Published:Updated:

``பக்கத்துலதான் படுத்திருக்கான். ஆனா, பால் கொடுக்க முடியலையே” கலங்கும் ஹெச்.ஐ.வி மாங்காடு பெண்

இவ்வளவு பேர் எனக்காகப் போராடத் தயாரா இருக்கிறாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் முன்னமே துணிஞ்சு இறங்கியிருப்பேன்

``பக்கத்துலதான் படுத்திருக்கான். ஆனா, பால் கொடுக்க முடியலையே” கலங்கும் ஹெச்.ஐ.வி மாங்காடு பெண்
``பக்கத்துலதான் படுத்திருக்கான். ஆனா, பால் கொடுக்க முடியலையே” கலங்கும் ஹெச்.ஐ.வி மாங்காடு பெண்

``ல்லாருக்கும் இந்தப் புது வருஷம் ரொம்ப சந்தோஷமா பிறந்திருக்கும். ஆனா, எனக்கு மட்டும் இந்த வருஷத்தோட ஆரம்பமே போராட்டத்தோடயும் வலியோடவும் தொடங்கியிருக்கு. ஆமாங்க சார், மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்குதுங்க. பத்து மாசம் வயித்துல சுமந்து பெத்த மகன் பக்கத்துலதான் படுத்துருக்கான். என் முந்தானையைப் புடிச்சு சிணுங்குறான். மூணு மாசம் ஆகிட்டதால நல்லா முகம் பார்க்கவும் ஆரம்பிச்சிட்டான். ஆனா, என்னால அவனைத் தூங்கிக் கொஞ்ச முடியலைங்க. பிறந்து முழுசா மூணு மாசம்கூட ஆகாத புள்ளையத் தூக்கி பால்கூட கொடுக்க முடியாத நிலைமை வேற எந்தத் தாய்க்கும் வந்துடக்கூடாதுங்க. தூக்கி முத்தம் கொடுக்கிறதால எதுவும் ஆகிடாதுன்னு டாக்டர் சொல்லுறாங்க. ஆனா, பெத்த மனசு பதறுதுங்க. நான் தூக்குறதால அவனுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா என்னால தாங்கிக்கவே முடியாதுங்க” கண்ணீர்க்குரலில் அந்தத் தாய் நம்மிடம் பேசும்போது நெஞ்சம் இறுகுகிறது. 

சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்குத் தவறுதலாக ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தியது தொடர்பான விவகாரம் தமிழகத்தையே நிலைகுலைய வைத்தது. பரபரப்பாக அந்தச் செய்தி பேசப்பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுக்கும் அதேபோன்று ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக வந்த புகார்கள் மேற்கொண்டு அனைவரையும் திடுக்கிட வைத்தது. கைக்குழந்தையோடு போராட்ட களம் புகுந்த அந்தத் தாயின் துயர் கண்டு தமிழகமே கண்ணீர்விட்டு வெதும்பியது. 

``நானும் என் வீட்டுக்காரரும் கூலித்தொழிலாளிங்கதாங்க. ரெண்டு பேருமே காய்கறி வியாபாரம் பாத்துத்தான் குடும்பத்தை நடத்திக்கிட்டு இருந்தோம். நான் ரெண்டாவதா கர்ப்பமானதும் மாங்காடு ஆஸ்பத்திரியிலதான் பாத்துட்டு இருந்தேன். 5 வது மாசத்துல ரத்தச்சோகை இருக்குன்னு சொல்லி என்னை கே.எம்.சிக்கு அனுப்பி வெச்சாங்க. அங்க பத்து நாள் தங்கியிருந்து ட்ரீட்மென்ட் எடுத்தேன். அதுக்கப்புறம் 8 வது மாசத்துல செக் அப் பண்ணிப்பாத்துட்டு எனக்கு ஹெச்.ஐ.வி இருக்குன்னு சொன்னப்போ நானும் என் வீட்டுக்காரரும் துடிச்சுப்போயிட்டோம். பெருசா சொத்து சொகத்துக்கு வழி இல்லன்னாலும் தெனந்தெனம் காய்கறி விக்கிற காசுல எங்க வாழ்க்கை சந்தோஷமாப் போயிட்டு இருந்துச்சு. ஆனா, இப்புடி ஒரு இடியத்தூக்கி எங்க தலையில போடுவாங்கன்னு நாங்க நினைச்சே பாக்கலை. என் வீட்டுக்காரரோட அண்ணன் கொஞ்சம் படிச்சவரு. அதனால, அவரோட உதவி மூலமா குழந்தை பொறக்குறதுக்கு முன்னாடியே இது சம்பந்தமா அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கே.எம்.சி ஆஸ்பத்திரியோட நிர்வாகம், மாங்காடு ஆஸ்பத்திரி நிர்வாகம்னு நாலு இடத்துக்கும் புகார் மனு அனுப்பி வெச்சோம். ஆனா, எந்த பதிலுமே வரலைங்க. அதனால அப்போவே ஆஸ்பத்திரியில போய் போராடலாம்னு சொன்னேன். ஆனா, என் வீட்டுக்காரருதான் நம்ம குழந்தை நல்லபடியா பிறக்கட்டும் அதுக்கப்புறம் பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. இல்லைன்னா அப்போவே நாங்க நியாயம் கேட்டுப் போராடியிருப்போம்ங்க” என்கிறார் துயரம் கலந்த குரலில். அவரிடம் அடுத்ததாக என்ன செய்ய இருக்கிறீர்கள் என்றதும், 

``இப்போ ரெண்டு நாளைக்கு முன்ன ஆஸ்பத்திரியோட டீன் என்னைப் பாக்கணும்னு வரச் சொன்னாங்க. நாம அரசாங்கத்தை எதிர்த்து நிக்கிறோமே. இந்த நேரத்துல நம்மளை நேர்ல வரச்சொல்லி எதுவும் பண்ணிடுவாங்களோன்னு மனசுக்குள்ள பயமா இருந்துச்சு. அதனால, கூட நாலைஞ்சு பேரை அழைச்சுட்டுப் போனேன். அங்க போனா என்கிட்ட ஸ்வீட்டும் பழங்களையும் கொடுக்கிறாங்க. கொஞ்சம்கூட படிச்சவங்க மாதிரியே அவங்க நடந்துக்கலை. நானே துக்கத்துல இருக்குறேன். என்கிட்ட போய் ஸ்வீட்டைக் கொடுக்குறீங்களே. என் வாழ்க்கைய பறிச்சிக்கிட்டீங்க. இப்போ உங்களால அதைத் திரும்பத் தர முடியுமான்னு கோபமா கேட்டுட்டு வந்துட்டேன். அப்போ இருந்தே முடிவு பண்ணிட்டேன். நாம எதுக்கு பயப்படணும். நாம துணிஞ்சு எறங்கிட்டோம். இனி பயப்படக் கூடாது. எந்தத் தப்புமே பண்ணாம தண்டனையை அனுபவிச்சிக்கிட்டு இருக்குறோம். அதனால, யாருக்காகவும் எதுக்காகவும் பயப்படுறதா இல்ல. நேத்துகூட மாதர் சங்கத்துல இருக்கிறவங்களோட சேர்ந்து கே.எம்.சி வாசல்ல போய் போராடுனோம். ஆனா, போலீஸ் எங்களை அரெஸ்ட் பண்ணி அடைச்சு வெச்சிட்டாங்க. இவ்வளவு பேர் எனக்காகப் போராடத் தயாரா இருக்கிறாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் முன்னமே துணிஞ்சு இறங்கியிருப்பேன்” என்றவர் சட்டென அமைதியாகிறார். 

``எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலைங்க. முகம் தெரியாத யாரோ சிலர் எனக்காக வந்து போராடி போலீஸ்கிட்ட அடி வாங்குறாங்க. ஆனா, சொந்தக்காரங்க எல்லாருமே என்கிட்ட இருந்து கொஞ்சம் கொஞ்சமா விலக ஆரம்பிக்கிறாங்க. அது எனக்கே நல்லா தெரியுது. ஆனாலும், அவங்க யாரு நம்மள ஒதுக்கி வைக்க. அவங்க நாலு அடி தள்ளிப்போனா நாம எட்டு அடி தள்ளிப்போயிடணும்னு நானே ஒதுங்கி இருக்க ஆரம்பிச்சிட்டேன். யார் எப்படிப் போனாலும் என் வீட்டுக்காரரு என்னை நல்லா புரிஞ்சி வெச்சிருக்காரு. அவரோட அண்ணனும் வீட்டுக்குத் தேவையான செலவைப் பாத்துக்கிறாங்க. இப்போ சி.எம் செல், சென்னை கலெக்டர், காவல் ஆணையர்னு எல்லாருக்கும்  மனு கொடுத்திருக்கோம். இதுல யாரோ ஒருத்தருக்காவது எங்க குரல் கேட்கும்னு நம்பிக்கை இருக்குங்க” 

அந்தத் தாயின் கதறல் குரல் விரைந்து அரசின் செவிகளை எட்டட்டும்.