Published:Updated:

விண்டோஸ் 7-ஐ முந்திய விண்டோஸ் 10 -பத்தாண்டு கால சாதனையை முறியடித்தது!

விண்டோஸ் 7-ஐ முந்திய விண்டோஸ் 10 -பத்தாண்டு கால சாதனையை முறியடித்தது!
விண்டோஸ் 7-ஐ முந்திய விண்டோஸ் 10 -பத்தாண்டு கால சாதனையை முறியடித்தது!

மைக்ரோசாப்ட் நிறுவனம் இறுதியாக அறிமுகப்படுத்திய இயங்குதளமான விண்டோஸ் 10 பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் முதல் முறையாக விண்டோஸ் 7-ஐ முந்தியிருக்கிறது.

2009-ல் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 மைக்ரோசாப்ட் வெளியிட்டதிலேயே மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இயங்குதளமாகும். அனைத்துத் தரப்பினரிடையேயும் இதற்கு வரவேற்பு இருந்தது. விண்டோஸ் விஸ்டாவின் தோல்விக்குப் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 7 புதிய வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆகவேதான் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளை நெருங்கிய பின்னரும்கூட அதற்கான வரவேற்பு குறையவே இல்லை.

இந்த நிலையில், முதல் முறையாக நீண்ட காலமாக இடம் வகித்து வந்த முதலிடத்தை விண்டோஸ் 10-க்கு விட்டுக் கொடுத்திருக்கிறது விண்டோஸ் 7. NetAnalytics என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலமாக இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளத்தைக் கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி 39.22 % பேர் பயன்படுத்துகிறார்கள், அதே நேரத்தில் விண்டோஸ் 7 இயங்குதளத்தை 36.90 % பேர் பயன்படுத்துகிறார்கள்.

மேலும் 2001-ம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட Windows XP இயங்குதளம் இன்னும் 4.53% சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற தகவலும் இதன் மூலமாகத் தெரிய வந்துள்ளது. விண்டோஸ் 10 இயங்குதளம் கடந்த 2015-ம் ஆண்டில் வெளியானது. 700 மில்லியனுக்கும் மேற்பட்ட சாதனங்களில் விண்டோஸ் 10 தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.