர்ந்திருப்பார். அதன்பின், திரைப்படம் மக்களால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். அதை ஏற்றுக்கொள்ள பெரிய மனப்போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆக, ஒவ்வொருகட்டமும் சினிமா இயக்குநருக்கு மனஅழுத்தம் தரக்கூடியதாகவே இருக்கும். அதுவே முதல் படமாக இருந்தால் இரண்டு, மூன்று மடங்கு  மனஅழுத்தம் அதிகரிக்கும். என் முதல் படமான `குற்றம் கடிதல்’ படத்தை இயக்கும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது. 

`குற்றம் கடிதல்’ படம் என்பது நண்பர்களால் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஒரு சினிமா. படத்தின் தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பன் எனது நண்பர் என்பதால், அவருடைய பணத்தை, என்னுடைய பணமாகவே பார்த்தேன். ஆகவே, எந்த இடத்திலும் பணம் விரயமாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். படத்துக்கான லொகேஷன் பர்மிஷன் வாங்குவதிலிருந்து, நடிகர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுப்பதுவரை அழுத்தம் தரக்கூடிய வேலைகளாகவே இருந்தன. 

பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் இருக்கும் மே மாதத்தில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், அந்த மாதத்தில்தான் கோடை மழை கொட்டித் தீர்த்தது. வகுப்பறையில் ஒரு பாடல் காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டிருந்த அன்று, வெளியே மேகமூட்டமாக இருந்ததால், சரியான வெளிச்சம் கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. அதனால் பெரிய அளவில் பண இழப்பு ஏற்படும் என்பதால், அதற்கு மாற்றாக மாணவர்களை வேனில் வெளியே அழைத்துச் செல்வதுபோல காட்சியை மாற்றி, பாடல் காட்சியைப் படம்பிடிக்கலாம் என்று ஒளிப்பதிவாளர் மணிகண்டனிடம் சொன்னேன். நான் நிறைய காம்பரமைஸுக்குள் போவதாகக் கூறி, அவர் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து கோபித்துக்கொண்டு கிளம்பிப்போய்விட்டார். 

மேக மூட்டத்தால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது ஒருபுறமிருக்க, நடிகர்களின் கால்ஷீட் வீணாகிறதே என்ற கவலை மறுபுறம் எனக்கு அழுத்தத்தைத் தந்தது. அதுமட்டுமன்றி, ஒளிப்பதிவாளரும் கோபமாக கிளம்பிப்போய்விட்டதால் மிகுந்த மனச்சோர்வு அடைந்தேன். பிறகு, அவரிடம் போய்ப் பேசி, பள்ளிகள் திறந்ததும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் படப்பிடிப்பு நடத்தினோம். நாள்கள் அதிகரித்துக்கொண்டே போனதால் படத்திலிருந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் வெவ்வேறு படங்களில் வேலைசெய்யச் சென்றுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் நான் மட்டுமே தனித்திருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். அது எனக்குப் பெரிய அளவில் மனஅழுத்தத்தைத் தந்தது. ஆனால், அந்த மனஅழுத்தம்தான் என்னை உந்தித் தள்ளி ஜெயிக்க வைத்தது. இப்போது அந்த நாள்களை திரும்பிப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. 

அப்போது வேளச்சேரியில் இருந்தேன். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங்குக்குக் கிளம்பிப்போகும்போது கத்திப்பாரா மேம்பாலம் என்னுடைய கஷ்டங்களுக்குச் சாட்சியாக இருப்பதாக உணர்வேன். படம் வெளியாகி, நன்றாக ஓட வேண்டும்; நிறைய விருதுகளைக் குவிக்க வேண்டும் என்கிற ஆசையெல்லாம் எனக்கு இருந்ததில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அதுகுறித்த அறிவு எனக்கில்லை. ஆனால், தயாரிப்பாளருக்கு ஒரு முழுமையான படத்தைத் தர வேண்டும் என்ற உத்வேகம் மட்டுமே எனக்குள் இருந்தது. எதை எழுதினேனோ அது திரையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், மனஅழுத்தத்தை பாசிட்டிவ்வான ஒரு விஷயமாகவே பார்த்தேன். ஏனென்றால், அதுதான் கொஞ்சம் நண்பர்களோடு என்னைச் சேர்த்துக்கொண்டு ஓடுவதற்கான நம்பிக்கையைத் தந்ததுடன், படத்தை முடிக்கவும் உதவியது. அதன்பிறகு, அந்தப் படம் வெளியாக ஒரு வருடம் காத்திருந்தேன்.

நான், எதற்காகவும் குடும்பத்தை கஷ்டப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால், உடனடியாக வேலைக்குப் போய்விட்டேன். வேலையில் இருந்துகொண்டே படத்தைச் சிலருக்குப் போட்டுக் காட்டினோம். ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொருவிதமான பதில்களும் திருத்தங்களும் வந்தன. அந்த நேரத்தில்தான் எப்போதோ நான் அனுப்பிய மின்னஞ்சலுக்குத் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சாரிடமிருந்து பதில் வந்தது. அடுத்தநாளே படம் பார்த்தார். இடைவேளைக்கு முன்பே படத்தை தான் வாங்கிக்கொள்வதாகக் கூறினார். மூன்று வருடக் காத்திருத்தல் மூன்று நாள்களிலேயே சரியானது. அடுத்த வாரமே சர்வதேச திரைப்பட விழாக்களில் என் படம் தேர்வானது. அடுத்தடுத்து விருது எனத் தேசியவிருதில் போய் நின்றது. 

தற்போது நிறைய போராட்டங்களை எதிர்கொண்டு, உற்சாகமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். ஒருவரது வளர்ச்சிக்கு மனஅழுத்தம்தான் மிகப்பெரும் பங்காற்றுவதாக உணர்கிறேன். முக்கியமாகக் கலைஞர்களுக்கு..! ஏனென்றால், அங்கே சக்திகள் எல்லாம் ஒன்றுபடுகிறது. அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது!” என்கிறார் பிரம்மா!

அடுத்த கட்டுரைக்கு