Published:Updated:

``என் சங்கீதத்துக்காக தன் வேலையைக்கூட உதறியவர் அவர்'' - கணவர் பற்றிப் பகிரும் சங்கீதகலாநிதி அருணா

``சாய்ராம் மாதிரி எனக்குக் கணவர் கிடைச்சதுக்குக் கோடிப் பூக்களால் கடவுளுக்கு அபிஷேகம் செய்தாலும் போதாது.''

``என் சங்கீதத்துக்காக தன் வேலையைக்கூட உதறியவர் அவர்'' - கணவர் பற்றிப் பகிரும் சங்கீதகலாநிதி அருணா
``என் சங்கீதத்துக்காக தன் வேலையைக்கூட உதறியவர் அவர்'' - கணவர் பற்றிப் பகிரும் சங்கீதகலாநிதி அருணா

2019-ம் வருடத்தின் முதல் நாள். கர்னாடக இசையை அதன் ராகம், தாளம் தெரியாத பாமரனிடமும் கொண்டு போய்ச் சேர்த்த, இசை தேவதை அருணா சாய்ராமுக்கு சங்கீத கலாநிதி விருது தமிழக ஆளுநரின் கரங்களால் வழங்கப்பட்டது. கலைமாமணி, பத்மஶ்ரீ என இசையின் பல உச்சங்களைத் தொட்டவரிடம், அதற்கு உறுதுணையாக இருந்தவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளப் பேசினோம். 

``உங்களுக்கு இந்த வருடம் மிக உன்னதமான வருடமாக இருக்கட்டும்'' என்று ஆசீர்வதித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.  

``பொதுவாக  நம்முடைய குடும்பங்களில், மனைவிகள்தான் கணவரை முகம் கோணாமல், மனம் நோகாமல் ரொம்ப கவனமாப் பார்த்துப்பாங்க. இதுதான் நம்முடைய மரபு. ஆனால், என்னுடைய வீட்டில் என் கணவர்தான் என்னை அப்படியெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறார். நேரத்தைப் பார்க்காமல் சங்கீதம், சங்கீதம் என்று நான் ஓடிக்கொண்டே இருப்பதால், எனக்கு வேண்டியதெல்லாம் சரியா இருக்கா என்று அவர்தான் என்னைப் பார்த்துக்கொள்கிறார். 

நிறைய வெளிநாடுகளுக்குப் போய் கச்சேரி செய்ய வேண்டியிருப்பதால் என்னோட டயட்...  நான் பிராக்டிஸ் பண்ணிக்கொண்டிருக்கும்போது யாராவது என்னைப் பார்க்க வந்துட்டால், அவங்களோட  மனசு கோணாதபடிக்குப் பேசுவது...  என் உடம்புக்கு, என் மனசுக்கு எவையெல்லாம் நிம்மதியைக் கொடுக்குமோ, அதையெல்லாம் செய்யறதுன்னு ஒரு தகப்பன் தன் மகளைப் பராமரிப்பதுபோல என்னைப் பார்த்துக்கொள்கிறார். 

வெளியே போவதற்கெல்லாம் நேரம் ஒதுக்கறது எனக்கு ரொம்ப கஷ்டம். பிளான் பண்ணி, அவுட்டிங் கிளம்பும்போதுகூட திடீர்னு வேறு ஏதாவது வேலை வந்துடும். இதையெல்லாம் அவர் பெரிசு பண்ணதே கிடையாது. அதே மாதிரி நான் எங்கே வெளியே போனாலும் அவர் என்னைத் தனியே விட்டதே கிடையாது. கூடவே வருவார். இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம். கொடுப்பினை என்றுதான் சொல்லணும். சாய்ராம் மாதிரி எனக்குக் கணவர் கிடைச்சதுக்குக் கோடிப் பூக்களால் கடவுளுக்கு அபிஷேகம் செய்தாலும் போதாது. 

என் ரெண்டு மகள்களும், `மார்கழி மாசம் முழுக்க, நீங்க எங்களுக்கு நேரம் ஒதுக்கிப் பேசவும் வேண்டாம். எங்களுக்கு வர்ற சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட உங்க காதுக்குக் கொண்டு வர மாட்டோம்மா. நீங்க நிம்மதியா உங்க கச்சேரிகளில் மட்டும் கவனம் செலுத்துங்க'ன்னு சொல்வாங்க. அந்தளவுக்கு என்னோட குறிப்பறிந்த குழந்தைகள் அவங்க. 

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? மும்பையில் இருந்து சென்னைக்கு நான் வந்ததே என் பெண்களோட முயற்சியால்தான். அவங்க ரெண்டு பேரும்தான், அவங்க அப்பாவிடம் `அம்மாவைச் சென்னைக்கு அழைச்சிண்டு போனால்தான் அம்மாவின் திறமை பரிமளிக்கும்'னு சொன்னவங்க. அப்ப என் மூத்த மகளுக்கு ஜஸ்ட் 20 வயசுதான். அதுக்கப்புறம்தான் நாங்க மும்பையிலிருந்து சென்னை வர்றதைப்பத்தியே யோசிச்சோம். மகள்களை சொன்னதைக் கேட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்த என் வீட்டுக்காரர் உடனே வி.ஆர்.எஸ். கொடுத்திட்டார். என் மாமியார், மாமனாரும்கூட `நாங்களும் உங்கக்கூட சென்னைக்கு வர்றோம்'னு கிளம்பிட்டாங்க. `இத்தனை காலம் அருணா குடும்பத்துக்காகவே வாழ்ந்தா. அவளுடைய திறமை இந்த உலகத்துக்குத் தெரியணும்' அப்படிங்கிற அன்புல, என் மொத்தக் குடும்பமும் எனக்காகச் சென்னைக்கு வந்தது. இங்கே புத்தம் புதுசா ஒரு வாழ்க்கையை நாங்க ஆரம்பிச்சோம்னுதான் சொல்லணும். சென்னைக்குப் புதிதில் எத்தனை பள்ளம், மேடுகளை எனக்காகப் பொறுத்து, என்னை சங்கீத கலாநிதி உயரத்துக்குக் கொண்டு வந்து நிறுத்தியது என் குடும்பம்தான். நான் மரத்தின் உச்சிக் கிளையில் இருக்கிற பூவாக இருப்பதற்குப் பின்னால், வேராக என் குடும்பம் இருக்கிறதம்மா'' என்று மகிழ்ச்சியாக அவர் சொல்லி முடிக்க, நம் மனம் நெகிழ்ச்சியில் ஈரமானது.