Published:Updated:

1.57 லட்சம் கோடி ரூபாயை பெர்முடாவுக்கு மாற்றிய கூகுள்... எதற்காக? #DutchSandwich

ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அரசு விதிக்கும் அதிகப்படியான வரியைத் தவிர்ப்பதற்காக, தங்களுடைய வருமானத்தை வெவ்வேறு வழிகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பிவருகின்றன அமெரிக்க நிறுவனங்கள். இது எப்படி நடைபெறுகிறது என்பதே மிகவும் சுவாரஸ்யமானது.

1.57 லட்சம் கோடி ரூபாயை பெர்முடாவுக்கு மாற்றிய கூகுள்... எதற்காக? #DutchSandwich
1.57 லட்சம் கோடி ரூபாயை பெர்முடாவுக்கு மாற்றிய கூகுள்... எதற்காக? #DutchSandwich

ரி ஏய்ப்பு; வரி தவிர்ப்பு (அ) சேமிப்பு... இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் மிகவும் குறைவு. முதலாவது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் வருமானத்தைக் குறைத்துக் காட்டுவது, வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்குவது போன்றவை. இரண்டாவது, சட்டம் அனுமதிக்கும் வழிகளில் நம்முடைய வருமானத்தைக் கையாள்வது. கடன்கள், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்கள், அரசின் வருமானவரி விலக்கு அம்சங்கள் போன்றவை. மேலே பார்த்த இரண்டு விஷயங்களும் தனிநபர்களுக்கு மட்டுமல்ல; பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் உண்டு. அப்படி அமெரிக்க நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் அரசுக்குச் செலுத்தவேண்டிய அதிகப்படியான கார்ப்பரேட் வரியிலிருந்து தப்பிப்பதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றன. இதில் மிகவும் பிரபலமான ஒன்று, `Double irish and Dutch sandwitch'

2016-ம் ஆண்டு கூகுள் இப்படி வரியிலிருந்து தப்பிப்பதற்காக சுமார் 19.2 பில்லியன் டாலர் தொகையை பெர்முடாவுக்குக் கைமாற்றியது. இதேபோல கடந்த 2017-ல் மொத்தம் 22.7 பில்லியன் டாலர் தொகையை பெர்முடாவுக்கு மாற்றியிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 1.57 லட்சம் கோடி. எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு கூகுள் இவ்வளவு பெரிய தொகையை பெர்முடாவுக்கு மாற்றவேண்டும்? அமெரிக்காவுக்கும், பெர்முடாவுக்கும் என்ன வித்தியாசம்? இந்த பணப்பரிமாற்றம் எப்படி நடக்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியவேண்டுமென்றால் BEPS (Base erosion and profit shifting) குறித்து முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். முதலிலேயே நாம் பார்த்ததுபோல வரி ஏய்ப்புக்கும், வரி சேமிப்புக்கும் இடையேயான வித்தியாசம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட மிகப்பெரும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்துமே இந்த BEPS-ஐப் பயன்படுத்தி கார்ப்பரேட் வரியிலிருந்து தப்பிக்கின்றன. இதனால் அமெரிக்க அரசுக்குத்தான் நஷ்டம். ஆனால், அமெரிக்க அரசே நினைத்தாலும் இந்நிறுவனங்கள் இப்படிச் செய்வதற்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கமுடியாது. காரணம், இது முழுக்க முழுக்கச் சட்டபூர்வமானது. சரி... BEPS என்றால் என்ன?

1.57 லட்சம் கோடி ரூபாயை பெர்முடாவுக்கு மாற்றிய கூகுள்... எதற்காக? #DutchSandwich

கூகுள், ஆப்பிள் போன்ற பெருநிறுவனங்கள் அனைத்தும் ஏதோ ஒரு நாட்டிலிருந்து மட்டும் இயங்குபவை கிடையாது. உலகெங்கும் அவற்றுக்குக் கிளைகள் உண்டு. இந்நிறுவனங்கள் எங்கெல்லாம் தங்கள் கிளைகளை வைத்திருக்கின்றனவோ, அங்கெல்லாம் அந்தந்த நாட்டின் விதிகளுக்கேற்ப வரிகளைச் செலுத்தவேண்டும். அப்படிப் பார்க்கையில் ஒரு நாட்டில் வரி அதிகமிருக்கும்; ஒரு நாட்டில் குறைவாக இருக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்கா கொண்டிருந்த `Worldwide Tax system' என்றால் ஒரு அமெரிக்க நிறுவனம் உலகம் முழுவதுமிருந்து சம்பாதிக்கும் மொத்த வருமானத்துக்கும் அமெரிக்காவில் வரி கட்டவேண்டும். இது நிறுவனத்திற்குக் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும். இதற்காக இந்நிறுவனங்கள் கையாளும் வரி தவிர்ப்பு முறைகள்தான் இந்த BEPS. தற்போது கூகுள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் BEPS முறைக்குப் பெயர் Double irish and Dutch sandwitch. இதேபோல மைக்ரோசாஃப்ட் பயன்படுத்தும் முறை Single Malt. ஆப்பிள் 2015-ல் பயன்படுத்தியது CAIA (Capital Allowances for Intangible Assets). இவையனைத்தும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சட்டத்திற்குட்பட்டவை. காரணம், அந்தந்த நாட்டு சட்டங்களில் இருக்கும் ஓட்டைகள்தாம். 

எப்படி நடக்கிறது Double irish and Dutch sandwitch பரிமாற்றம்?

கூகுள் வைத்து ஓர் உதாரணம் பார்ப்போம். கூகுள் முழுக்க முழுக்க அமெரிக்காவை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கினால், அந்நாட்டு அரசுக்கு அதிகப்படியான வரி செலுத்தவேண்டும். தற்போது இந்த வருமானத்தைக் குறைக்க வேண்டுமென்றால், அதைப் பிரிக்கவேண்டும். இதற்காக மொத்தம் மூன்று நிறுவனங்கள் கூகுளுக்கு தேவை. இரண்டு நிறுவனங்கள் அயர்லாந்தில்; ஒன்று நெதர்லாந்தில். இந்த இரண்டு நாடுகளைத் தேர்வு செய்யக்காரணம், இந்த இரண்டு நாட்டிலுமே வரி மிகமிகக்குறைவு. எனவே இந்த இரண்டு நாட்டையும் வைத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனிலிருந்து வரும் மொத்த வருமானத்தையும் அயர்லாந்துக்கு மாற்றிவிட முடியும். இதேபோல ஆசியாவின் வருமானத்துக்கு சிங்கப்பூர் நிறுவனம். இப்போது அயர்லாந்து மற்றும் நெதர்லாந்தை மட்டும் பார்ப்போம்.

1.57 லட்சம் கோடி ரூபாயை பெர்முடாவுக்கு மாற்றிய கூகுள்... எதற்காக? #DutchSandwich

சர்ச் இன்ஜின் விளம்பரங்கள் மூலம் கூகுள் பணம் சம்பாதிக்கிறது என வைத்துக்கொள்வோம். இப்போது இந்த சர்ச் இன்ஜின் தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை கூகுளிடமே இருக்கும். இது அறிவுசார் சொத்துரிமையின் கீழ் வரும். இப்போது கூகுள் அதனுடைய துணைநிறுவனம் ஒன்றை அயர்லாந்தில் தொடங்கி அந்நிறுவனத்துக்கு இந்தக் காப்புரிமையை விற்றுவிடும். இந்த முதல் நிறுவனம் அயர்லாந்தில் தொடங்கப்பட்டாலும், இதன் இருப்பிடம் பெர்முடாவில்தான் இருக்கும். ஒரு அயர்லாந்து நிறுவனம் இப்படி, வேறொரு நாட்டிலிருந்து கொண்டு இயங்கவேண்டுமானால், அந்நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனம் அயர்லாந்திலேயே இருக்கவேண்டியது அவசியம். இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, சொந்தமாக அயர்லாந்தில் கூகுள் இன்னொரு நிறுவனத்தைத் தொடங்கும். இது இரண்டாவது நிறுவனம். இப்போது முதல் நிறுவனத்திடம் இருக்கும் கூகுளின் காப்புரிமைகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இந்த நிறுவனத்துக்கு தரப்படும். இப்போது இரண்டாவது நிறுவனம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விளம்பர சேவையை வழங்கும். இதன்மூலம் வரும் வருமானம் மொத்தமும் காப்புரிமை வைத்திருக்கும் முதல் நிறுவனத்திற்கே என்பதால் வருமானம் அங்கே சென்றுவிடும். இதுவரைக்கும் எந்தவொரு வரியும் இல்லை. இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான காப்புரிமை தொடர்பான பணப்பரிமாற்றத்துக்கு அயர்லாந்து சிறிய அளவில் வரி விதிக்க வாய்ப்புண்டு. இதையும் தவிர்க்க உதவுவதுதான் நெதர்லாந்து. இப்போது, இரண்டாவது நிறுவனம் சம்பாதிக்கும் பணம் மொத்தமும் நெதர்லாந்து நிறுவனத்திற்கு அனுப்பப்படும். ஐரோப்பிய யூனியனின் விதிப்படி, காப்புரிமை தொடர்பான வருமானத்திற்கோ, அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான பரிமாற்றத்திற்கோ வரி இல்லை. (இப்படி இரண்டு அயர்லாந்து நிறுவனங்களுக்கு இடையேயான தூதுவராக நெதர்லாந்து பயன்படுவதால்தான் இதற்கு டச் சாண்ட்விச் எனப்பெயர்) இப்போது நெதர்லாந்திலிருந்து இந்தப் பணம் வரிகளே இல்லாத மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும். இதுபோன்ற நாடுகளுக்கு `Tax havens' எனப்பெயர். 

பனாமா, கேமன் தீவுகள், பஹாமாஸ்,கோஸ்டாரிகா எனப் பல நாடுகள் இப்படி வெளிநாட்டு நிறுவனங்களின் வரிச்சேமிப்புக்கு உதவுகின்றன. இங்கே கூகுள் சர்ச் இன்ஜின் காப்புரிமை என்பதை ஐபோன் காப்புரிமை என மாற்றினால், இது ஆப்பிளுக்கும் பொருந்தும். உலகளவில் பல நாட்டு நிறுவனங்களும் இந்த முறைகளைக் கையாண்டாலும் அதிகளவில் இதைச் செய்வது அமெரிக்காவின் மென்பொருள் நிறுவனங்களே. அதேபோல உலகளவில் அதிகம் இப்படிப் பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்காவுக்கே முதலிடம். கூகுள் இப்படி வரி தவிர்ப்பிற்காக Google Netherlands Holdings BV, Google Ireland Holdings ஆகிய துணைநிறுவனங்களை நடத்திவருகிறது.

1.57 லட்சம் கோடி ரூபாயை பெர்முடாவுக்கு மாற்றிய கூகுள்... எதற்காக? #DutchSandwich

இதையெல்லாம் தடுக்க முடியாதா?

இதனை முழுமையாகத் தடுக்காவிட்டாலும், நாட்டுக்கு வரும் வரியைக் கொஞ்சமேனும் அதிகப்படுத்தும் நோக்கில் பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குத் தனியாக வரி விதிக்கின்றன. இது இந்நிறுவனங்களின் சேவைகளுக்கு விதிக்கப்படும் வரியாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் இரண்டும் என்ன செய்கின்றன?

ஒவ்வோர் ஆண்டும், அமெரிக்க அரசுக்கு வரவேண்டிய வருவாயில் பெரும் சதவிகிதம் இப்படிச் சென்றுவிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி அயர்லாந்திடம் நிறைய முறை அமெரிக்கா முறையிட்டது. ஆனால், அயர்லாந்து செவிமடுத்தது என்னவோ ஐரோப்பிய யூனியனின் கோரிக்கைக்குத்தான். கடந்த 2014-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் கொடுத்த அழுத்தத்தால் இனிமேல் புதிதாக அயர்லாந்தில் தொடங்கப்படும் அனைத்து நிறுவனங்களும், அயர்லாந்திலிருந்து மட்டுமே இயங்கவேண்டும் எனப் புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தது அந்நாட்டு அரசு. இந்தத் திடீர் முடிவு ஏற்கெனவே அயர்லாந்துடன் உறவுகொண்டுள்ள நிறுவனங்களைப் பாதித்துவிடக் கூடாது என்பதால் ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 2020-ம் ஆண்டுவரை அவகாசம் அளித்துள்ளது. அதன்பின்பு இந்நிறுவனங்கள் Double irish and Dutch sandwitch முறையைக் கையாளமுடியாது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் `இந்த முறையை மட்டும்தான் கையாள முடியாது.'