வீரியம் அதிகமுள்ள மருந்து மாத்திரைகளால் ஏற்படும் உடல் உபாதைகள், பின்விளைவுகள், ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகளை முறிக்கும் சக்தி, மணத்தக்காளிக்கு உண்டு. தொண்டையில் ஏற்படும் தொந்தரவுகளுக்கான சிறந்த தீர்வு மணத்தக்காளிச் சாறு. மனஅழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கும், அதிக வெப்பமான சூழலில் வேலை செய்பவர்களுக்கும் வயிற்றுப்புண் வர வாய்ப்பு அதிகம். இவர்கள், வாரம் ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளி சாப்பிடுவது வயிற்றுப்புண்ணைத் தடுக்கும். வாய்ப்புண்ணையும் போக்கும். குரல்வளத்தை மேம்படுத்தும்.

தேவையானவை:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மணத்தக்காளிக் கீரை : ஒரு கப்
வேகவைத்த சாதம் : ஒரு கப்
தேங்காய்த்துருவல் : கால் கப்
காய்ந்த மிளகாய் : 2
எண்ணெய் : 2 டீஸ்பூன்
நெய் : ஒரு டீஸ்பூன்
கடுகு : கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு : தலா அரை டீஸ்பூன்
உப்பு : தேவையான அளவு
கட்டி பெருங்காயம் : சிறிது

செய்முறை: மணத்தக்காளிக் கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியைவைத்து, எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய மணத்தக்காளிக் கீரையைச் சேர்த்து வதக்கவும். சிறிதளவு வதங்கியவுடன், உப்பு சேர்க்கவும். கீரை வெந்தவுடன் தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக வேகவைத்த சாதம் மற்றும் நெய் சேர்த்து நன்கு கிளறி, பரிமாறவும்.


பலன்கள்: ரெசிபியில் மணத்தக்காளி சாதம் செய்யப் பயன்படுத்தியிருக்கும் தேங்காய்த்துருவல், உளுத்தம் பருப்பு இரண்டும்கூட வயிற்றுப்புண்ணைச் சரிசெய்ய உதவும். இவை அனைத்துமே, உடலுக்கு அதிகக் குளிர்ச்சியைத் தரக்கூடியவை. குளிர்ச்சி நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, செரிமானப் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். அதற்காகத்தான் ரெசிபியில் காய்ந்த மிளகாய் சேர்க்கப்பட்டிருக்கிறது. மணத்தக்காளி சாதம், ஒரு முழுமையான உணவு!
- ஆ.சாந்தி கணேஷ், ஜெ.நிவேதா
படம். தே.அசோக்குமார்