பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018
பிரீமியம் ஸ்டோரி
News
சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

சரிகமபதநி டைரி - 2018

ஸ் பகுதியில் நாகேஸ்வரராவ் பூங்காவை ஒட்டிய தெருவில் நடந்துகொண்டிருந்தேன். மாலைப்பொழுது. சீக்கிரமாகவே இருட்டி விட்டிருந்தது. தினமும் ஏதாவதொரு கச்சேரி நடந்து கொண்டிருக்கும் ராகசுதா ஹாலுக்கு அருகில் கால்கள் சென்றபோது காதுகளுக்குள் புகுந்த நாகஸ்வரத்தின் நாத இன்பம் சுண்டி இழுத்தது.

சரிகமபதநி டைரி - 2018

மேடையில் பாகவதர் கிராப்புடன் பாய்ஸ் கம்பெனி நாடக நடிகர் சாயலில் யாழ்ப்பாணம் பாலமுருகன். இரு கட்டை விரல்களைத் தவிர அநேகமாக மற்ற எல்லா விரல்களிலும் பளபளக்கும் மோதிரங்கள். டாலருடன் கழுத்துச் சங்கிலி. 38 வயதுடையவர். லலிதாராமின் பரிவாதினி அமைப்பும், நாத இன்பமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த நாகஸ்வரக் கச்சேரி நடந்துகொண்டிருந்தது.

சீவாளியை சரிபார்த்துவிட்டு சாருகேசி ராகத்தை ஆரம்பித்தார் பாலமுருகன். இருபத்திரண்டு நிமிடங்களில் சாருகேசியின் முழுச் சொரூபம் கண்முன். சுவைக்க சுவைக்க அது இனித்தது. இன்பம் தந்தது. சுற்றமும் சூழலும் மறக்க வைத்தது. சில அபூர்வ பிடிகள் பார்வையாளர்களை ‘ஆகா’ போடச் செய்தது. அட்டகாசமாக வந்து விழுந்த அதி மதுர சங்கதிகள் கேட்டு அரங்கம் ‘பலே’ என்றது. பிசிறு இல்லாத, அபஸ்வரம் ஒலிக்காத, சுத்தமான, இனிமையான சாருகேசி. சிலை மாதிரியாக உட்கார்ந்து வாசிக்காமல் நாகஸ்வரத்தை மேலேயும் கீழேயும், பக்கவாட்டிலும் சுழற்றி வாசிக்கிறார் பாலமுருகன். அங்கங்கே அவரது உடல் குலுங்குவது உற்சாகத் துள்ளல். மேல் பஞ்சமம் பிடித்து, அடுத்த நொடி கீழ் ஸ்தாயிக்கு வந்து, தொடர்ந்து மேலும் கீழுமாக மாறிமாறி அவர் பயணித்தது சிலிர்ப்பூட்டியது. ‘இப்படியொரு சாருகேசி, நாகஸ்வரத்தில் கேட்டு ரொம்ப நாளாச்சு’ என்றார் அருகில் இருந்தவர். ‘காருகுறிச்சி வாசிக்கறது மாதிரி இருக்கு...’ என்றார் இன்னொருவர். இரண்டையும் வழி மொழிந்தோம்!

மறுநாள், பாலமுருகன் தங்கியிருந்த ஓட்டல் அறைக்குள் நுழைந்தபோது, அன்று மாலை வாசிக்கப் போகும் கச்சேரிக்கான தில்லானாவை உடன் வாசிப்பவருடன் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார். அதை நிறுத்திவிட்டு, கட்டிலில் கால் மடித்து உட்கார்ந்தார்.

பூர்வீகம் புதுக்கோட்டை. இவர் பிறப்பதற்கு முன்பாகவே குடும்பம் யாழ்ப்பாணத்துக்குப் புலம்பெயர்ந்துவிட்டது. அங்கே நல்லூர், வசிக்கும் தலமானது.

தந்தை சுப்புசாமி நாகஸ்வர வித்வான். தவிர, தவில், கஞ்சிரா மாதிரியான லயக்கருவிகளும் வாசிக்கக்கூடியவர். எட்டு வயதிலிருந்து பாலமுருகனுக்குத் தவில் வாசிக்க விருப்பம் இருந்திருக்கிறது. மகன் நாகஸ்வரம்தான் வாசிக்க வேண்டும் என்பது அப்பாவின் ஆசை. அவரே குருவானார். பின்னர் மற்றவர்களிடம் சேர்த்து விட்டார். நாகஸ்வர வித்வான் என்.கே. பத்மநாபனிடம் குருகுலம் இருந்து வித்தை பயின்றார் பாலமுருகன். படிப்படியாக வளர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக ஞானம் பெருகியது. கல்யாணியும் காம்போதியும் வசப்பட்டன. குறுகியகாலத்தில் நல்லூர் முருகன் கோயிலின் ஆஸ்தான வித்வானாக நியமனம் செய்யப்பட்டார்.

“நான் நான்காவதுக்கு மேல படிக்கல... அப்பா வேண்டாம்னு சொல்லிட்டாரு... எனக்கும் படிப்பு மேல கவனம் போகல... எனக்கு அப்பாதான் எல்லாம்... என்னிக்குமே அவர் பேச்சுக்கு மறுவார்த்தை பேசினது இல்லை...” என்ற பாலமுருகனுக்குக் குரல் கம்மியது. கண்கள் கலங்கின. தந்தையின் நினைவுகளில் சிறிது நேரம் மூழ்கினார்.

சரிகமபதநி டைரி - 2018

பாலமுருகன் நாகஸ்வரத்தில் அதிக தேர்ச்சி பெற்றார். யாழ்ப்பாணத்திலிருந்து முதல் வெளிநாட்டுப் பயணமாக சிங்கப்பூர் சென்று, அங்கே செண்பக விநாயகர் கோயிலில் வாசித்தார். பின்னர் ஆஸ்திரேலியா இவரை அழைத்தது. இன்று இங்கிலாந்து, கனடா, டென்மார்க் என்று பல நாடுகளுக்குச் சென்ற வண்ணம் இருக்கிறார். அங்கெல்லாம் வசிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இவரை அன்புடன் உபசரித்து, உயர்ந்த வகையில் மரியாதை செய்து அனுப்புகிறார்கள். தமிழ்நாடு மட்டும் கணக்கு வழக்கில் சிக்கனம் பார்த்துக்கொண்டிருக்கிறது!

நிகழ்காலம் பாலமுருகனுக்கு வசந்தமாகவே இருந்தாலும், ஈழப்போர் நடந்த சமயம் இவரும், இவர் குடும்பத்தினரும் அனுபவித்த துயரங்கள், என்றும் நீங்காத வடுக்களாகத் தங்கி விட்டிருக்கின்றன.

“எந்த நேரம் குண்டு தலைல விழுமோன்னு குழியில பதுங்கிக்கிடப்போம்... ஒரு கட்டத்துல வீட்டைக் காலி பண்ணச் சொல்லி அடிச்சு விரட்டினாங்க... மேளத்தையும் தூக்கிட்டு பதிமூணு கிலோமீட்டர் தொலைவுல இருக்கிற சாவகச்சேரிக்கு நடந்தே போனோம்... வேளைக்கு சாப்பாடு இருக்காது... மண் குடிசைல சாணம் மெழுகி உட்கார்ந்திருப்போம்... இடப்பக்கமும் வலப்பக்கமும் குண்டுமழை பொழிஞ்சுட்டு இருக்கும். இப்ப நினைச்சுப் பார்க்கைல உடம்பு உதறுது...” என்றார் பாலமுருகன்.

“டி.என்.ஆர். தாத்தா (ராஜரத்தினம் பிள்ளை) காருகுறிச்சி தாத்தா வாசிப்புக்கு நான் எப்பவும் அடிமை...” என்று நெகிழ்வுடன் தெரிவிக்கும் பாலமுருகன், மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் பாடியிருக்கும் ஒலிநாடாக்களைக் கேட்டுகேட்டு தன் இசை ஞானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்.

மியூசிக்கல் MeToo!

ஓரிரு மாதங்களுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் வீசிய ‘கஜா’, MeToo புயல். அது கர்நாடக இசைக் கலைஞர்கள் சிலரையும் தாக்கியது. ஆராய்ச்சியாளர்கள், பாடகர்கள், பக்கவாத்தியக் கலைஞர்கள் என்று கிட்டத்தட்ட ஒரு டஜன் பெயர்கள் ரிப்பேர் ஆயின! HeToo? என்று சில பெயர்கள் ஆச்சர்யப்பட வைத்தன. சிலரைப் பொறுத்தவரை  ‘ஏற்கெனவே தெரிந்த கதைதானே!’ என்ற விமரிசனமும் வந்தது.

சீஸனில் விருது பெறுபவரின் பெயரை அறிவிப்பது முதல் கச்சேரிப் பட்டியலை வெளியிடுவது வரை எதிலும் முந்திக்கொள்ளும் மியூசிக் அகாடமி, மீடூ விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதிலும் முதலா வதாக வந்து நின்றது. தங்கள் கச்சேரி லிஸ்டிலிருந்து ஏழு பேரை நீக்கியது. இவர்கள், சமூக வலைதளங்களில் ‘தொந்தரவு’ கொடுத்ததாக புகாருக்கு உள்ளான வர்களில் ஒரு பகுதி. அதாவது, குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ஆனால் நிரூபிக்கப்படாதவர்கள்!

அகாடமியின் நடவடிக்கையைச் சிலர் பாராட்டினார்கள். ‘விசாரிக்காம லேயே எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?’ என்று பலர் கண்டித்தார்கள். இசைத்துறையில் சக கலைஞர்கள் எல்லோருமே அகாடமி விஷயத்தில் கப்சிப்! Big Boss உடன் இவர்கள் நேரடியாக மோத மாட்டார்கள். மறைமுகமாக வேண்டுமானால் திட்டித் தீர்ப்பார்கள்!

இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொஸைட்டி மட்டும் அகாடமியின் விரல் பிடித்துச் சென்றது. இங்கே ‘சங்கீத கலா சிகாமணி’ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த பிரபல மிருதங்க வித்வான், அந்த ஏழு பேரில் ஒருவர் என்று தெரிந்ததும் விருது ரத்து செய்யப்பட்டது. பதிலாக பிரபல பாடகர் ஒருவர் அந்த விருதுக்குத் தேர்வானார்!

“சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாத மாதிரி நாங்கள் மௌனமாக இருந்துவிட முடியாது. சும்மா பெயர் குறிப்பிட்டது மட்டுமே அகாடமிக்கு நடவடிக்கை எடுக்கப் போதுமானதாக இருக்காது... எந்த அளவுக்கு உண்மை இருக்க முடியும் என்று விசாரித்தோம்... புகார்கள் வந்துவிட்டதாலேயே எந்த ஒருவரையும் குற்றவாளி என்று நாங்கள் தீர்மானிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் வகையிலே எங்களின் இந்த நடவடிக்கை...” என்றார் மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி. டிசம்பர் சீஸன் முடியும் வரை இந்த நடவடிக்கை. பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும்.

சென்னை சபாக்களின் கூட்டமைப்பு, இந்தப் பிரச்னையை வேறு கோணத்தில் அணுகியிருக்கிறது.

“சுப்ரீம் கோர்ட் ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் வரைமுறைகளின்படி நாங்கள் கமிட்டி அமைத்தோம் (Internal Complaints committee) இசை, நாட்டியம், நாடகம் என்று எந்தத் துறையில் இருப்பவர்கள்மீதும் புகார்கள் வந்தால், சட்டபூர்வமாக இந்தக் கமிட்டி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்...” என்றார் கூட்டமைப்பின் சார்பாகப் பேசிய நாரதகான சபாவின் செயலர் கே.ஹரிசங்கர்.

இவர்கள் அமைத்த கமிட்டியில் பாடகி சுதா ரகுநாதன் உள்பட ஐந்து உறுப்பினர்கள். இவர்களில் மனோதத்துவ நிபுணர் ஒருவரும் உண்டு. எல்லாப் புகார்களும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களைத் தெரிவிக்க பிரத்யேக இ-மெயில் முகவரி கொடுத்திருந்தார்கள்.

“புகார்கள் வரும்பட்சத்தில் இரண்டு தரப்பையும் முதலில் தனித்தனியாகவும், தேவையெனில் இருவரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்பது ஐடியா...” என்றார் ஹரிசங்கர்.

கடைசி தகவலின் படி, இ-மெயில் வழியே ஒரு புகார்கூட வரவில்லை. எனவே, கூட்டமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் சபாக்களில் வலைதளப் புகார்களின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் இல்லாமல் எல்லோரும் எல்லா சபாக்களிலும் பாடுவார்கள்; வாசிப்பார்கள்! இன்னொரு பக்கம், தங்கள் பெண் குழந்தைகள் பாட்டு கற்றுக்கொள்ள பாடகிகளாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் பெற்றவர்கள்!

மணி விழா காணும் பாரதிய வித்யா பவனின் கலை விழா ஆரம்பமாகிவிட்டது. தொடக்க விழா விவரங்கள் அடுத்த இதழில்!

- டைரி புரளும்...

வீயெஸ்வி - படம்: கே.ராஜசேகரன்