Published:Updated:

ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!
ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!

ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!

பிரீமியம் ஸ்டோரி

ன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ஒகி புயல், விட்டுச்சென்ற வேதனைகள், வலிகள், துயரங்களைச் சொல்லில் அடக்க முடியாது. ஒகி புயல் 2017-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி நள்ளிரவில் ஆரம்பித்து, நவம்பர் 30-ம் தேதி மதியம் கரையைக் கடந்த, அந்தச் சில மணி நேரங்களில், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை உருக்குலைந்துபோனது. ஒகி புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற 162 பேர் வீடு திரும்பவில்லை. அவர்களில்,  24 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. மீதி நபர்களின் உடல்கள் கிடைக்கவில்லை. 

“அண்ணன், அப்பா கிறிஸ்டோபர், என் புருசன் மில்டன் என 11 பேர் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில இருந்து மீன்பிடிக்கப் போனாங்க. யாருமே திரும்ப வரல. எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. ‘எங்ககூடப் படிக்கிற எல்லாரோட அப்பாவும் வீட்டுல இருக்காங்க, நம்ம அப்பா எங்கம்மா’னு பிள்ளைங்க கேட்கும்போது தினமும் அழுகுறேன். பிள்ளைங்க மனசு வாடிடக் கூடாதுன்னு, அப்பா வெளிநாட்டுல வேலைக்குப் போயிருக்காருன்னு சொல்றேன்” என விம்முகிறார், சின்னத்துறையைச் சேர்ந்த ஷர்மிளா.

ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!

சின்னத்துறையைச் சேர்ந்த ரம்மியாஸ்-செல்வராணி தம்பதியருக்கு ரம்மியா, ரம்ஷா, ரெபிஷா என மூன்று மகள்கள், ஆன்றோ ஜெயின் என்ற மகன் இருந்தனர். துபாயில் தங்கி மீன் பிடித் தொழில் செய்துவந்த ரம்மியாஸின் மகன் ஆன்றோ ஜெயின், ரம்மியாவின் கணவர் ஆன்றணி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். 29-ம் தேதி மதியம் வீடு திரும்பவேண்டியவர்கள் வரவே இல்லை. ரம்மியாஸ், ரம்ஷாவின் கணவர் இருவரும் ஏற்கெனவே, கொச்சி கடல் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கப்பல் மோதியதில் இருவரும் இறந்துபோனார்கள். இந்த நிலையில், மிச்சம் இருந்த ஆண்களும் ஒகி புயலுக்குப் பலியாகி உள்ளனர். நம்மிடம் பேசிய ரம்மியா, “குடும்பத்தில் எல்லா ஆண்களையும் கடலுக்குக் காவு கொடுத்துவிட்டோம். எனக்கு ரெண்டு மகன்கள், ஒரு மகள். ஒகி புயலில் கணவன் இறந்தபிறகு எனது நான்கு வயது மகள் ரெஃப்யாவுக்கு பிளட் கேன்சர் இருப்பது தெரிந்தது. அவளை அருகில் இருந்து கவனிக்க வேண்டும் என்பதால், கணவன் இறந்ததற்காகக் கருணை அடிப்படையில் அரசு கொடுத்த அங்கன்வாடி வேலைக்குகூடப் போகமுடிய வில்லை. சில நேரங்களில் நான் ஏன் உயிரோடு இருக்கணும்னு தோணும். குழந்தைகளுக்காக நடைப்பிணமா வாழ்ந்துகிட்டிருக்கேன்” என்று மகளை மடியில் போட்டுத் தலையைத் தடவிக்கொடுத்தார்.

ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!

“எனக்க மோன், லிபின் 12-ம் கிளாஸ் படிச்சிட்டு கப்பல்ல இஞ்சினியராகணும்னு, திருவனந்தபுரம் பாலிடெக்னிக்ல சேர்ந்தான். ‘ஃபீஸ் கட்டப் பணம் கிடைக்குமே’னு மீன்பிடிக்கப் போனான். கடல் அவன விழுங்கிப்போட்டுது. அவனுக்காக அரசு கொடுத்த நிவாரணப் பணத்துல வீடு கட்டியிருக்கோம். வீடா மாறி எம்புள்ள எங்கக் குடும்பத்த பாதுகாக்கிறான்” என்று அழுகிறார்கள் ,தூத்தூரைச் சேர்ந்த கிளாரன்ஸ் - பியாட்ரஸ் தம்பதியர்.

கணவர் ராபி மற்றும் டாரி, டானி என்ற இரட்டை மகன்களின் புகைப்படங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார், ஸ்டெல்லா. “மூணுபேரும் கடல்ல கரைஞ்சிட்டாங்க. வேலை இல்லாத நாள்களில டானி கருணை இல்லத்துக்கு அடிக்கடி போவான். ஒகியில இறந்ததும் கருணை இல்லத்தில் இருந்து ஒரு சிஸ்டர் வந்து, ‘உங்க டானி மீன்பிடிக்கப் போறதுக்கு முன்னாடி கருணை இல்லத்தில் கஷ்டத்தில இருக்கிற பிள்ளைகளுக்குப் படிப்புச் செலவுக்காக 10,000 ரூபாய் கொடுத்திட்டுப் போனார். இப்ப நீங்க கஷ்டத்துல இருக்கிறீங்க, அதைத் திருப்பி வாங்கிக்கோங்க’ என்றார். மகன் எதுக்காகக் கொடுத்தானோ, அதுக்காகவே பயன்படுத்துங்க’னு சொல்லிட்டோம். மிச்சமிருக்கிற என் ரெண்டு பிள்ளைங்க புயலுக்குப் பயந்து கடலுக்கு மீன்பிடிக்கப் போகவே இல்லை” என விம்மினார்.

ஓராண்டு ஆகியும் ஓயாத ஒகி புயல் சோகம்!

“ஒகி புயலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 204 மீனவர்கள் காணாமல்போனார்கள். 100-க்கும் அதிகமான வள்ளங்கள் காணாமல்போய்விட்டன. புயலில் உயிரிழந்தோரின் உறவினர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை கொடுத்தனர். இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்தனர். இதுவெல்லாம் போதாது. பாதுகாப்பாக மீன்பிடிப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு படகுக்கும் ஒரு சேட்டிலைட் போன், ரேடியோ டெலிபோன் வழங்கவேண்டும். குமரி மாவட்டத்தில் இருந்து ஆண்டுதோறும், 30 மீனவர்கள் காணாமல்போகிறார்கள். எனவே, சக்திவாய்ந்த தொலைத்தொடர்பு மையம் அமைக்கவேண்டும். குமரியில் ஹெலிபேடு அமைத்து நிரந்தரமாக ஒரு மீட்பு ஹெலிகாப்டர் நிறுத்தவேண்டும். ஆபத்துக் காலத்தில் மீனவர்களை மீட்க அதிவேக மீட்புப்படகு வேண்டும். மீனவர்களின் பாதுகாப்புக்காகத் தனி சேட்டிலைட் ஏவ வேண்டும்” எனக் கோரிக்கை களை அடுக்கினார், தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில்.

- ஆர்.சிந்து, படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு