Published:Updated:

``கனகதுர்காவை சபரிமலை ஏற்றியது மார்க்சிஸ்ட் கட்சிதான்!'' - சகோதரர் தாக்கு

எம்.குமரேசன்
``கனகதுர்காவை சபரிமலை ஏற்றியது மார்க்சிஸ்ட் கட்சிதான்!'' - சகோதரர் தாக்கு
``கனகதுர்காவை சபரிமலை ஏற்றியது மார்க்சிஸ்ட் கட்சிதான்!'' - சகோதரர் தாக்கு

பரிமலையில் இன்று அதிகாலை இரு பெண்கள் சாமி தரிசனம் செய்தனர். உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்குள் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்த 95 நாள்களுக்குப் பிறகு முதன்முறையாக இரு பெண்கள் சபரிமலை சந்நிதானம் வரை சென்று வழிபட்டுள்ளனர். சபரிமலையில் பெண்கள் நுழைந்ததற்காகப் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கடுமையாக விமர்சித்துள்ளன.

Credits : Manorama

கேரள மாநிலப் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஸ்ரீதரன்பிள்ளை, ``பினராயி விஜயன் தற்காலத்து ஒளரங்கசீப்போல இந்துக்களின் பாரம்பர்யப் பழக்க வழக்கங்களை அழித்து வருவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இரு பெண்களையும் திட்டமிட்டே மலைக்கு அழைத்துச் சென்று சபரிமலையின் புனிதத்தை பினராயி விஜயன் அழித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

கேரள மாநிலக் காங்கிரஸ் கட்சித் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனும் பினராயி விஜயனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``மக்களின் நம்பிக்கையை அழிப்பது நல்லது அல்ல. சபரிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு பெண்களும் உண்மையான பக்தர்கள் அல்ல. இருவரும் சமூகச் செயற்பாட்டாளர்கள். பினராயி விஜயனின் செயல்பாட்டை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தும் என்று கூறியுள்ளார். 

கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், ``முதல்வரின் உத்தரவின் அடிப்படையில்தான் அந்தப் பெண்கள் ரகசியமாகச் சபரிமலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாகச் செயல்படும் பினராயி விஜயன் பிடிவாதம் உடையவராக இருக்கிறார்’’ என்று விமர்சித்துள்ளார். 

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த கனகதுர்காவின் சகோதரர் பாரத்பூசன். மார்க்சிஸ்ட் கட்சியும் கோட்டயம் மாவட்ட எஸ்.பி ஹரிகுமாரும் சேர்ந்து திட்டமிட்டு கனகதுர்காவை சபரிமலை ஏறச் செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ``டிசம்பர் முதல் வாரத்தில் கனகதுர்கா சபரிமலை சென்றார். தொடர் போராட்டம் காரணமாக மலை ஏற முடியவில்லை. இதனால், திட்டத்தைக் கைவிட்டார். ஆனால், அதற்குப் பிறகும் வீடு திரும்பவில்லை. வீட்டில் சொல்லிக்கொள்ளாமல்தான் அங்கே சென்றார். இதனால், கனகதுர்காவின் கணவர் போலீஸ் நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார். ஆனால், கனகதுர்காவை போலீஸ் ரகசியமாகக் கண்ணூரில் தங்க வைத்துள்ளது. தற்போது, கனகதுர்காவும் பிந்துவும் மலை ஏறியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கட்சி கேரள மாநிலத் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன், பெண்கள் வழிபட்டுச் சென்ற பின்னர் கோயிலில் புனிதப்படுத்தும் வழிபாடு நடத்தி உச்ச நீரிமன்ற உத்தரவைத் தந்திரி கண்டரரு ராஜிவரரு அவமதித்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.