Published:Updated:

புன்னகை, புரிதல், பகிர்தல்... அலுவலகச் சுமையைக் குறைக்க உதவும் உறவுகள்!

புன்னகை, புரிதல், பகிர்தல்... அலுவலகச் சுமையைக் குறைக்க உதவும் உறவுகள்!
புன்னகை, புரிதல், பகிர்தல்... அலுவலகச் சுமையைக் குறைக்க உதவும் உறவுகள்!

வேலைக்குச் செல்பவர்கள், பெரும்பாலான நேரத்தை அலுவலகத்தில்தான் செலவிடுகிறார்கள். குடும்பத்தினருடன் அமர்ந்து பேசுவது, வீட்டு வேலைகளை முழுமையாகச் செய்வது, பொழுதுபோக்குச் செயற்பாடு, தூக்கம் போன்ற அத்தியாவசியங்களுக்கு ஒதுக்கப்படும் நேரம் என்பது மிகமிகக் குறைவு. அப்படி, அதிகப்படியான நேரத்தைச் செலவிடும் அலுவலகம், இன்றைய காலகட்டத்தில் நிச்சயம் அவர்களுக்கு அழுத்தத்தைத்தான் தருகிறது. ஆனால், சுமைகள் எதுவும் தெரியாமல், நம் நாள்களை இனியதாகக் கடத்திச் செல்பவர்கள், நிச்சயம் நம் நண்பர்கள் மற்றும் சகபணியாளர்கள்தான். இவர்களோடு எப்போதும் ஆரோக்கியமான உறவைத் தக்கவைத்துக்கொள்ள இவற்றைப் பின்பற்றினாலே போதும்.

புன்னகை:

எந்த ஓர் உறவும் நிச்சயம் சிறிய புன்னகையில் தொடங்கிய உரிமையாகத்தான் இருக்கும். அறியாத வயதில், புன்னகையை வெறும் புன்னகையாக மட்டுமே பார்த்த நாம், பின்னாளில் நட்பு, காதல், ஏளனம், ஆக்ரோஷம், போலி போன்ற பல பரிமாணங்களின் `முக'வரியாகப் பார்க்கவும் நேரிடும். கள்ளங்கபடமற்றப் புன்னகை என்றைக்குமே நீண்ட வலுவான உறவை தக்கவைத்துக்கொள்ள உதவும். மற்றவர்களின் இறுக்கமான உணர்வும் பதற்றமும் உங்கள் புன்னகையில் இலகுவாகும். மில்லிமீட்டர் அளவுதான், ஆனால், நிச்சயம் உறவைப் பெரிதும் வலுவாக்கும்.

புரிதல் பகிர்தல்:

போட்டி, பொறாமைசூழ் உலகத்தின் மினியேச்சர் வெர்ஷன்தான் அலுவலகமும். இங்கு எல்லோரும் நல்லவர்களும் அல்லர், மேதைகளும் அல்லர். சிலருக்கு, பல விஷயங்கள் தெரிந்திருக்கும். பலருக்கு சில விஷயங்கள் தெரியாமல் இருக்கும். எனவே, இங்கு யாரும் உயர்ந்தவருமில்லை, தாழ்ந்தவருமில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் இறக்கும் காலம் வரை ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். இதில், தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாமே! 

மேலும், அலுவலகத்தில் `பகிர்தல்' என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சோகம், பிரச்னை போன்றவற்றை சகபணியாளர்களோடு பகிர்ந்துகொள்வதால், தீர்வு கிடைக்குமோ இல்லையோ, நிச்சயம் மனஅழுத்தம் குறையும். அனைவரிடமும் அனைத்தையும் பகிர்வதும் நன்மையல்ல. யாரிடம் பகிர்ந்துகொள்கிறோம் என்பதும் மிகவும் முக்கியம். பெண்கள், இந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் இருப்பது சிறந்தது. பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்ளலாமே தவிர, உங்கள் பலவீனத்தை ஒருபோதும் வெளிக்காட்டிக்கொள்ளாதீர்கள்.

தனிக்குழுக்களைத் தவிருங்கள்:

அலுவலகத்தில், வேலைகளின் இயல்பை வைத்து தனித்தனி தளங்கள் அல்லது அறைகள் இருப்பது வழக்கம். இந்தச் சூழலில், சிறுசிறு குழுக்கள் அமைத்து, அவர்களுடன் மட்டுமே உரையாடிக்கொண்டிருப்பது மிகவும் தவறு. உங்களை நீங்களே சிறிய உலகத்தில் ஏன் அடைத்துவைத்துக்கொள்ள வேண்டும்? இது மற்றவர்களின் பார்வையில், அவர்களை ஒதுக்குவதைப் போன்ற பிம்பத்தைத்தான் உருவாக்கும். முக்கியமாக, குழுக்களாக நின்று அடுத்தவர்கள் பற்றிய வீண்பேச்சுகளைத் தவிருங்கள். இன்று, நல்லுறவை வலுப்படுத்துவதாக நினைத்து நீங்கள் பேசும் எல்லாமும் உங்களுக்கே ஒருநாள் ஆபத்தாய் மாறிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அப்படிப் பேசுபவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. 

உங்களுக்கான நண்பர்கள் யார் என்பதையும், சகபணியாளர்கள் யார் என்பதையும் கண்டுகொள்ளுங்கள். அவர்களுக்கான மரியாதையைத் தவறாமல் கொடுங்கள். மேலதிகாரி முதல் உங்களுக்கும் கீழே வேலை செய்யும் தொழிலாளிகள் வரை அனைவரையும் மதித்து தினமும் ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள். அங்கு இருக்கும் அனைவரிடமும் ஆரோக்கியமான உறவைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

நம்பிக்கை... அதானே எல்லாம்!!

எந்த உறவாக இருந்தாலும், ஒருவரின் நம்பிக்கையைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அலுவலகத்தில், உங்கள் திறன்மீது மேலதிகாரி வைத்திருக்கும் நம்பிக்கையைப் பொறுத்துதான் உங்களின் பதவி தீர்மானிக்கப்படுகிறது. பதவி உயர்விலிருந்து சம்பள உயர்வு வரை உங்களின் உழைப்போடு புதைந்திருப்பது நம்பிக்கையும்தான். சரியான நேரத்தில் செய்யும் எந்த ஒரு விஷயமும் நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்கும். முடிந்தவரை எந்த வேலையையும் ஒத்திவைக்காதீர்கள். ஒருவேளை காலதாமதமானால், அதை முன்கூடியே மேலதிகாரிகளிடம் சொல்லிவிடுவது சிறந்தது. இப்படிச் செய்வதனால், தேவையில்லாத பதற்றத்தைத் தவிர்க்கலாம். பிறருக்கு நல்ல முன்னுதாரணமாகவும் இருக்கலாம்.

மற்றவர்களையும் கொண்டாடுங்கள்:

மற்றவர்களின் வெற்றி என்றைக்குமே நமக்குப் பொறாமையை உண்டாக்கும். அதிலும், கடுமையான முயற்சி தோல்வியில் முடிந்தால் கேட்கவே வேண்டாம். இந்தச் சமயத்தில் பொறாமைகொள்ளாமல், வெற்றி பெற்றவரைப் பாராட்டுங்கள். உங்களுக்கும் அவருக்கும் உள்ள அந்த நூலளவு வித்தியாசத்தைக் கண்டுபிடியுங்கள். அதை நோக்கிப் பயணியுங்கள். முன்னேற்றப் பாதையில் சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடுங்கள், உங்களின் வெற்றியை நிச்சயம் உலகமே கொண்டாடும்.

வேலையில் திருப்தி காண்பது என்பது, நம் சகபணியாளர்களைப் பொறுத்துதான் பெரும்பாலும் உள்ளது. யாரிடமும் நேர்மறையான உறவை உருவாக்கினால், நிச்சயம் பணியிடம் `பனி இடமாகவே' மாறும்.