Published:Updated:

ப்ரோ கபடி - குஜராத்தை முட்டித் தள்ளி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு புல்ஸ்!

ப்ரோ கபடி - குஜராத்தை முட்டித் தள்ளி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு புல்ஸ்!
ப்ரோ கபடி - குஜராத்தை முட்டித் தள்ளி சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு புல்ஸ்!

ப்ரோ கபடியின் இறுதிப் போட்டியில் பெங்களூரு - குஜராத் அணிகள் மோதின. இதில் பெங்களூரு புல்ஸ் அணி 38-33 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது. 

ஆறாவது சீசன் ப்ரோ கபடி லீக் க்ளைமாக்ஸில் பெங்களூரு புல்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது. ஏற்கெனவே முதல் தகுதிச் சுற்றில் குஜராத்தை வென்று கம்பீரமாக ஃபைனலுக்குள் அடியெடுத்து வைத்தது பெங்களூரு புல்ஸ். குஜராத் அணி முதல் தகுதி சுற்றில் தோற்றதால், 2-வது தகுதிச் சுற்றில் யூ.பி யோதா அணியை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 

இறுதிப் போட்டியில், டாஸ் வென்று தனது பக்கத்தைத் தேர்ந்தெடுத்தது பெங்களூரு. முதல் புள்ளியை பெங்களூரு புல்ஸ் அணியைச் சேர்ந்த பவன் ஷெரவாத் எடுக்க, உடனடியாக குஜராத் அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் உடனடியாக பாயிண்ட் எடுத்துக் கொடுத்தார். ஆரம்பத்தில் இரு அணிகளும் மாறி புள்ளிகளைப் பெற்று சம நிலையிலேயே இருந்தன. முதல்பாதியில் பெங்களூரு அணி ஆல் அவுட் ஆக, குஜராத் அணி 16-9 என முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், இரண்டாவது பாதியில் பவன் ஷெரவாத் ரெய்டு மூலம் அடுத்தடுத்து இரண்டு முறை மூன்று புள்ளிகள் எடுத்துக்கொடுக்க, பெங்களூரு புல்ஸின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன.

இரண்டாவது பாதியில் குஜராத் அணி இரண்டு முறை ஆல் அவுட் ஆகப் பெங்களூரு அணியின் பக்கம் பார்வை திரும்பியது. ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் உள்ள நிலையில் பவன் ஷெரவாத் மீண்டும் இரண்டு பாயிண்ட்கள் எடுத்து, பெங்களூரு அணிக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளார். 

இறுதிப்போட்டியில் பவன் ஷெரவாத் 25 முறை ரெய்டு சென்று 20 ரெய்டு பாயிண்ட்களையும், இரண்டு போனஸ் புள்ளிகள் பெற்றதோடு, குஜராத்தின் கனவை கலைத்து கோப்பையை பெற்றுக்கொடுத்திருக்கிறார். பரிசுத்தொகையாக மூன்று கோடி ரூபாயைப் பெங்களூரு அணி பெற்றுள்ளது. குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிக்கு 1.80 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.