Published:Updated:

“ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் திருநங்கைனு தெரியும்!” மேக்அப் போட்டி அசத்தல்

“ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் திருநங்கைனு தெரியும்!” மேக்அப் போட்டி அசத்தல்
“ஜெயிச்சதுக்கு அப்புறம்தான் திருநங்கைனு தெரியும்!” மேக்அப் போட்டி அசத்தல்

"அங்க இருக்கிற யார்கிட்டயும் 'நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. ஏதோ தைரியத்துல ஓ.கே சொல்லி காம்ப்படிஷன்ல கலந்துக்கிட்டாலும் மனசுல பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஆனா, மேக் அப் போட்டு முடிஞ்ச பிறகு என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலை."

`ஓய் செல்ஃபி' என்றதும் குடுகுடுவென ஓடிச்சென்று முகத்தைத் துடைத்துக்கொண்டு மேக் அப் போட்டபடியே வந்து செல்ஃபிக்கு போஸ் கொடுக்கும் டிக் டாக் வீடியோக்கள் சமீபத்தில் செம வைரல். செல்ஃபிக்கு போஸ் கொடுப்பதற்காக மட்டுமல்ல, இயல்பாகவே தங்களை எப்போதும் அழகாகக் காட்டிக்கொள்வதில் பெண்களுக்கு இணையே இல்லை. அப்படியிருக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அழகுக் கலை நிபுணர்கள் ஒன்று திரண்டு அழகுப் போட்டியில் பங்குபெற்றால் எப்படி இருந்திருக்கும்?! 

சமீபத்தில் `சங்கமம் சாதனையாளர் விருது 2018' என்ற நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான விழிப்புஉணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் கலந்துகொண்டார்கள். பிரைடல் மேக் அப் மேற்றும் ஃபேன்டஸி மேக் அப் ஆகிய இரு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. 

``நான் 19 வருஷமா இந்த ஃபீல்டுல கிரியேட்டிவ் மேக் அப் ஆர்ட்டிஸ்ட்டா இருக்கேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிற வகையில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தணும்னு முடிவு பண்ணி இந்தப் போட்டியை ஒருங்கிணைச்சோம். அதோடு, தமிழ்நாடு முழுவதும் இருக்கிற பியூட்டிஷியன்ஸை ஒன்று திரட்டுற விதமாகவும் இது இருந்தது. மேக் அப் போட்டியில பிரைடல், ஃபேன்டஸினு ரெண்டு பிரிவு இருந்துச்சு. பொதுவாவே போட்டின்னு வந்துட்டா எல்லாருமே பிரைடல்தான் செலக்ட் பண்ணுவாங்க. ஆனா, அதைத் தாண்டிய திறமைகளை வெளியில கொண்டு வரணும்னுதான் கற்பனை அலங்காரத்துக்கும் நாங்க முக்கியத்துவம் கொடுத்தோம். 

ரெண்டு போட்டியிலும், போட்டியாளர்கள் துணைக்கு அசிஸ்டன்ட் வெச்சுக்கக் கூடாதுங்கிற நிபந்தனையும், ஒன்றரை மணி நேரத்துல மேக் அப் போட்டு முடிக்கணும்ங்கிற விதிமுறையும் இருந்தது. அதேபோல, நடுவர் குழுவும் கிடையாது. பார்வையாளர்களே ஓட்டுப் போட்டு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கணும். ரெண்டு பிரிவுலயும் 7 பேர் வீதம் மொத்தம் 14 பேர் கலந்துக்கிட்டாங்க. கற்பனை அலங்காரப் போட்டியில மதுரையைச் சேர்ந்த சரஸ்வதியும், பிரைடல் அலங்காரப் போட்டியில சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனாவும் வின் பண்ணினாங்க. இதுல ஹைலைட் என்னன்னா, பிரைடல் காம்படிஷனுக்கு நிரஞ்சனா மாடலா அழைச்சிட்டு வந்தது ஒரு திருநங்கையை. ஆனா, அந்த மாடல் ஒரு திருநங்கைனு அங்கே இருந்த யாருக்குமே தெரியாது. ஸ்டேஜ்ல பரிசு கொடுக்கும்போதுதான் எல்லோருக்குமே தெரிய வந்தது. அதுவும் அவரே சொல்லி கண் கலங்கினப்போதான் எல்லோருக்கும் ஆச்சர்யமாவும் நெகிழ்ச்சியாவும் இருந்துச்சு. அதோடு, இந்த நிகழ்வு புற்றுநோய் விழிப்புஉணர்வுக்காக நடத்தப்படுறதுனால வித்தியாசமா மொட்டை மாதிரி மேக் அப் போட்டு மாடல்களை ஃபேஷன் ஷோ பண்ண வெச்சோம். இதுவரை இந்தியாவுல இந்த மாதிரி ஒரு ஃபேஷன் ஷோ வேறு எங்கேயும் நடந்ததில்ல” என்கிறார் `சங்கமம்' நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் இலங்கேஸ்வரி முருகன். 

அழகுக் கலை நிபுணர் நிரஞ்சனா பேசும்போது, ``முதல்ல எனக்கு இந்தப் போட்டியில கலந்துக்கிற எண்ணமே இல்ல. ஏன்னா, என்னோட பொருளாதாரச் சூழலுக்குத் தகுந்த மாதிரி எந்த மாடலும் கிடைக்கலை. பிரைடல் மேக் அப் போட்டியில கலந்துக்கணும்னா அதுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல மாடலை அழைச்சிட்டுப் போகணும். யாரை அழைச்சிட்டுப் போனாலும் அவங்களுக்கு குறைஞ்சது ஐந்தாயிரத்துல இருந்து பத்தாயிரம் வரை கொடுக்கணும். அதனால, இந்தப் போட்டியில கலந்துக்கிற எண்ணமே இல்ல. ஆனாலும், `நாம ஏன் இந்த வாய்ப்பை நழுவவிடணும், நம்மகிட்ட திறமை இருக்கு'னு தோணுச்சு. போட்டிக்கான விதிமுறையில பெண்கள் மட்டுமே கலந்துக்கணும்னு இல்ல. அப்போதான் என் தோழி ஜீவாகிட்ட இதுபத்திச் சொன்னேன். `நான் ஒரு திருநங்கை. நான் எப்படி இதுல கலந்துக்க முடியும். அதோடு, நீங்க வின் பண்ணணும்னு நினைங்க. நான் கலந்துக்கிட்டா உங்களால ஜெயிக்க முடியாது'ன்னு சொன்னாங்க ஜோதி. `அதை நான் பார்த்துக்குறேன், நீங்க வாங்க'ன்னு சொல்லி அழைச்சுட்டுப் போனேன்” என்றவரை இடைமறித்த ஜீவா,

``என்னால இப்போ வரை நம்ப முடியலைங்க. ஆரம்பத்துலயே நான் நிரஞ்சனாகிட்ட சொன்னேன்... நான் கொஞ்சம் கறுப்பானவ, பொண்ணுங்களை மாதிரி என் ஸ்கின் கிடையாது, நீங்க ரிஸ்க் எடுக்காதீங்க'னு சொன்னப்போகூட, `என்னால முடியும் ஜீவா. பிரைடல் மேக் அப் போட்டா நீ ரொம்ப அழகா இருப்ப. நிச்சயமா சொல்றேன் நாமதான் வின் பண்ணுவோம்'னு கான்ஃபிடன்ட்டா சொன்னாங்க. அதுமட்டுமல்லாம, என்னை மாதிரியான திருநங்கைக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காது. பிரைடல் மேக் அப் பண்ணிக்கிறதெல்லாம் எங்களுக்கு கனவு மாதிரிதான். நிரஞ்சனா ரொம்ப நம்பிக்கையோடு ஜெயிச்சிடலாம்னு சொன்னதால நான் ஓ.கே சொல்லிட்டேன். அதோடு, `அங்க இருக்கிற யார்கிட்டயும் நீ ஒரு திருநங்கைனு சொல்ல வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. ஏதோ தைரியத்துல ஓ.கே சொல்லி காம்ப்படிஷன்ல கலந்துக்கிட்டாலும் மனசுல பயம் இருந்துட்டே இருந்துச்சு. ஆனா, மேக் அப் போட்டு முடிஞ்ச பிறகு என் கண்ணை என்னாலேயே நம்ப முடியலை. அப்படியே ஆடிப்போயிட்டேன். நிரஞ்சனா அவ்வளவு அழகா மேக் அப் போட்டு விட்டுருந்தாங்க. பக்கத்துல அழகழகான பெண்கள் வேற இருந்தாங்க. சரி நமக்கு இதுவே போதும், இப்படியே வீட்டுக்குப் போயிடலாம்னு நினைச்சிட்டு இருந்தப்போதான், பிரைடல்ல நான் வின் பண்ணினதாச் சொன்னாங்க. அந்த நிமிஷம் உடம்பெல்லாம் புல்லரிச்சுப் போயிடுச்சுங்க. என்னை நானே திரும்பத் திரும்ப கண்ணாடியில பாத்து ரசிச்சுட்டு இருந்தேன்” என்கிறார் ஜீவா

``அவங்க ரசிக்கிறதை விட நிகழ்ச்சிக்கு வந்திருந்தவங்கதான் அதிகமா ஜீவாவை ரசிச்சிட்டு இருந்தாங்க. எல்லா ஈவென்ட்டும் முடிந்து விருது கொடுக்கும்போது நிரஞ்சனாவையும் ஜீவாவையும் மேடைக்குக் கூப்பிட்டோம். விருதை கையில வாங்கினதுக்கு அப்புறம்தான் ஜீவா அழுதுகிட்டே, தான் ஒரு திருநங்கைனு சொன்னாங்க. அவங்க அப்படிச் சொன்ன அடுத்த நிமிஷம் எல்லோருமே ஆச்சர்யமாகிட்டாங்க; நம்பவே முடியலை. `திருநங்கையான எங்களுக்குக் கல்யாண அலங்காரமெல்லாம் பண்ணிக்க முடியாது. ஆனா, இன்னிக்கு எனக்கு அலங்காரமும் செய்து விருதையும் கொடுத்திருக்கீங்க. இது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம்'னு ஜீவா சொன்னதும் எல்லோரும் நெகிழ்ந்து அழுதுட்டோம். ஜீவா ஒரு திருநங்கைன்னே தெரியாத நிலையிலும் அவங்களை ஜெயிக்கவெச்ச ஆடியன்ஸுக்குதான் நான் முதல்ல நன்றி சொல்லணும்” என்று நெகிழ்கிறார் இலங்கேஸ்வரி. 

அடுத்த கட்டுரைக்கு