Published:Updated:

``இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு!” இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த கேரளாவின் ‘மகளிர் சுவர்’

சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவு தரவும், பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், ஏற்பாடு செய்யப்பட்ட `மகளிர் சுவர்’ பிரசாரத்தில், கிட்டத்தட்ட 55 லட்சப் பெண்கள், 650 கிலோமீட்டருக்கு, மனிதச் சுவர் உருவாக்கி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

``இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு!” இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த கேரளாவின் ‘மகளிர் சுவர்’
``இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு!” இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த கேரளாவின் ‘மகளிர் சுவர்’

ந்தப் புத்தாண்டு தொடக்கத்திலே, பெண்களின் சம உரிமையையும் சுயமரியாதையும் உரக்கச் சொல்லும் வண்ணம், கேரளா மாநிலத்தில் இடதுசாரி அரசு ஒருங்கிணைத்த `உமன் வால்’ (மகளிர் சுவர்/ women wall) பிரசாரம் அமைந்ததுள்ளது. கடந்த செம்டபர் மாதம், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச  நீதிமன்றம் தீர்ப்பு அளித்த முதலே, பெண்கள் பலரும் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். ஆனால், வலதுசாரி அமைப்புகளின் தொடர் போராட்டங்களும், மிரட்டல்களும் வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவு தரவும், பாலினச் சமத்துவத்தை நிலைநாட்டவும், `உமன் வால்’ பிரசாரம் ஏற்பாடு  செய்யப்பட்டன. இதில், கிட்டத்தட்ட 55 லட்சப் பெண்கள், 650 கிலோமீட்டருக்கு, மனிதச் சுவர் உருவாக்கி, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து, நாம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச் செயலர் மரியம் தவாலேவிடம் பேசுகையில், ``இந்தப் பிரசாரம் மூலம் கேரளா பெண்கள் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றனர். அரசு அறிவித்த இந்த மனிதச் சுவர் பிரசாரத்துக்குக் கிட்டத்தட்ட 176 அமைப்புகள் இணைந்து, மிகப்பெரிய சமூக ஒருங்கிணைப்புக்கு வழிவகுத்து இருக்கின்றது. எல்லா வயதினர், எல்லா மதத்தினர், எல்லாச் சமூகத்தின் பெண்களும் ஒன்று கூடி பங்கேற்றதுதான், கவனிக்கவேண்டிய ஒன்று.

பா.ஜ.க அரசும், காங்கிரஸ் கட்சியும் எப்போது மக்களைப் பிரித்து வைத்தே அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய நிலையில், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதுப் பெண்களும் கலந்துகொண்டனர். மனிதச் சங்கிலி அமைப்பதற்கும், மனிதச் சுவர் அமைப்பதற்கும்  வித்தியாசங்கள் உண்டு. மனிதச் சங்கிலியில் ஒருவரையொருவர் கைகோத்து நிற்பார்கள். மனிதச் சுவரில் மற்றவர்கள் யாரும் தங்களுக்கு இடையே நுழையாத வண்ணம் நிற்பார்கள். அதாவது, இனி பாலினம் தொடர்பாகவும், மதச் சார்பாகவும் எந்தவிதமான ஒடுக்குமுறையையும்  அனுமதிக்கமுடியாது என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறோம். 

அதே சமயம், நாங்கள் எந்த மதநம்பிக்கையையும் புண்படுத்தவுமில்லை. ஆனால், கசர்கோட் மாவட்டத்திலுள்ள செட்டுகுண்டு என்ற பகுதியில், மனிதச் சுவரில் ஈடுபட்ட பெண்கள் மீது, சங்கு பரிவார் அமைப்பைச் சேர்ந்த சிலர் கல்வீச்சு நடத்தியிருக்கின்றனர். ஆனால், கேரளா பெண்கள் இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படமாட்டோம் என்று நிரூபித்திருக்கின்றனர் என்பதை மிகவும் பெருமிதத்துடன் கூறுகிறோம்”, என்று தெரிவித்தார்.

இந்த மனிதச் சுவர் பிரசாரத்தில், இஸ்லாம் மதத்தைத் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர். ``முத்தலாக் விவகாரமும்’ நாட்டின்

பரபரப்பாக விவாதிக்கப்படும் நிலையில், இந்தப் பிரசாரத்தில் கலந்துகொண்ட சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த பி.கே.சைய்நாமா நம்மிடம் பேசுகையில், ``இஸ்லாம் பெண்கள் இந்த மனிதச் சுவர் பிரசாரத்தில் மிகவும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். ஆனால், இந்தப் பிரசாரத்தில் நாங்கள் முத்தலாக் விவகாரத்தைக் கொண்டுவரவில்லை. அது குடும்பப் பிரச்னையைச் சார்ந்தது. நாம் இங்குப் பாலினச் சமத்துவத்திற்காகப் பிரசாரம் செய்துவருகிறோம்.”, என்று தெரிவித்தார்.

கேரளா அரசின் இத்தகைய பிரசாரம், உலகளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், உலகளவில் இது நான்காவது மிகப்பெரிய மனிதச் சங்கலி பிரசாரம் என்பது குறிப்பிடத்தக்கது. ``ஜனவரி 3ம் தேதி, சாவித்திரி பாய் புலேவின் பிறந்தநாளையொட்டியும், நாங்கள் பல நிகழ்வுகள் நடத்தவுள்ளோம். இவை அனைத்துமே ஏதோ ஒரு சமூக மாற்றத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையில்!”, என்று கூறுகிறார்  மரியம் தவாலே.