Published:Updated:

புதுப்புது டிசைன்கள்... குவியும் ஆர்டர்கள்... பாலிதீன் பைகளுக்கு விடைகொடுத்த குடும்பம்

புதுப்புது டிசைன்கள்... குவியும் ஆர்டர்கள்... பாலிதீன் பைகளுக்கு விடைகொடுத்த குடும்பம்
புதுப்புது டிசைன்கள்... குவியும் ஆர்டர்கள்... பாலிதீன் பைகளுக்கு விடைகொடுத்த குடும்பம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக பாலிதீன் பைகளுக்குத் தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, துணிப்பைகளுக்கான மவுசு அதிகரித்துள்ளது. பேக் பேக் பைகள், தோள் பைகள், கைப்பிடி பைகள் என துணிப்பைகள் பிசினஸில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் ஈரோட்டைச் சேர்ந்த மல்லிகா குடும்பத்தினர்.

``பாலிதீன் பைகள் பயன்படுத்தக்கூடாதுனு  இப்போதான் சட்டம் வந்திருக்கு. ஆனால், நாங்கள் ஒரு வருடமாக டிசைனர் துணிப்பைகள் தயாரிப்பில் ஈடுபட்டு இருக்கிறோம். துணிப்பையில் புதுமையைக் கொண்டு வரமுடியும் என்பது என் மகன் பாலகுருநாதனின் ஐடியா. அவனோட ஐடியாவுக்கு நாங்க துணையா இருக்கோம்'' என்றார்.  அடுத்துப் பேசினார் பாலகுருநாதன்.

டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிச்சுட்டு என் துறை சார்ந்த நிறைய நிறுவனங்களில் வேலை பார்த்தேன். மனசுக்கு நிறைவான வருமானம் என்றாலும் எந்த நிறுவனத்திலும் மனசு ஒன்றிப்போகவில்லை. ஏதோ ஒரு குறை இருந்துகொண்டே  இருந்தது. புதுமையாகவும் வித்தியாசமாகவும் எதாவது பண்ண வேண்டும் என்று யோசித்தபோதுதான் இந்தத் துணிப்பை ஐடியா ஸ்பார்க் ஆச்சு. சராசரி வருமானம் கொண்ட  குடும்பத்தில்  இருந்து ஒரு பிசினஸ் ஆரம்பிக்க வேண்டுமென்றால் குடும்பத்தின் முழு ஒத்துழைப்பும் வேண்டும். அதனால் தயங்கியபடியே என் ஐடியாவை வீட்டில் சொன்னேன். ஆனால், என் குடும்பமே எனக்காக உழைக்கத் தயாராக இருந்தது என்பதுதான் ஆச்சர்யம். துணி தேர்வு செய்வது, விற்பனை செய்வது இதெல்லாம் என்னுடைய வேலை.

பைகளைக் கொரியர் செய்வது, பேக் செய்வது, நான் உருவாக்கிய டிசைன்களில் கருத்துகள் சொல்வது, புது டிசைனுக்கான ஐடியா வழங்குவது, பைகளில் உள்ள தையல்களைச் சரிபார்ப்பது என குடும்பத்தில் உள்ள ஒவ்வொருத்தரும் தங்களுக்கான வேலைகளைப் பிரித்துக்கொண்டனர். இதுதான் எங்களுடைய வெற்றி. ஆரம்பத்தில் மஞ்சள் பை போன்று கைப்பிடி கொண்ட பைகள் தயாரித்தோம். எங்களுடைய பைகளை தனித்துக்காட்டுவதற்காக குடும்பமாக யோசித்து, பிளான் செய்து, தமிழ் எழுத்துகள், இயற்கை சார்ந்த ஓவியங்கள் என வித்தியாசமான உருவங்களை பிரின்ட் செய்தோம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கவே, ரிட்டன் ஃகிப்ட்ஸ்க்கான பைகள், பள்ளிக் குழந்தைகளுக்கான பைகள், பேக் பேக் பைகள், சிறிய பர்ஸ்கள், துணியிலான ஃபைல் என அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட்டோம். அது தான் இன்று `துகள்' என்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் முகநூல் பக்கத்தின் மூலம் மட்டுமே நிறைய ஆர்டர்கள் வந்தன. ஆனால் இப்போது சென்னை, மும்பை போன்ற இடங்களிலிருந்து ஆர்டர்கள் வருகின்றன. ஒவ்வொரு ஆர்டரையும் முதல் ஆர்டர் போன்று பார்த்து பார்த்துச் செய்வதால் தொழிலில் ஒரு திருப்தியும் இருக்கிறது. பாலிதீன் பைகள் தடை செய்யப்படும் என அறிவிப்பு வந்ததில் இருந்தே, நிறைய ஆர்டர்கள் வருகிறது. நாங்களும் அதற்குத் தகுந்தாற்போல் நிறைய புது டிசைன்களைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். 35 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை துணியின் தரம் மற்றும் டிசைன்களைப் பொறுத்து வெரைட்டியான பைகள் இருக்கிறது. பாலிதீன் பைகளுக்கு மாற்றாக மக்கள் எங்கள் துணிப் பைகளை தேடி வருவது ஊக்கத்தை அளித்துள்ளது. அடுத்தடுத்து லேப்டாப் பேக்குகள், டூரிஸ்ட் பேக்குகள் என நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. பாலிதீன் பைகள் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்போடு இணைந்து எங்களைப் போன்ற கைவினைக் கலைஞர்களைப் பாதுகாக்கிறது'' என்கிறார் மகிழ்ச்சியாக.