Published:Updated:

`இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்!

`இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்!
`இப்படியும் பிளாஸ்டிக் விழிப்பு உணர்வை ஏற்படுத்தலாம்' - அசத்திய திருவனந்தபுரம் கலெக்டர்!

பிறர் அணிந்துவிட்டு வேண்டாம் என தூக்கிப்போட்டச் சேலையை உடுத்தியிருக்கிறார் திருவனந்தபுரம் கலெக்டர் கே.வாசுகி. பிளாஸ்டிக்கை ஒழிக்க இதுவும் ஒரு வழி என உதாரணம் காட்டிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வாசுகி ஐ.ஏ.எஸின் செயலுக்கு பாராட்டு குவிந்துள்ளது.


தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர் கே.வாசுகி ஐ.ஏ.எஸ். இவர் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டராக உள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளத்தை புரட்டிப் போட்ட கனமழையின்போது பாதித்த மக்களுக்கு உணவுகளை வாகனங்களில் ஏற்றி அனுப்பும் வாலண்டியர்ஸ்கள் மத்தியில் பேசி அவர்களுக்கு "ஓ" போட்டு வாழ்த்து தெரிவித்த சம்பவம் வைரலானது. கடந்த 1-ம் தேதி கேரளத்தில் நடந்த வனிதா மதில் என்ற பெண்கள் சுவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்களை உற்சாகப்படுத்தினார்.

அதைத் தொடர்ந்து ஏற்கெனவே யாரோ ஒருவர் பயன்படுத்திய சேலையை அணிந்து அதை முகநூலில் பதிவேற்றமும் செய்திருக்கிறார் கலெக்டர் வாசுகி. பழைய சேலை அணிந்தது குறித்து கலெக்டர் வாசுகி காணொலியில் கூறும்போது, ``இரண்டு மாதம் முன்பு வர்கலா பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆர்.ஆர்.எப்-ல் இருந்து வேறொருவர் பயன்படுத்திவிட்டு தூக்கிப்போட்ட சேலை எனக்குக் கிடைத்தது. அந்தச் சேலையை நான் அணிந்து வருவேன் என அப்போதே நான் கூறினேன்.

வர்கலாவில் சிவகிரியில் கிரீன் புரோட்டக்கால் கூட்டம் நடக்கிறது. அந்தக் கூட்டத்துக்கு நான் அந்தப் பழைய சேலையை அணிந்து சென்றேன். ரீ யூஸ் செய்வதை பிரபலபடுத்தும் நோக்கத்தில் நான் இதைச் செயல்படுத்தியுள்ளேன். வேறொருவர் உடுத்திய சேலையை பயன்படுத்துவதில் எந்த சங்கோஜமும் எனக்கு இல்லை. இந்தச் சேலை முழுவதும் காட்டன் அல்ல, ஒருவகையில் இதுவும் பிளாஸ்டிக்தான். எனவே, இயற்கையை பாதுகாக்கும் விதமாக இந்தச் சேலையை நான் பத்து, பதினைந்து ஆண்டுகளாவது நான் உடுத்துவேன். ஓல்ட் இஸ் பேஷனபிள் என்பதுதான் எனது கருத்து" என்றார். கலெக்டரின் இந்தச் செயல் வலைதளங்களில் வைரலாகியுள்ளது.