Published:Updated:

``நான் கண்டுபிடிச்சது அமெரிக்கா இல்ல; இந்தியாதான்!" - ஸ்பெயினைக் கடுப்பேற்றிய கொலம்பஸ்

``நான் கண்டுபிடிச்சது அமெரிக்கா இல்ல; இந்தியாதான்!" - ஸ்பெயினைக் கடுப்பேற்றிய கொலம்பஸ்
``நான் கண்டுபிடிச்சது அமெரிக்கா இல்ல; இந்தியாதான்!" - ஸ்பெயினைக் கடுப்பேற்றிய கொலம்பஸ்

அவரைப் பொறுத்தவரை மேற்கே ஆசியாவைத்தவிர வேறு நிலமே கிடையாது. பூமி உருண்டையாக இருப்பதால் இந்தப் பக்கம் சுற்றிக்கொண்டு போய் ஆசியாவை நாம் அடைந்துவிடலாம் என்று கணக்குப் போட்டார்.

கொலம்பஸ். நீலக்கடல் பயண வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஆளுமையாக ஐரோப்பியர்களால் மெச்சப்படுபவர். இன்றுவரை அனைத்துப் பாடத்திட்டங்களிலும் அவர்கள் மார்தட்டிக் கொள்ளும் விஷயம், `கொலம்பஸ்தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்' என்பது. அதை அவர் கண்டுபிடித்திருக்க ஏன் அதற்கு அவருடைய பெயர் வைக்கப்படவில்லை?

உண்மையைச் சொல்லப்போனால் மரணிக்கும் நாள்வரைதான் கண்டுபிடித்தது ஆசியாதான் என்றே நம்பிக்கொண்டிருந்திருக்கிறார் கொலம்பஸ். அவர் கண்டுபிடித்ததாகச் சொல்லப்பட்ட அந்தப் புதிய நிலம், ஐரோப்பியர்களுக்கு அதுவரை தெரியாமலிருந்த ஆசியா இல்லை. அதை முதலில் கண்டுபிடித்துச் சொன்ன ஓர் இத்தாலிய மாலுமியின் பெயர்தான் அமெரிக்காவுக்கு வைக்கப்பட்டுள்ளது. 1451-ம் ஆண்டு இத்தாலியிலுள்ள ஜெனோவில் பிறந்தவர் கொலம்பஸ். தன் இருபத்தைந்து வயதில் நிலவியல் வரைபடம் வரையும் வேலையைத் தொடங்கினார். எண்ணற்றவர்கள் ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டவாறு இருந்த காலகட்டம் அது. ஐரோப்பியர்கள் தங்கள் வர்த்தகத்தைப் பெருக்க முண்டியடித்துக்கொண்டு புதிய நிலங்களைத் தேடிப் பேயாய் அலைந்த காலம். போர்த்துக்கீசியர்கள் அவர் தொடங்கியபோதே அட்லான்டிக் பெருங்கடலில் சில தீவுகளைக் கண்டுபிடித்து விட்டிருந்தனர். அட்லான்டிக்கில் அவர்கள் கண்டுபிடித்த மெடைரா தீவுகளும் அஸோர்ஸ் தீவுகளும் அவர்களை முன்னிலைப் படுத்தியிருந்தது. ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரை நோக்கித் தங்கள் தேடுதல் வேட்டையை மேலும் வேகப்படுத்தியது போர்ச்சுகல்.

இவை அனைத்தையும் ஐரோப்பியர்கள் செய்தது ஒன்றைத் தேடித்தான். அந்த ஒன்றுதான் இந்தியா. ஒட்டோமன் பேரரசு கான்ஸ்டான்டினோபிள் வழியாக இந்தியாவுக்கு இருந்த நிலவழிப் பயணத்தை ஐரோப்பியர்களுக்குத் தடை செய்திருந்தது. அதோடு விட்டுவைக்காமல் செங்கடல், வடக்கு ஆப்பிரிக்கா வழியாக இருந்த பாதையிலும் ஐரோப்பியர்களுக்கு வழிவிடவில்லை. 

அமெரிக்கக் கட்டுரையாளர் வாஷிங்டன் இர்விங் என்பவரின் 1828-ம் ஆண்டு வெளியான `கிறிஸ்டோபர் கொலம்பஸின் வாழ்வும் பயணங்களும்' என்ற புத்தகத்தில் இதுபற்றிப் பேசியிருப்பார். அதில் ஐரோப்பியர்களின் `பூமி தட்டையானது' என்ற கோட்பாட்டையும் அதைவைத்து அவர்கள் போட்ட வேடிக்கையான பயணக் கணக்குகளையும் குறிப்பிட்டிருப்பார். 

கொலம்பஸ் காலத்துக்கு வெகு சமீபத்தில்தான் அந்தக் கோட்பாடு தவறானது என்று புரிந்துகொள்ளத் தொடங்கி இருந்தார்கள். அந்தப் புரிதலை வைத்து கொலம்பஸ் ஓர் பயணத் திட்டம் தயாரித்தார். மேற்கு நோக்கிப் பயணித்தால் கிழக்கே இருக்கும் ஆசியாவை அடைந்துவிடலாம் என்பது அவர் எண்ணம். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை மேற்கே ஆசியாவைத்தவிர வேறு நிலமே கிடையாது. பூமி உருண்டையாக இருப்பதால் இந்தப் பக்கம் சுற்றிக்கொண்டு போய் ஆசியாவை நாம் அடைந்துவிடலாம் என்று கணக்குப் போட்டார். அப்போது ஆய்வுப் பயணத்தில் முன்னிலையில் இருந்த போர்த்துகலிடம் தன் திட்டத்தைக் கொண்டு சென்றார் கொலம்பஸ். ஆனால், அவர்கள் அந்தத் திட்டத்தை நிராகரித்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவருக்குப் போர்த்துகலோடு பெரிய தொடர்பு எதுவுமில்லை. இரண்டாவது, அவர் ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்குமான தொலைவை குறைத்து மதிப்பிட்டிருந்தார். தன் நம்பிக்கையைத் தளரவிடாத கொலம்பஸ் ஸ்பானியர்களிடம் சென்றார். அவரது பயணத்திட்டம் அவ்வளவு முழுமையானதாகவும் இருக்கவில்லை, அதில் இரண்டு நிலப்பகுதிக்குமான தொலைவு, கடற்பயணத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகள் என்று எதுவுமே தெளிவாகப் பேசப்படவில்லை. ஆனாலும், ஸ்பானியர்கள் என்ன தைரியத்தில் இவரை நம்பினார்கள் என்ற கேள்விக்குத்தான் வரலாற்றில் விடையில்லை. அளவில்லாத செல்வத்தோடு தான் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்றார் கொலம்பஸ். ஆசியாவுடனான நேரடி வர்த்தகத் தொடர்பில் அதுவரை நினைத்துக்கூடப் பார்த்திராத அளவுக்குச் செல்வத்தைத் தன்னால் கொண்டுவர முடியுமென்று அதீத நம்பிக்கை கொண்டிருந்தார் கொலம்பஸ். அதோடு நிற்கவில்லை. பெருங்கடலின் கடற்படைத் தளபதி, இந்தியாவின் அரசப் பிரதிநிதி போன்ற பதவிகளைத்தான் திரும்பி வரும்போது தனக்கு வழங்க வேண்டுமென்று ஸ்பானிய அரசிடம் அன்புக் கட்டளை வேறு.

அவர் பயணத்தைத் தொடங்கியபின் நடந்த அனைத்துமே வரலாறு. பஹாமன் தீவுக்கூட்டத்தில் கானாஹனி என்ற தீவில் கரையேறினார். அடுத்த தொடர்ச்சியான நான்கு பயணங்களில் அந்தப் புதிய உலகத்தை அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் கொலம்பஸ் என்றுதான் வரலாறு கூறுகிறது. ஆனால், உண்மை அப்படியில்லை, அவருக்கு முன்னமே ஏற்கெனவே ஆப்பிரிக்கர்கள் அமெரிக்காவோடு தொடர்பு வைத்திருந்தனர். அது ஒருபுறம் இருக்கட்டும். முதன்முதலில் அமெரிக்காவைக் கண்ட முதல் 'ஐரோப்பியர்' கொலம்பஸ் என்பது மட்டும் உண்மை. பாஹாமாவுக்கு அடுத்ததாக கூபாவுக்குச் சென்றார். அங்கிருந்து ஹிஸ்பானியோலா. அப்படியே மத்திய அமெரிக்கா, இறுதியாக தென்னமெரிக்கா. அவர் கண்டது என்னவோ அப்போது ஐரோப்பியர்களால் பெயரிடப்படாத ஒரு புதிய நிலப்பகுதியை. ஆனால், கொலம்பஸ் அதை ஏற்க மறுத்துவிட்டார். பாவம் மனிதர், கடைசிவரை தான் கண்டுபிடித்தது ஆசியாதான் என்று பிடிவாதமாகவும் அப்பாவியாகவும் நம்பிக் கொண்டிருந்தார். அப்பாவியாகத்தான் அவர் சொன்னாரா என்பதும் சந்தேகத்துக்கு இடமாகிறது. ஒருவேளை அவர் ஸ்பானியர்கள் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட கடற்படைத் தளபதி, இந்திய வைசிராய் ஆகிய பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள அப்படி அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

கொலம்பஸின் இந்த நிலைப்பாடு பலருக்கு அவர் மேலிருந்த நம்பகத் தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியது. இதற்கிடையில் வாஸ்கோடகாமா என்ற ஒரு போர்த்துகீசிய மாலுமி இந்தியாவுக்குக் கடற்பயணம் மூலம் சென்றடைந்து, தெற்கு ஆப்பிரிக்காவின் மீண்டும் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிப் பயணித்து வந்து சேர்ந்திருந்தார். அதன்மூலம், மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி போர்த்துகல் வென்றுவிட்டது. இந்தத் தோல்வியை ஸ்பானிய அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் கொலம்பஸ் மீது கடும் கோபத்தில் இருந்தனர். அவருக்குக் கொடுத்த பட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டனர். அவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தால்கூடத் தப்பித்திருக்கலாம். இறுதிவரை தான் கண்டது இந்தியாதான் என்று அவர் அறுதியிட்டுச் சொன்னதுதான் ஸ்பானியர்களின் ஆத்திரத்துக்கு எண்ணெய் ஊற்றியது.

பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் போர்த்துகல் கொடிக்குக் கீழ் பயணித்தார் மற்றுமொரு இத்தாலிய மாலுமி. அமெரிகோ வெஸ்பூச்சி (Amerigo Vespucci) என்ற அவர் கொலம்பஸ் கண்ட புதிய உலகை நோக்கிப் பயணித்தார். அந்தப் பயணத்தின்போது அவர் எழுதிய கடிதங்கள் பின்னாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அதில், ``இந்தப் புதிய நிலப்பகுதி நிச்சயமாக ஆசியா இல்லை. இது மற்றுமோர் புதிய கண்டமாக இருக்கக்கூடும்" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கண்டமென்று குறிப்பிட்ட பிறகுதான் அது புதிய நிலமல்ல புதியதோர் உலகமென்று ஐரோப்பிய மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். மேலும் தம் மாலுமிகள் மூலமாக அவர் அனுப்பிய கடிதங்கள் அனைத்தையும் மக்கள் மிக ஆர்வமாகப் படித்தனர். அதன்மூலம் புதிய உலகத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் முயன்றனர். இறுதியில் அந்த மாலுமியின் பெயர்தான் அமெரிக்காவின் பெயராக வரலாற்றில் பொறிக்கப்பட்டது. 

அவர் அனுப்பிய கடிதங்கள் பின்னாளில், 1507-ம் ஆண்டு ஜெர்மானிய வரைபட ஓவியரான மார்ட்டின் வால்ட்சிமுல்லர் என்பவரையும் பயணிக்கத் தூண்டியது. அவர்தான் முதன்முதலில் அமெரிக்கா என்ற பெயரோடு அந்தக் கண்டங்களின் வரைபடத்தை உருவாக்கியவர். அந்த மொத்த கண்டங்களுக்கும் அவர் இந்தப் பெயரைச் சூட்டவில்லை. அவர் பெயரிட்டது என்னவோ முதலில் பிரேசிலுக்குத்தான்.

``ஐரோப்பிய, ஆசிய நிலங்கள் பெண் பெயரில் வருகின்றன. இந்த நிலத்தைக் கண்டுபிடித்த ஒரு மேதாவியின் பெயரில் இதை அழைப்பதே அவருக்குத் தரும் மரியாதை" என்று வால்ட்சிமுல்லர் தன் வரைபடக் குறிப்புகளில் குறிப்பிட்டார். ஆனால், அமெரிகோ என்று குறிப்பிடாமல் அமெரிக்கா என்று அவர் ஏன் குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை. அதேசமயம், பிரேசிலுக்கு ஏற்கெனவே போர்ச்சுகீசியர்கள் ட்ரூ கிராஸ் தீவு என்று பெயரிட்டிருந்தனர். அப்போது வால்ட்சிமுல்லர் அமெரிக்காவில் இருந்ததால் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதன்பிறகு வந்த வரைபட ஓவியர்களால் இந்தப் பெயர் ஐரோப்பா முழுவதும் கொண்டுசெல்லப் பட்டுவிட்டது. 16 ம் நூற்றாண்டின் இறுதியில் அந்த நிலப் பகுதிகளையே அவர்கள் அமெரிக்கா என்று அழைக்கத் தொடங்கியிருந்தனர்.

ஒரு நிலப்பகுதிக்குப் பெயரிடுவது என்பது ஒரு வரலாற்று அடையாளத்தைப் பதிவு செய்வதைப் போன்றது. ஐரோப்பியர்களால் தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட இந்த வரைபட ஓவிய வேலைகள் அதை நோக்கியதுதான். ஸ்பெயின் கொலம்பஸ் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டதும் அந்த ஆசையில்தான். ஒரு நிலப்பகுதிக்கு ஐரோப்பியப் பெயர்களைச் சூட்டுவதன்மூலம் அது அவர்கள் ஆளும் நிலம் என்று காட்டிக் கொண்டனர். அது காலனிய ஆதிக்கத்தின் ஆரம்பம். 

``இது என் காலனி. இதற்கு நான் பெயரிட்டுள்ளேன்" என்று மார்தட்டிக் கொள்வதற்கான தொடக்கம்.

பின் செல்ல