Published:Updated:

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்?

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்?
பிரீமியம் ஸ்டோரி
News
டெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்?

கார் வாங்குவது எப்படி? - 12 - தொடர்

`ரஜினிமுருகன்’ படத்தில் ஒரு காட்சி வரும். ஆடி ஷோரூமுக்கு வரும் சிவகார்த்திகேயன், காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போது... விபத்து ஆகிவிடும். `நான் இன்ஷூரன்ஸில் கவர் பண்ணிக்கிறேன். ஆளை விட்டா போதும்’ என்று ஷோரூம் மேனேஜர் எஸ்கேப் ஆவார்.

டெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்?

நிஜத்தில் டெஸ்ட் டிரைவ் பண்ணும்போது இதுபோல் நடந்திருக்கிறதா? ``ஏகப்பட்ட விபத்துகள் நடந்திருக்கு பாஸ்!’’ என்கிறார் சென்னையின் மிகப்பெரிய கார் ஷோரூமில் பணிபுரியும் சேல்ஸ்மேன் ஒருவர்.

அண்மையில் நமது அலுவலகத்துக்கு ஒரு போன். ``சார், நான் விழுப்புரத்தில் இருந்து பேசுறேன். ...ஹேட்ச்பேக் கார் புக் பண்றதுக்காக அதை டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்க்கணும்னு கேட்டேன். டெஸ்ட் டிரைவ் பண்றப்போ, ஒரு சின்ன ஆக்ஸிடென்ட். இப்போ என்கிட்ட இருந்து லம்ப்பா ஒரு தொகை கேட்கிறாங்க!’’ என்று படபடத்தார்.

நாம் களத்தில் இறங்கி விசாரித்ததில், ``இன்ஷூரன்ஸில் கவர் பண்ணிக்க வேண்டியதுதானே... கஸ்டமர்கிட்ட இருந்து காசு வாங்கணும்னு எந்த ரூல்ஸும் இல்லையே’’ என்று சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிய பிறகு, அந்த சேல்ஸ்மேன் அதற்குப் பிறகு அந்த வாடிக்கையாளரிடம் பணம் பற்றிப் பேசவில்லையாம்.

அதாவது, டெஸ்ட் டிரைவின்போது காருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், கார் கம்பெனியில் இருந்து இன்ஷூரன்ஸில் க்ளெய்ம் செய்து கொள்ளலாம் என்பது ரூல்.

டெஸ்ட் டிரைவுக்கு அப்ளை செய்வது எப்படி?

சாதாரண சட்டை/பேன்ட் போன்றவற்றுக்கே ட்ரையல் உண்டு. லட்சம் லட்சமாகச் செலவழித்து வாங்கும் காருக்கு மட்டும் ட்ரையல் இல்லாமலா இருக்கும்? உங்களுக்குப் பிடித்த ஒரு காரை டெஸ்ட் டிரைவ் செய்ய விரும்பினால், முதலில் காரைப் பற்றிய தகவல்களை விரிவாகக் கேட்டுக் கொள்ளுங்கள். பிறகு, ஒவ்வொரு ஷோரூமுக்கு என்று ஒரு விண்ணப்பம் உண்டு. அந்த விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் பெயர்/ஊர்/டிரைவிங் லைசென்ஸ் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். அப்புறம்தான் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப முடியும்.

யார் வேண்டுமானாலும் அப்ளை பண்ணலாமா?

ஒரு காரை டெஸ்ட் டிரைவ் செய்ய, நீங்கள் அந்த காரைக் கட்டாயம் வாங்கித்தான் ஆகவேண்டும் என்கிற அவசியமில்லை. அதேபோல், நீங்கள் ஏற்கெனவே கார் வைத்திருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. லைசென்ஸ் மட்டும் முறைப்படி இருந்தால் போதும். அதேபோல், ஒரு நபருக்கு இரண்டு தடவைக்குமேல் டெஸ்ட் டிரைவ் ஆப்ஷன் கொடுப்பதில்லை. காரணம், வாடிக்கையாளர்கள் அல்லாத சிலரும் காரை டெஸ்ட் டிரைவ் என்கிற பெயரில் எடுத்துச் சோதித்துப் பார்ப்பதால்!

டெஸ்ட் டிரைவ் செய்யப் போறீங்களா?

சில வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே கார் வைத்திருப்பார்கள். அவர்களைப் பற்றிப் பிரச்னை இல்லை. அவர்களுக்கு கார் ஓட்டுவதில் நன்கு பரிச்சயம் இருக்கும். முதல் கார் வாங்கும் வாடிக்கையாளர்களிடம்,  சேல்ஸ்மேன்கள் கவனமாக இருப்பார்கள். லைசென்ஸ் எடுத்து பல ஆண்டுகள் ஆனாலும், சிலர் ஓட்டுதலுக்குப் புதுசாக இருப்பார்கள். அவர்கள் டிரைவிங்குக்குப் புதுசு என்பதை அவர்கள் ஓட்டும் ஸ்டைலே காட்டிக் கொடுத்துவிடும். அவர்களுக்கு சீட் அட்ஜஸ்ட்மென்ட்டில் இருந்து காரின் கிளட்ச், பிரேக், கியர் செயல்பாடு வரை எல்லாவற்றை பற்றியும் விளக்குவது சேல்ஸ்மேன்களின் கடமை.

பொதுவாக இந்தியா, கொரியா, ஜப்பான் மாடல் கார்களில் வலதுபுறம் இண்டிகேட்டர், இடதுபுறம் வைப்பருக்கான ஸ்டாக் இருக்கும். இதுவே ஜெர்மன் மற்றும் சில அமெரிக்க கார்களில் அப்படியே உல்ட்டாவாக இருக்கும். இந்திய மாடல் கார் ஓட்டுபவர்கள், இதில் பழக சிறிது நேரம் பிடிக்கும். தவறுதலாக வைப்பரை ஆன் செய்து, விண்ட்ஷீல்டு ஸ்க்ராட்ச் ஆன சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதேபோல், ரிவர்ஸ் கியரும் காருக்கு கார் வேறுபடும். ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா போன்ற கார்களில் ரிவர்ஸ் கியர் என்பது, கியர் லீவரைக் கீழே அழுத்தி கீழ்நோக்கித் தள்ளுவதுபோல் இருக்கும். ஹூண்டாய், ரெனோ போன்ற சில டீசல் கார்களில் கியர் லீவருக்குள் ஒரு லீவரைத் தள்ளி கீழ்நோக்கிப் போட வேண்டும். வாடிக்கையாளர் ஒருவர், ரிவர்ஸ் கியரை மாற்றிப்போட்டு விபத்தான சம்பவமும் நடந்திருப்பதாகச் சொன்னார் அந்த சேல்ஸ்மேன்.

முக்கியமாக, ஆட்டோமேட்டிக் கார்களில் தான் டெஸ்ட் டிரைவின்போது அதிக கவனம் தேவை. `இதில்தான் கிளட்ச் கிடையாதே; ஈஸிதானே’ என்று நீங்கள் நினைக்கலாம். மேனுவல் கார் ஓட்டுபவர்கள், ஆட்டோமேட்டிக் கார் ஓட்டும்போது பிரேக் பிடிக்கச் சொன்னால், இடதுகாலைப் பயன்படுத்துவார்கள். இது மிகவும் தவறு. இடதுகாலில் பிரேக் பிடிக்கும்போது, பிரேக்கிங் ரொம்பவும் ஃபோர்ஸாக நடக்கும். இதனால், பின்பக்கம் வருபவர்கள் நம் காரில் இடிக்க வாய்ப்புண்டு.

சிலர், ``ஹைவேஸில் டாப் ஸ்பீடில் ஓட்டிப் பார்த்தால்தான் அதன் ஸ்டெபிலிட்டியை உணர முடியும்’’ என்பார்கள். அவர்களுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் தேவை. உங்கள் டிரைவிங் ஸ்டைல், அவர்களைத் திருப்திப்படுத்தும்பட்சத்தில் மட்டுமே இதற்கு அனுமதி கிடைக்கும். ஷோரூம் மேனேஜரிடம் இதற்கு அப்ரூவல் வாங்க வேண்டும். உடன் இரண்டு சேல்ஸ்மேன்கள் இருக்க வேண்டும். ஆள் இல்லாத சாலையில்தான் இந்த டெஸ்ட் நடக்கும். பழக்கமான வாடிக்கையாளர்களுக்கு கார்களை `லாங் டெர்ம்’ முறையில்கூட டெஸ்ட் டிரைவ் தருவார்கள். அதாவது, காரை நீங்கள் வெளியூருக்கோ, பயணத்துக்கோ எடுத்துப் போகக்கூட அனுமதி கிடைக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டெஸ்ட் டிரைவ் செய்யும்போது விபத்து நடந்தால்?

உங்களுக்கு அவ்வளவாக கார் ஓட்டத் தெரியாது... ஆனால், நீங்கள் நிச்சயம் அந்த காரை வாங்கி விடுவீர்கள் என்கிற நம்பிக்கை சேல்ஸ்மேன்களுக்கு ஏற்பட்டால், உங்களுக்கு சரியான டிரைவிங்கில் இருந்து ரிவர்ஸ் எடுப்பது, ஹைவேஸில் எப்படி ஓவர்டேக் எடுப்பது போன்ற டெக்னிக்ஸ் வரை சொல்லிக்கொடுக்கும் டீலர்ஷிப்பும் தமிழ்நாட்டில் இருக்கிறது. ``எனக்கு காரே ஓட்டத் தெரியாது. என்னோட முதல் கார் செலெரியோ. புக் பண்ணும்போது, என் சேல்ஸ்மேன்தான் எனக்கு டிரைவிங் பற்றி பல நுணுக்கங்கள் சொல்லிக்கொடுத்தார்’’ என்று புளகாங்கிதம் அடைந்தார் ஒரு வாடிக்கையாளர்.

முதல் கார் வாங்கும் கஸ்டமர் அவர். குறிப்பிட்ட ஒரு ஹேட்ச்பேக் ரொம்பப் பிடித்திருந்தது அவருக்கு. ஆனால், டெஸ்ட் டிரைவ் முடித்த பிறகு `ச்சீ... இந்த கார் வேண்டாம்’ என்று வேறு பிராண்டுக்குத் தாவி விட்டார். பெரிதாக கார்களைப் பற்றிப் பரிச்சயமில்லாத அவருக்கு, எந்த விஷயம் இவ்வளவு வெறுப்பை ஏற்படுத்தியது?

``சீட் ரொம்பப் பின்னாடி இருக்கு. ரோடே தெரியலை. பானெட் எங்கே முடியுதுனே தெரியலை. ஸ்டீயரிங் ரொம்ப தூரமாக இருக்கு. பிரேக், ஆக்ஸிலரேட்டரும் காலுக்கு எட்டவே இல்லை. ஓட்டுறதுக்கே ரொம்பக் கஷ்டமா இருக்கு!’’ என்றார்.

அவர் அதிருப்தியானது சாதாரண ஒரே ஒரு விஷயம்தான். அதாவது, சீட் அட்ஜஸ்ட்மென்ட். அப்போதுதான் சொந்தமாக கார் ஓட்டுகிறார் என்பதால், டெஸ்ட் டிரைவ் பண்ணும்போது சீட்டை அட்ஜஸ்ட் செய்யலாம் என்கிற விஷயம்கூட அவருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இந்த ஒரு விஷயத்தால், அந்த காரின் மீது இருந்த நல்லெண்ணம் அவருக்குத் தொலைந்துபோய்விட்டது. தனக்குப் பிடித்த காரை வாங்க முடியாமல் போன ஓர் அதிருப்தி அவருக்கு ஏற்பட்டது மட்டுமல்லாமல், அந்த கார் ஷோரூமுக்கும் இது மிகப்பெரிய இழப்பு. இதற்கு நிச்சயம் சேல்ஸ்மேன்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

விபத்து நடந்தால் நஷ்டஈடு கொடுக்க வேண்டுமா?

உங்களுக்குக் கொடுக்கப்படும் விண்ணப்பத்தில், `டெஸ்ட் டிரைவின்போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், ஷோரூமுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’ என்கிற வாசகம் இருக்கும். அதாவது, `டிரைவிங் அட் ஓன் ரிஸ்க்’. இது, உங்கள் உயிருக்கு மட்டும்தான்; காருக்குக் கிடையாது. எனவே தெரியாமல் நீங்கள் விபத்து ஏற்படுத்தி, காருக்கு ஏதேனும் சேதாரம் ஏற்படும்பட்சத்தில் நீங்கள் ஏதும் இதற்காகச் செலவழிக்கத் தேவையிருக்காது. காருக்கான இன்ஷூரன்ஸில் இதை கவர் செய்துவிடுவார்கள்.

`அதான் ஷோரூம் பார்த்துக்குமே’ என்று அதற்காக கவனமில்லாமல் டெஸ்ட் டிரைவ் பண்ணுங்கள் என்பது இதற்கு அர்த்தமல்ல. நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்யும் போது உங்களுக்கும் சரி, அடுத்தவர்களுக்கும் சரி, ஒரு சின்ன அடிகூடப் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். 

- கார் வாங்கலாம்


தமிழ் - படங்கள்: பா.அகல்யா