Published:Updated:

எமதர்மன் சந்நிதியில் பரிகார பூஜை செய்த தம்பிதுரை!

எமதர்மன் சந்நிதியில் பரிகார பூஜை செய்த தம்பிதுரை!
எமதர்மன் சந்நிதியில் பரிகார பூஜை செய்த தம்பிதுரை!

காசிக்கு நிகரானதும், எமதர்மனுக்கு தனி சந்நிதி கொண்டதுமான, ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ளது. இங்கு அ.தி.மு.க. எம்.பி.யும், நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று குடும்பத்துடன் வந்து வழிபாடு செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திடீரென தம்பிதுரை  மூன்று கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்து, தரிசனம் செய்தது குறித்து தம்பிதுரைக்கு நெருக்கமான ஆன்மீக வட்டாரத்தில் விசாரித்தோம். சமீபகாலமாக தம்பிதுரை பி.ஜே.பி.க்கு எதிராக கருத்துகள் சொல்வதால் மத்தியிலும், பவர் பாலிடிக்ஸ் பிரச்சனையால்  உள்கட்சியிலும், மறைமுக எதிர்ப்புகள் நிறைய உருவாகியுள்ளன. மேலும் பிதுர் தோஷத்தால், மகளின் திருமணம் பல்வேறு தடைகளால் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் நிவர்த்தி செய்யும் பொருட்டு `வார சூனிய பரிகார பூஜையை' ஒரே நாளில் 3 கோயில்களில் செய்திட வேண்டும் என தம்பிதுரையின் ஆன்மீக ஆலோசகர் ,திருச்சி பாலு சிவாச்சாரியார் ஆலோசனை கூறியிருக்கிறார்.

அதன்படி இன்று காலை 7 மணி அளவில் ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் ஆலயத்திற்கு தம்பிதுரை மற்றும் உறவினர் குடும்பத்தினர் 6 பேர் வந்தனர். இலுப்பை எண்ணெயில் தாமரை மலரில் இருந்து தயாரிக்கப்படும் தாமரை நூல் திரியால் தீபமேற்றி வார சூனிய பரிகார பூஜையை செய்தனர்.அதன்பின்  சுவாமி, அம்பாள், எமதர்மன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று மூவருக்கும் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். சுயம்பு மூர்த்தியான ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு எமதர்மனே வாகனமாக காட்சியளிப்பது இங்குதான். எமதர்மன் தனி சந்நிதி கொண்டு அருளாசி செய்யும் ஒரே தலமும் இதுதான்.

எனவே, சத்குரு நிவர்த்தி, காரிய தடை நிவர்த்தி, பிதுர் தோஷ நிவர்த்தி, திருமண தடை நிவர்த்தி, என அனைத்திற்கும் பரிகார தலமாகும். இங்கு பூஜை செய்தபின், இதே நாளில் சிதலபதி, ஆதி விநாயகர் கோயிலுக்கும், திருமெய்ச்சூர் லலிதாம்பிகை கோயிலுக்கும் சென்று இதே பரிகார பூஜை செய்து வணங்க வேண்டும். அதன்படி  இன்று தம்பிதுரை குடும்பத்தினர் பயபக்தியோடு மூன்று கோயில்களிலும் வழிபாடு செய்துள்ளனர்" என்றார்கள்.