Published:Updated:

`ரூ.5000/- லஞ்சம் பெற்றவர்கள் தற்போது சபரிமலையைச் சுத்தப்படுத்துகிறார்கள்!' - விளாசும் முன்னாள் எம்.பி

`ரூ.5000/- லஞ்சம் பெற்றவர்கள் தற்போது சபரிமலையைச் சுத்தப்படுத்துகிறார்கள்!' - விளாசும் முன்னாள் எம்.பி
`ரூ.5000/- லஞ்சம் பெற்றவர்கள் தற்போது சபரிமலையைச் சுத்தப்படுத்துகிறார்கள்!' - விளாசும் முன்னாள் எம்.பி

"இங்கே கடவுள் நம்பிக்கையற்ற அல்லது கடவுள் நம்பிக்கையுள்ள இடதுசாரிக் கொள்கையாளர்கள் யாவருக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. அது கடவுளின் பெயரால் சக மனிதனின் உரிமையைப் பறிக்கக் கூடாதென்பதுதான்."

புத்தாண்டு 2019-ன் தொடக்கம் பெண்களின் பெரும் எழுச்சியுடன் தொடங்கியிருக்கிறது. கேரளாவைச் சேர்ந்த பெண்கள், `வனிதா மதில்' எனும் பெரும் சுவரொன்றை மாநில நீளம் முழுவதும் தங்களுக்காக எழுப்பியிருக்கிறார்கள். அத்தனை எதிர்ப்புகளுக்கு இடையேயும் சபரிமலைக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வழிபட்டிருக்கிறார்கள். `இது பலமுறை முயன்ற பிறகு தற்போது நடந்திருக்கிறது. அவ்வளவுதான். ஒன்றும் பெரிய விஷயமில்லை’ என்று அவர்களே தன்னடக்கத்துடன் சொன்னாலும், வரலாற்றில் இதைப் பதிவுசெய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. பெண்களுக்கான அதகளமான தொடக்கத்துடன் இந்த ஆண்டு அமைந்திருக்கும் சூழலில், 'வனிதா மதில்' ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ராஜ்யசபா எம்.பி-யுமான டி.என்.சீமா இது தொடர்பாக அளித்த பேட்டியிலிருந்து...

 `` `வனிதா மதில்' எதற்காக?"

``இது இரண்டொரு நாள்களில் ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. கேரள இடதுசாரி அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகச் சிறப்புத் துறையைத் தொடங்கிய போதே `பெண்களின் வலிமையைப் பெரிதளவில் வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்' என்று சிறிய அளவில் திட்டமிட்டுக் கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான் சபரிமலை கோயில் தொடர்பான தீர்ப்பும், அது சார்ந்த எதிர்ப்புகளும் வெளிவரத் தொடங்கின. அது தொடர்பான அரசின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கத்தில்தான் நாங்கள் அனைத்துப் புரட்சிகர மற்றும் சமூக மாற்றத்துக்கான அத்தனை அமைப்புகளையும் தனிநபர்களையும் திரட்டி இந்தச் சுவரை எழுப்பினோம்".

``இத்தனை பெண்களை ஒருங்கிணைப்பது எப்படிச் சாத்தியமானது? கேரளப் பெண்கள் என்றாலே பெரும்புரட்சி என்பது வரலாற்று அடையாளமாக இருக்கிறதே?"

``கேரளா அரசியல் உணர்வு அதிகமுள்ள, அதனால் ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலம். முலைவரி எதிர்ப்பு தொடங்கி, தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம், கோயில் நுழைவு என எங்கள் பெண்களுக்கான வரலாற்று அடையாளம் இருக்கிறது. இங்கே கழுத்தில் ஐயப்பன் டாலர் அணிந்துகொண்டிருப்பவர்களைவிட, அரிவாளும் சுத்தியலும் கழுத்தில் டாலராக அணிந்தவர்களைத்தான் அதிகம் பார்க்க முடியும். இடதுசாரிச் சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டு அதைத் தங்கள் வீடுகளில் பேசும், விவாதிக்கும் குடும்பங்கள் இங்கு அதிகம். அதனால், வீதிக்குப் போராட பெண்களை அழைத்து வருவது எளிதானது".

``ஆனால், சபரிமலை நுழைவு விவகாரத்தில் அதற்கு எதிரான செயல்பாடுகளிலும் பெண்கள்தானே அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள்?"

``ஆம், கேரளப் பெண்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அதிகம். அதனால் சில பெண்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துச் செயல்படுவது இயல்பாக நாங்கள் எதிர்பார்த்ததே. ஆனால், தீர்ப்பின் அடிப்படையில் கோயிலுக்குள் நுழையும் கடவுள் நம்பிக்கையுடைய பெண்களைத் தரக்குறைவாகப் பேசுவதும் அவர்களின் உரிமையைப் பறிப்பதும், அவர்களின் மீது வன்முறையில் ஈடுபடுவதும் ஜனநாயக அரசில் ஏற்றுக்கொள்ள முடியாதது.

`வனிதா மதில்' நிகழ்வுக்குக் கூட பல கூட்டங்களின் வழியாகப் பெண்களிடையே அரசியல் பேசி நிலவரத்தை எடுத்துச் சொல்லி, அவர்களை ஒருங்கிணைத்தோம். சபரிமலை நுழைவுக்கும் தொடர்ந்து பெண்களிடையே பிரசாரங்களை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். காலம் மாறும். கடவுள் எமது பெண்களுக்காக தன் புனித பிம்பத்தை உடைத்தெறிவார்".

`` `கோயிலுக்குள் நுழையவேண்டாம்' என்றால் அதை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே, சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்தே தீரவேண்டும் ஏன் பிடிவாதத்தோடு இருக்கிறீர்கள்?' என்று ஒரு சாரார் கேட்கிறார்களே?"

``1991-ல் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை, சபரிமலை கோயிலுக்குப் பெண்கள் சென்றுகொண்டுதான் இருந்தார்கள். ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாள்கள், ஐயப்பனைச் சென்று வழிபடுவது அதுவரை மரபாகவே இருந்து வந்தது. கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, `பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது' என்பது மரபானது. ஒரே நாளில் எப்படி மரபென்பது உருவாகும். நகைப்புக்குரியதாக இல்லையா?. இதில் முக்கியமாகக் கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு இந்துத்துவ, சங்பரிவார் அமைப்புகள் இந்தத் தீர்ப்பை தங்களின் அரசியலுக்காகப் பயன்படுத்தத் தொடங்கின. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் அதுதான் நடந்தது. தீர்ப்பின் அடிப்படையில் பெண்களின் ஜனநாயக உரிமை என்று நாங்கள் குரல்கொடுத்தால் நாங்கள் மதத்தை அவதூறு செய்வதாகச் சொல்கிறார்கள். 

கேரள ஒடுக்கப்பட்ட மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபடுவது என்பது ஒருகாலத்தில் பெரும் பாவம் என்னும் நம்பிக்கை இவர்களிடம் இருந்தது. அதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டது. வெற்றியும் அடைந்தோம். கால மாற்றத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே தற்போது கேரளக் கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன் நீட்சிதான் பெண்களின் இந்தப் போராட்டமும். உண்மைக்கும், உரிமைகளுக்கும் வலிமை அதிகம். அது எப்படியும் வெற்றியடையும்".

``நீங்கள் சபரிமலை கோயிலுக்குச் சென்றுள்ளீர்களா?"

``இல்லை. நான் கடவுள் நம்பிக்கையற்றவள். ஆனால், நான் அறிந்த சில பெண்கள் பத்து வருடங்களுக்கு முன்பு சபரிமலை கோயிலுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தற்போது 40-45 வயது இருக்கும். கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, ரூ.5,000 லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள். லஞ்சம் பெற்றவர்கள்தான், தற்போது பெண்கள் நுழைந்ததற்காகச் சுத்தப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்."

``ஆனால், இடதுசாரி அரசு நேற்றைய பெண்கள் நுழைவை வேண்டுமென்றே திட்டமிட்டுச் செயல்படுத்தியதாக வலதுசாரிகள் குற்றம்சாட்டுகிறார்களே?"

``உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு முதல்முறையாக பதினொரு திருநங்கைகள் சபரிமலைக்குள் நுழைய முற்பட்டார்கள். அவர்களை அடுத்து பெண்கள் பன்னிரண்டு முறை கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்திருக்கிறார்கள். இது அத்தனை முயற்சியும் அவர்கள் தடுக்கப்பட்டதால் மேலும், மேலும் விளைந்ததே. அப்படிக் கோயிலுக்குள் நுழைய முற்படும் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு  தரவேண்டியது கடமை". 

`` `சர்ச் அரசியல்களில் அமைதியாக இருக்கும் அரசுதான், சபரிமலை விவகாரத்தில் கலகம் செய்கிறது' எனத் தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறாரே?"

``இங்கே கடவுள் நம்பிக்கையற்ற அல்லது கடவுள் நம்பிக்கையுள்ள இடதுசாரிக் கொள்கையாளர்கள் யாவருக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. அது கடவுளின் பெயரால் சக மனிதனின் உரிமையைப் பறிக்கக் கூடாதென்பதுதான். பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதால் அவர் கடவுள் நம்பிக்கை உடையவராகவே இருப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் அவர்களைப் போன்றவர்களின் உரிமைக்காகத்தான் குரல் கொடுக்கிறோம். சர்ச் விவகாரத்தில் ஏதோ ஒரு செய்தியைப் படித்துவிட்டு கேரள அரசு மௌனம் காப்பதாகச் சொல்வது பொய். எங்கள் உரிமையைப் பெற்றுத் தாருங்கள் என்று யார் கேட்டாலும் கேரள அரசு போராடி பெற்றுத்தரும்".

அடுத்த கட்டுரைக்கு