வணக்கம்...

புயல் கடந்த பூமியான காவிரி டெல்டா, போர் நடந்த பூமியாகக் காட்சியளிக்கிறது. கஜா புயலின் கோர தாண்டவத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல், தோட்ட வீடுகளிலும், காடுமேடுகளிலும் பதுங்கிக் கிடந்தவர்கள், தற்போது மெள்ள வெளியில் தலைகாட்டிக் கதறத் தொடங்கியிருப்பது, நம் அனைவரையும் கலங்கடிக்கிறது.

கஜா புயலின் கோர தாண்டவத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் பெரும்பகுதிகள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் இந்தப் புயலில் சிக்கிச் சிதைந்துள்ளன. அரசாங்கத்தின் கணக்குப்படியே இதுவரையிலும், 45 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உயிருக்கு உயிராக வளர்த்த சுமார் ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன. லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. முக்கிய வாழ்வாதாரமான விவசாயம், பெருமளவு அழிந்துவிட்டது.

இந்தியாவின் மிகமுக்கிய தென்னை உற்பத்தி மண்டலங்களில் ஒன்று காவிரிப்படுகை. திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் சுமார் 60,000 ஹெக்டேர் பரப்பில் பரவிக்கிடக்கிறது தென்னைச் சாகுபடி. இதில் 60 சதவிகிதத் தென்னை மரங்களைச் சாய்த்துப் போட்டுவிட்டது கஜா புயல். அன்றாட வாழ்க்கைக்கு, குழந்தைகளின் படிப்புச் செலவுக்கு, திருமணச் செலவுக்கு எனக் கனவுகண்டு வைத்திருந்த விவசாயிகள், அடுத்தவேளைத் தேவைக்கே யார் உதவிக்கு வருவார்கள் எனச் சாலைகளில் காத்துக்கிடக்கும் கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு தென்னங்கன்று மரமாகி விளைச்சல் தர, குறைந்தது பத்தாண்டுகளாவது ஆகும். ‘எங்கள் வாழ்க்கை பத்தாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது’ என்று கலங்குகிற காவிரிப்படுகை மக்களை என்ன சொல்லித் தேற்றுவது!

நெல், கரும்பு, வாழை, மரப்பயிர்கள் என ஒட்டுமொத்த விவசாயமும் குலைந்துகிடக்கிறது. சாலைகளில் விழுந்த மரங்கள், கிராமங்களைத் துண்டித்துள்ளன. தொலைத்தொடர்பு இன்னும் முழுமையாகச் சீரடையவில்லை. 80,000-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துவிட்டன. மின்சாரம் கிடைக்க அதிகபட்சம் இரண்டு மாதங்கள் வரைகூட ஆகலாம் என்ற சூழலில்... இருட்டிலும் துயரத்திலும் மூழ்கி, ஒட்டுமொத்தமாகத் தொடர்பு எல்லைக்கு வெளியே கிடக்கிறது காவிரி டெல்டா.

வணக்கம்...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திறம்படக் கையாண்ட அரசு, நிவாரணப் பணிகளைத் துரிதமாகச் செய்யவில்லை என்ற கோபம் மக்களைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. வழக்கம்போல, ‘பாதிப்பு ஏதும் இல்லை’ என்பதை நிறுவுவதில் மட்டுமே மக்கள் பிரதிநிதிகள் குறியாக இருப்பதுதான் மக்களின் கோபத்துக்குக் காரணம்.

நேற்றுவரை நமக்கு உணவு தர உழைத்தவர்கள் இப்போது வீடிழந்து, வாழ்வாதாரம் இழந்து, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை இழந்து தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தச் சகோதர்களுக்குக் கரம்கொடுத்து ஆறுதல் சொல்லி அரவணைக்க வேண்டிய தருணம் இது. பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் உடனடித் தேவைகளையும், அடுத்தகட்டத் தேவைகளையும் நிறைவு செய்வதுதான் இப்போதைய முக்கியப் பணி. துயர் துடைக்கும் பணியில் தன்னையும் இணைத்துக்கொள்கிறான் விகடன். இதற்காக விகடனின் ‘வாசன் அறக்கட்டளை’ சார்பில் 10 லட்ச ரூபாய் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது.

இழப்பு மிகப்பெரியது. உடனடியாகவும் நிரந்தரமாகவும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. இதே காவிரிப்படுகையின் வறட்சி, தானே புயல், சென்னைப் பெருமழை, கேரளப் பெருவெள்ளம் என ஒவ்வொரு முறையும் நிவாரணப்பணிகளுக்காக விகடன் முன்னின்றபோது, ‘நாங்களும் உங்களோடு இணைகிறோம்’ என்று வாசகர்களாகிய நீங்கள் எங்களுடன் கைகோத்தீர்கள். இப்போதும், துயரத்தில் தவிக்கும் காவிரிப்படுகை மக்களுக்காகக் கைகோப்போம், வாருங்கள். உங்கள் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டியது, விகடனின் பொறுப்பு.

உதவும் உள்ளம் கொண்ட வாசகர்கள் ‘Vasan Charitable Trust’ என்ற எங்கள் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி. எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்புக் கணக்கு எண்: 0416132000052  (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோடு: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

வெளிநாட்டு வாசகர்கள் எங்கள் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண்: 443380918 (ஐ.எஃப்.எஸ்.சி கோடு: IDIB000C032, ஸ்விப்ட் கோடு: IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600008) வழியாக அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்:  DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும். 

 வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் ‘கஜா துயர் துடைப்போம்,’ அல்லது  #RestoreDelta என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை ‘ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம். மெயிலில் ரசீது பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் help@vikatan.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, வங்கியில் பணம் செலுத்திய (Transaction No: / Reference No:) பரிவர்த்தனை எண்ணைக் குறிப்பிட்டு மெயில் அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

வாருங்கள்...

 நம் சகோதரர்களின் துயர் துடைப்போம்!

- பா.சீனிவாசன்
 ஆசிரியர், ஆனந்த விகடன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு