Published:Updated:

`தாய்மைக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்!’ - பெண் போலீஸுக்குக் குவியும் பாராட்டுகள் 

`தாய்மைக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்!’ - பெண் போலீஸுக்குக் குவியும் பாராட்டுகள் 
`தாய்மைக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்!’ - பெண் போலீஸுக்குக் குவியும் பாராட்டுகள் 

ஹைதரபாத்தில் இரு நாள்களுக்கு முன் ஒஸ்மானியா மருத்துவமனை அருகே முகமது இர்பான் என்கிற இளைஞர் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே வந்த குப்பை பொறுக்கும் பெண் ஒருவர் தண்ணீர் பிடித்துக்கொண்டு வருவதாகவும் குழந்தையை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு இர்பானிடம் கொடுத்துள்ளார். இர்பானும் குழந்தையை வாங்கி வைத்துள்ளார். தண்ணீர் பிடிக்கச் சென்ற பெண் திரும்ப வரவே இல்லை. இதனால் குழந்தையை வைத்திருந்த இர்பான் தவித்துப் போனார். குழந்தையும் அழத் தொடங்கியது. டீக்கடையில் பால் வாங்கிக் கொடுத்தாலும் குழந்தை குடிக்க மறுத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த இர்பான். அப்துல்கஞ்ச் காவல் நிலையத்துக்குச் சென்று உண்மையை விளக்கி குழந்தையை ஒப்படைத்தார். 

காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த ரவீந்திரனுக்கும் குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. தொடர்ந்து குழந்தை அழுது கொண்டிருந்தது. ரவீந்திரனின் மனைவி பிரியங்காவும் போலீஸ்தான். இந்தத் தம்பதிக்கு கைக்குழந்தை இருந்தது. பிரியங்கா பேறுகால விடுமுறையில் வீட்டில் இருந்தார். மனைவிக்குப் போன் செய்த ரவீந்திரன் குழந்தை அழுது கொண்டிருப்பது குறித்து கூறி என்ன செய்யலாம் என்று கேட்டுள்ளார். குழந்தை ஏன் அழுகிறது என்பது குறித்து ஒரு தாய்க்குத்தானே தெரியும். 

கணவரிடம் எதுவும் சொல்லாத பிரியங்கா  கார் பிடித்து கணவர் பணிபுரிந்த அப்துல்கஞ்ச் காவல் நிலையத்துக்கு வந்தார். பின்னர், குழந்தையுடன்  மறைவிடத்துக்குச் சென்று தாய்ப்பால் புகட்டினார். அழுதுகொண்டிருந்த குழந்தை வயிறு நிறைந்து சிரிக்கத் தொடங்கியது. இந்தத் தகவல் ஹைதராபாத் காவல்துறை வட்டாரங்களில் பரவி கமிஷனர் அஞ்சானி குமார் காதுகளுக்கும் எட்டியது.

பெண் போலீஸ் பிரியங்காவின் மனிதாபிமானமிக்க செயலைப் பாராட்டிய கமிஷனர் சிறிய பாராட்டு விழா நடத்தினார். விழாவின்போது மேடையில் அந்தக் குழந்தையும் இருந்தது. விழாவில் பேசிய பிரியங்கா, 'குழந்தை அழுவதாகக் கணவர் கூறியதும் வேறு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. கார் பிடித்துச் சென்று விட்டேன். என் இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்'' என்றார்.

குழந்தையின் தாயின் பெயர் ஷபனா பேகம் என்று தெரிய வந்தது. தாயைக் கண்டுபிடித்து குழந்தையை ஒப்படைத்த போலீஸாரிடம் குழந்தையைக் கொடுத்த இடத்தை மறந்து விட்டதாகவும் இர்பானை தேடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஷபனா பேகம். 

குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டிய பெண் போலீஸால் தாய்மை என்னும் சொல் இன்னும் மேன்மை அடைந்திருப்பதாக நெட்டிஸன்கள் பாராட்டி வருகின்றனர்.