Published:Updated:

ஏ.டி.எம்-மில் பணம் இல்லை... எஸ்.பி.ஐ வங்கிக்குப் பாடம் புகட்டிய ஆங்ரி மேன்!

வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காவிட்டாலோ அல்லது அந்தத் தொகை குறைந்தாலோ அபராதம் விதிக்கும் வங்கி, தனது வங்கி ஏடிஎம்மில் மட்டும் பணம் இல்லாமல் வைக்கலாமா...?

ஏ.டி.எம்-மில் பணம் இல்லை... எஸ்.பி.ஐ வங்கிக்குப் பாடம் புகட்டிய ஆங்ரி மேன்!
ஏ.டி.எம்-மில் பணம் இல்லை... எஸ்.பி.ஐ வங்கிக்குப் பாடம் புகட்டிய ஆங்ரி மேன்!

விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றவர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைக் கடனாக வாரி வழங்கிவிட்டு, பின்னர் அதை வாராக்கடனாகவும் தள்ளுபடி செய்யும் பொதுத்துறை வங்கிகள், அவ்வாறு இழக்கும் பணத்தை மினிமம் பேலன்ஸ் அபராதம், ஏடிஎம் கட்டணம் என சாமான்யர்களிடமிருந்து வசூலிப்பதாக சமீப காலமாகக் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம்-மில் பணம் வராததற்காக நீதிமன்றப் படியேறி எஸ்பிஐ வங்கிக்குப் பாடம் புகட்டி உள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். 

கடந்த 42 மாதங்களாக பொதுத் துறை வங்கிகள், தங்களிடம் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களில், குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதமாகவும், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஏடிஎம்-மைப் பயன்படுத்தியதற்கான கட்டணமாகவும் வசூலித்த தொகை 10,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என அண்மையில் மக்களவைக்குத் தெரிவிக்கப்பட்ட தகவலில் இருந்தது. 

பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யில் சேமிப்புக் கணக்குக்கான குறைந்தபட்ச மாத இருப்புத் தொகை, மெட்ரோ நகரங்கள் மற்றும் நகர்ப்புற கிளைகளில் ரூ.3,000, நடுத்தர நகரங்களில் ரூ.2,000, கிராமப் புறங்களில் ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையைத் தங்கள் கணக்கில் பராமரிக்காதவர்களுக்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை (ஜிஎஸ்டி தனி) அபராதமாக விதிக்கப்படுகிறது. 

அதேபோன்று மும்பை, புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய 6 மெட்ரோ நகரங்களில், பிற வங்கிகளின்  ஏடிஎம்-மை மாதத்துக்கு 3 முறையும், சொந்த வங்கியின் ஏடிஎம்-மை மாதத்துக்கு 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால், பரிவர்த்தனை ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இப்படி வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக் கணக்கில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுக்கவே கட்டணமும், மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதமும் வசூலிக்கும் பொதுத் துறை வங்கிகள், விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற மோசடி தொழிலதிபர்களுக்கு மட்டும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயைக் கடனாகக் கொடுத்துவிட்டு, அதை அவர்கள் வேண்டுமென்றே கட்டாமல் மோசடி செய்யும் சூழலில், அதுபோன்ற கடன்களை வாராக்கடன்களாகத் தள்ளுபடியும் செய்து விடுகிறது. 

இத்தகைய கடன்களை 2016-17-ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 20,339 கோடி ரூபாய் அளவுக்கு நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ தள்ளுபடி செய்துள்ளது. அதே நிதியாண்டில் எஸ்பிஐ உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை வங்கிகளும் தள்ளுபடி செய்த கடன் தொகை சுமார் 81,683 கோடி ரூபாய். இதுவே 2013-14-ல் 34,409 கோடி, 2014-15 ல் 49,018 கோடி, 2015-16 ல் 57,585 கோடி ரூபாய் எனத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

கடனை வாங்கிவிட்டு அதைத் திருப்பிக்கட்டாமல் போனால், வாராக்கடனாகத் தள்ளுபடி செய்துவிடுவார்கள் என்ற தைரியத்தில்தான் தொழிலதிபர்கள் மீண்டும் மீண்டும் வங்கிகளிடம் கடன் வாங்கி, பின்னர் அதைக் கட்டாமல் ஏமாற்றுகிறார்கள். இதற்குக் கடன் வழங்கும் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், மல்லையா மட்டும் 2004-ம் ஆண்டில் பொதுத் துறை வங்கிகளிடம் வாங்கி ஏப்பம் விட்ட தொகை 8,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஏடிஎம்-மில் பணம் வராததற்காக எஸ்பிஐ வங்கிக்குப் பாடம் புகட்டி உள்ளார் வாடிக்கையாளர் ஒருவர். 

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள ஒரு எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக, வேறொரு வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளார். அவர் தனது கார்டை உள்ளே செலுத்தி பணம் எடுக்க முயன்றபோது `பணமில்லை' (No cash) என்று வந்துள்ளது. 3 வெவ்வேறு தினங்களில் அவருக்கு இதுபோன்று அனுபவமே ஏற்பட்டுள்ளது.  

இதைத் தொடர்ந்து அந்த நபர், ராய்ப்பூரில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது எஸ்பிஐ வங்கித் தரப்பில், இணையதள சேவை இல்லாததால் பணம் வரவில்லை என்றும், இதற்குச் சம்பந்தப்பட்ட இணையதள சேவை வழங்கும் நிறுவனம்தான் பொறுப்பு என்றும் வாதிட்டப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நபர் தங்கள் வங்கியின் வாடிக்கையாளர் அல்ல என்பதால், அவர் தங்கள் வங்கிச் சேவையின் வரம்புக்குள் வரமாட்டார் என்றும் வங்கித் தரப்பில் சொல்லப்பட்டது. 

ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுத்த நுகர்வோர் நீதிமன்றம், ``3 வெவ்வேறு தினங்களில்' பணம் இல்லை' என்று ஏடிஎம் காண்பித்துள்ளது. இணையதளச் சேவை இல்லையென்றால், எப்படி ஏடிஎம் அவ்வாறு காட்டியது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைக்காவிட்டாலோ அல்லது அந்தத் தொகை குறைந்தாலோ அபராதம் விதிக்கும் வங்கி, தனது வங்கி ஏடிஎம்மில் மட்டும் பணம் இல்லாமல் வைக்கலாமா?" என்று கேட்டதோடு, ``ஏடிஎம் பயன்பாட்டுக்கான முழு ஆண்டு கட்டணத்தையும் முன்கூட்டியே வங்கிகள் வசூலித்துக் கொள்ளும்போது, எந்த ஒரு ஏடிஎம்மையும் வாடிக்கையாளர் ஒருவர் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிமை உள்ளது" என்றும் கூறி, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு எஸ்பிஐ வங்கி 2,500 ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. 

ஆகவே, இனி மினிமம் பேலன்ஸ் இல்லாவிட்டால் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதைப் போன்று, ஏடிஎம்மில் பணம் இல்லை என்று காட்டப்பட்டால், வாடிக்கையாளர்களும் சம்பந்தப்பட்ட வங்கியிடம் அபராதம் கோரி நீதிமன்றத்தை நாடலாம்!