Published:Updated:

ப்ரோ கபடி இறுதியில் பெங்களூரு - குஜராத்! வெளியேறியது யூ.பி! #ProKabaddi

இரண்டாம் பாதியின் தொடக்கத்திலே காயம் காரணமாக யூ.பி அணியின் கேப்டன் ரிஷான்க் தேவாடிகா விலகியது அந்த அணியின் பெரும் பின்னடைவாக அமைந்தது.

ப்ரோ கபடி இறுதியில் பெங்களூரு - குஜராத்! வெளியேறியது யூ.பி! #ProKabaddi
ப்ரோ கபடி இறுதியில் பெங்களூரு - குஜராத்! வெளியேறியது யூ.பி! #ProKabaddi

ஆறாவது சீசன் ப்ரோ கபடி லீக் க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது. ஏற்கெனவே முதல் தகுதிச் சுற்றில் குஜராத்தை வென்று கம்பீரமாக ஃபைனலுக்குள் அடியெடுத்து வைத்தது பெங்களூரு புல்ஸ். நாளை நடக்கவிருக்கும் ஃபைனலில் பெங்களூரு அணியுடன் மோதும் அந்த இரண்டாவது அணி யார் என்ற கேள்விக்கு விடையறிய குஜாராத் - யூ.பி யோத்தா அணிகள் மோதின. மும்பையில் நேற்று நடந்த பரபரப்பான 2-வது தகுதிச் சுற்றில் யூ.பி யோதா அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ்.

யூ.பி அணி சார்பாக முதலில் ரெய்டுக்குச் சென்றார் கேப்டன் ரிஷான்க் தேவாடிகா. அது வெற்று ரெய்டாக அமைய, பின் குஜாரத் அணியின் நட்சத்திர ரெய்டர் சச்சின் ஒரு பாயின்ட் எடுத்து புள்ளிக் கணக்கைத் தொடங்கிவைத்தார். இரண்டு அணிகளும் டிபண்டிங் அட்டாக்குக்குப் பெயர் போன அணிகள். ஆனால், இந்த ஆட்டத்தில் முதல் 9 பாயின்ட்களை இரு அணி ரெய்டர்களும்தான் எடுத்தனர். ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் யூ.பி அணியின் டிஃபெண்டர் நிதீஷ் குமார் அற்புதமான `ஆங்கிள் ஹோல்ட்’ மூலம் டிஃபெண்டிங் யூனிட்டுக்கு முதல் புள்ளியைப் பெற்றுத்தந்தார். அதுதான் ஆட்டத்தின் முதல் டேக்கிலும் கூட.

ஒரு பக்கம் குஜராத் ரெய்டர்கள் பிரபஞ்சன், சச்சின் குமார் ரெய்டுகளில் பாயின்ட்களைக் குவித்து, யூபி அணியை மூன்று நபர்களாகக் குறைத்தனர். ஆனால், இந்தப் பக்கம் யூ.பி அணி டிஃபெண்டர்கள் நிதீஷ், சச்சின் குமார் இருவரும் ஆளுக்கொரு ‘சூப்பர் டேக்கில்’ செய்து நான்கு புள்ளிகள் எடுத்து மாஸ் காட்டினர். ஆட்டத்தின் 16-வது நிமிடம் வரை 12-13 என இரண்டு அணிகளும் வரிந்து கட்டியதில் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதன்பிறகு யூபி அணி ரெய்டு, டிஃபென்ஸ் இரண்டிலும் அடுத்தடுத்து சொதப்ப, 18-வது நிமிடத்தில் அந்த அணி ஆல் அவுட் ஆனது. முதல் பாதி முடிவில் 14-19 என ஐந்து புள்ளிகள் முன்னிலையில் இருந்தது குஜராத் அணி

இரண்டாம் பாதியின் தொடக்கத்திலே காயம் காரணமாக யூ.பி அணியின் கேப்டன் ரிஷான்க் தேவாடிகா விலகியது அந்த அணியின் பெரும் பின்னடைவாக அமைந்தது. முதல் பாதி இறுதியில் கிடைத்த மொமன்ட்டை அப்படியே இரண்டாம் பாதியிலும் கடத்திச் சென்றது குஜராத் அணி. இரண்டாம் பாதியின் முதல் 11 புள்ளிகளை குஜராத் எடுக்க, யூபி அணி ஒரு புள்ளி கூட எடுக்கவில்லை. இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே யூபி அணியின் உடும்புப் பிடி ஆங்கிள் ஹோல்டர் டிஃபெண்டரான நிதீஷ் குமாரை அவுட் ஆக்கி டிஃபென்ஸ் வேலியை உடைத்தார் பிரபஞ்சன். அது சச்சின், ரோஹித் குலியா ஆகியோர் சுலபமாக பாயின்ட்களை எடுக்க உதவியது. சுனில் குமார், ஒஷ்தோரக் ஆகியோர் டேக்கிலில் தங்கள் பங்குக்கு பாயின்ட் எடுக்க 27-வது நிமிடத்தில் இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆனது யூபி யோதா. 14-30 என குஜராத்தின் லீட் பதினைந்தாக உயர்ந்தது. கேப்டன் ரிஷான்க் இல்லாததால் சரியான திட்டமிடல்கள் இன்றி தடுமாறியது யூ.பி அணி.

கடைசி 10 நிமிடம்... குஜராத் அணி எளிதாக வென்று விடும் என்ற நிலை இருந்த சமயத்தில் பிரசாந்த் குமார் ராய் ரெய்டில் போனஸ் பாயின்ட்களை எடுக்க, நிதீஷ் குமார் அடுத்தடுத்து இரண்டு டேக்கில் செய்ய, ஆட்டம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. அந்த இரண்டு டேக்கிலின் மூலம் நிதீஷ் குமார் இந்த சீசனில் தனது 100-வது டேக்கிலைப் பதிவு செய்தார். ப்ரோ கபடி வரலாற்றிலே ஒரே சீசனில் 100 டேக்கில் செய்த முதல் டிஃபெண்டர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

யூபி அணி அசத்தல் கம்பேக் கொடுத்து குஜராத்தை ஆல் அவுட் ஆக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக குஜராத்தின் லீட் 15-லிருந்து 5-ஆக குறைந்தது. இப்போது ஸ்கோர் 34-29. கடைசி இரண்டே நிமிடங்கள். இந்த நேரத்தில் குஜராத் வீரர்கள் மிகவும் தெளிவாக ரிஸ்க் எடுக்காமல் நேரத்தை வீணடித்தனர். `டூ ஆர் டை ரெய்டில் மட்டும் பாயின்ட் எடுக்க முற்பட்டனர். இறுதியில் மீண்டும் யூபி அணியினர் சொதப்பியதில் குஜராத் 31-38 என வெற்றிபெற்று ஃபைனலுக்குள் நுழைந்தது. அந்த அணியின் சச்சின் அதிகபட்சமாக 9 புள்ளிகள் எடுத்தார். கடந்த முறை பாட்னா பைரேட்ஸ் அணியுடன் தோற்ற குஜராத் நாளை நடக்கவுள்ள ஃபைனலில் பெங்களூர் புல்ஸ் அணியுடன் மோதவிருக்கிறது.